'ஹெபடடீஸ் - பி' பாதிப்பா? கவனமா இருங்க...! கல்லீரல் புற்றுநோயாக மாறலாம்
'ஹெபடடீஸ் - பி' பாதிப்பா? கவனமா இருங்க...! கல்லீரல் புற்றுநோயாக மாறலாம்
PUBLISHED ON : அக் 12, 2014

'ஹெபடடீஸ் - பி' பாதிப்பை, ஆரம்பத்தில் கண்டறிந்து, சிகிச்சை அளித்தால் குணப்படுத்தலாம்; அலட்சியம் காட்டினால், கல்லீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. 80 சதவீத கல்லீரல் புற்றுநோய்க்கு, 'ஹெபடடீஸ் -பி' வைரசே காரணம். பச்சிலை மருத்துவம் என்பது மூடநம்பிக்கை' என்கிறார், சென்னை, அரசு பொது மருத்துவமனை, கல்லீரல் மருத்துவத் துறை தலைவர் நாராயணசாமி.
இதுதொடர்பான கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள்:
1'ஹெபடடீஸ் - பி' என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
கல்லீரல் சார்ந்த உயிர் கொல்லி வைரஸ் தான் ஹெபடடீஸ்-பி. மஞ்சள் காமாலை என, கூறப்படுகிறது. எச்.ஐ.வி., கிருமியை விட, 100 சதவீதம் தொற்றக்கூடியது.
இந்தியாவில், 2 முதல் 4 சதவீதம் பேருக்கு, இந்த பாதிப்பு உள்ளது. பசியின்மை, வயிற்று வலி, வாந்தி - குமட்டல் மற்றும் கண் மஞ்சள் நிறமாக மாறுதல் இதன் அறிகுறிகள். கிருமிகள் சிறு வயதில் பாதித்தால், எந்த அறிகுறியும் தெரியாது; பெரியவர்களுக்கு
மட்டுமே இந்த பாதிப்பு தெரியும்.
2 இது எந்த வகையில் பரவும்? தடுக்க என்ன வழி?
எச்.ஐ.வி.,யை விட வேகமாக பரவும் என்றதும், பயந்து விடக்கூடாது. இது, கிருமி பாதிப்புள்ள ஒருவருடன், உடல் உறவு கொள்வதால் பரவும்; அவர்களுடன் பழகுவதாலோ, கட்டி அணைப்பதாலோ பரவாது. கருவுற்ற பெண்களுக்கு இருந்தால், குழந்தைகளுக்கு பரவும். அதனால் தான், கருவுற்றதும், இதற்கான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இருந்தால், அதற்கான தடுப்பு மருந்துகள் கொடுத்து, பரவாமல் தடுக்கப்படுகிறது.சுத்தம் செய்யப்படாத ஊசி (சிரிஞ்சி), அறுவை சிகிச்சை கருவிகள், கிருமி நீக்காத ரத்தம் ஏற்றுவதாலும், இந்த வகை பாதிப்பு வர வாய்ப்புள்ளது.
3 உடலில் கல்லீரலின் வேலை என்ன? ஹெபடடீஸ் - பி என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
நாம் சாப்பிடும் உணவை சேமித்து வைத்து, அரைத்து, அதில் இருக்கும் 'எனர்ஜி'யை எடுத்து, ரத்தத்தில் சேர்ப்பதே, நம் உடலில் உள்ள கல்லீரலின் வேலை. எனர்ஜியை உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலையாக செயல்பட்டு வருகிறது. 'ஹெபடடீஸ் - பி' பாதிப்பால், கல்லீரல் சுருங்கி, செயல்பாடு குறைவதால், உடலுக்கு தேவையான, எனர்ஜி கிடைக்காத நிலை
ஏற்படுகிறது. அப்புறம் எப்படி, இயங்க முடியும்?
4 மூன்று வகையான பாதிப்பு உள்ளதாக கூறுகிறார்களே? 'கோமா' நிலை ஏற்படும் என்பது உண்மையா?
'ஹெபடடீஸ் - பி' கிருமிகளில், 99 சதவீதம் நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியால், செயல் இழந்து விடும். மீதமுள்ள, ஐந்து சதவீத கிருமிகள் உடலில் தேங்குவதால் தான் பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறைந்த கால பாதிப்பு, நீண்ட கால பாதிப்பு, மூன்றாம் நிலை என, மூன்று விதமான பாதிப்புகள் உள்ளன.குறைந்த கால பாதிப்பு, சில நாட்களில் சரியாகி விடும். நீண்ட கால பாதிப்பது என்பது, சிறு வயதிலேயே ஏற்பட்டு விடும். அதன் அறிகுறிகள் தெரியாது; வயதான பின் வெளிப்படுத்தும். கல்லீரல் சுருங்கும்; பின், நீர் கோர்த்துக் கொண்டு பாதிப்பை ஏற்படுத்தும்; தாக்கத்தை உணர்ந்து, உரிய சிகிச்சைகள் அளிக்க வேண்டும். அலட்சியம் காட்டினால், கல்லீரல் புற்றுநோயாகவும் மாற வாய்ப்புள்ளது; 80 சதவீத கல்லீரல் புற்றுநோய்க்கு,
'ஹெபடடீஸ்-பி' தான் காரணம். 'கோமா' நிலைக்கும் நோயாளிகள் செல்ல நேரிடும். மூன்றாம் நிலையில், தாக்கம் வந்த ஒரு வாரத்தில், இறப்பை ஏற்படுத்தி விடும். இந்த நிலை, 0.1
சதவீதம் என்ற அளவில் தான் உள்ளது.
5 இதற்கான சிகிச்சை முறைகள் என்ன? வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவையா?
கிருமிகள், ஒரு லட்சம் என்ற அளவில் இருந்தால் சிகிச்சை தேவை. ரத்த பரிசோதனையில் இதை தெரிந்து கொள்ளலாம். குறைந்த அளவில் இருந்தால், உடல் எதிர்ப்பு சக்தியே வெளியேற்றிவிடும். பாதிப்பின் தன்மைக்கேற்ப, மாத்திரை, ஊசி போடலாம். மாத்திரை என்றால், நீண்ட நாட்கள் சாப்பிட வேண்டி வரும்.
ஊசி என்றால், வாரத்திற்கு ஒன்று என, 48 வாரங்கள் போட வேண்டும்.ஊசியால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பக்க விளைவுகளை அறிந்து, மருந்தின் அளவை குறைப்பதோடு, வேறு விதமான ஊசி மாற்ற வேண்டும்.கண் பரிசோதனை, தைராய்டு சோதனை, சிறுநீரக பரிசோதனைகள் எல்லாம் செய்து பார்த்து, அதன்பின் மன நல மருத்துவரின் ஆலோசனையும் கேட்ட பிறகே சிகிச்சை துவங்கும்.
6 முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? தொடர்ந்து ஊசி போட வேண்டுமா?
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'ஹெபடடீஸ்-பி' தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக போடப்படுகிறது. ஒரு முறை ஊசி போட்டுக் கொண்டால், 20 ஆண்டுகளுக்கு எந்த பாதிப்பும் வராது.
குழந்தைகளுக்கு பிறந்த உடனேயே தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு ஊசியோடு நிறுத்தக்கூடாது. இரண்டாம் முறையாக ஒரு மாதத்திலும், மூன்றாம் முறையாக, ஆறாவது மாதத்திலும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.
7 நாட்டு வைத்தியமே சரியான தீர்வு என, கிராமங்களின் இன்றும் நம்பப்படுகிறதே?
கிராமங்களில், மஞ்சள் காமாலை பாதிப்பு வந்தால், கையில் சூடு போடுவது, பச்சிலை வைத்து கட்டுவது, பட்டினி போட்டு தனிமைப்படுத்துவது என்ற நிலை உள்ளது. இதெல்லாம், மூட நம்பிக்கை. நாட்டு வைத்தியத்தில், பச்சிலைகளை அரைத்து தரும் நடைமுறை உள்ளது. இது சரியான நடைமுறை அல்ல; தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தி விடும்.
8 பொதுவாக கல்லீரல் பாதிப்பில் இருந்து தப்ப என்ன வழி?
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமனாலும் கல்லீரல் பாதிப்பு வரும். கல்லீரலை சுற்றி, கொழுப்பு அடைத்துக் கொள்வதும் பாதிப்பை ஏற்படுத்தும் என, கண்டறியப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி, உணவு முறைகளில் மாற்றம், மன பயிற்சி முக்கியம்.பழம், காய்கறிகளுடன் ஆரோக்கியமான உணவு உட்கொள்தல், அசைவ உணவுகளை தவிர்த்தல், தினமும்
உடற்பயிற்சி செய்வதும் பாதிப்பின் பிடியில் இருந்து தப்ப வழிவகுக்கும்.
- டாக்டர்.கே.நாராயணசாமி,
துறைத்தலைவர், கல்லீரல் மருத்துவத்துறை,
சென்னை ராஜிவ்காந்தி
அரசு பொது மருத்துவமனை.

