PUBLISHED ON : செப் 27, 2014

என் குண்டான நண்பருக்கு லேசான சளி இருந்தது. ஒரே நாளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் பொருத்த வேண்டியதாயிற்று. குண்டாக இருந்ததால் தான் இப்பிரச்னை என, டாக்டர் கூறியது சரியா?
இப்பிரச்னையை, 'ஒபிசிட்டி ஹைபர்வென்டிலேஷன் சிண்ட்ரோம்' என்பர். உயரத்திற்கு ஏற்ற சரியான எடையுடன் உள்ள ஒருவருடன் ஒப்பிடும்போது, மிக குண்டாக இருப்பவர்களின் மூச்சு, சாதாரண சமயங்களிலே சீராக இருக்காது.
அப்படி இருக்கும் போது, அவர்களுக்கு லேசான நோய் தொற்று என்றால் கூட, செயற்கை சுவாசம் தேவைப்படுவது இயல்பே. உடல் பருமனாக இருப்பதால் பலவகையான பிரச்னைகளும் உண்டாகலாம். அதில், இந்தப் பிரச்னையும் ஒன்று. மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும் போது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். எனவே, உங்கள் நண்பர் படிப்படியாக உடல் எடையை குறைப்பதே நல்லது.
என் மாமாவுக்கு மூச்சுக்குழாயில் புற்றுநோய் இருப்பதால், மூச்சுவிட மிகவும் சிரமப்படுகிறார். இதற்கு ஸ்டென்ட் வைத்தால் இப்பிரச்னை குறையும் என டாக்டர் கூறுகிறார். மூச்சுக்குழாயில் ஸ்டென்ட் செய்ய இயலுமா?
தற்போதைய நவீன மருத்துவ சிகிச்சை முறைகளில் இதுவும் ஒன்று. உணவுக்குழாய், மூச்சுக்குழாய் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படும்போதும், ரசாயன பொருட்களை குடிக்கும் போதும் தழும்புகள் உண்டாகலாம். அதுபோன்ற சமயங்களில் மூச்சுக்குழாய் வழியே காற்று சரியாக செல்ல முடியாது.
உணவுக்குழாய் வழியே உணவு செல்வதும் கடினம். அதுபோன்ற சமயங்களில், ஒரு சின்ன டியூப் பொருத்தும்போது மூச்சுவிடுவதில் உள்ள சிரமம் குறையும். மூச்சுக்குழாய் வழியே காற்று சுலபமாக சென்று வர உதவியாக இருக்கும். இம்முறை இதுபோன்ற பிரச்னை
களுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.
சளி பரிசோதனை மூலம் நுரையீரல் புற்றுநோயை கண்டறிய முடியுமா?
சளி பரிசோதனையின் மூலம் நுரையீரலில் உள்ள பல கிருமிகளை கண்டறிய முடியும். அதேபோல தற்போது புற்றுநோயை கண்டறியவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இது மிக குறைந்த அளவே சாத்தியமானது.
அத்துடன் புற்றுநோய் கட்டி அளவில் பெரியதாகவும், நுரையீரலின் மேல்பகுதியில் இருந்தால் மட்டுமே சளி பரிசோதனையில் கண்டுபிடிக்கலாம். சளியை ஆறு முறை பரிசோதனை செய்வதன் மூலம், இதை கண்டறிய முடியும்.
டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை.

