PUBLISHED ON : ஜூன் 16, 2013
* ம. சங்கீதா, மதுரை: என் கணவருக்கு ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் இல்லை. காலை டிபன் சாப்பிடுகையில், தினமும் தோசையில் நிறைய எண்ணெய் ஊற்றி, முறுகலாக சாப்பிடுகிறார். இது தவறா?
இந்தியர்களுக்கு, பிறநாட்டவரைவிட, ரத்தக்குழாய் நோய்களான பக்கவாதம், மாரடைப்பு 15 ஆண்டுகள் முன்பாக வருகின்றன. இதற்கு பாரம்பரிய மரபணு, நம் தவறான உணவுப் பழக்கம், தினசரி நடைப்பயிற்சி இன்மை, மனஅழுத்தம் முக்கிய காரணங்களாகும். இந்திய உணவுப் பழக்கத்தில் மிகத் தவறாக கருதப்படுவது, எல்லா உணவிலும் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவது. குறிப்பாக காலையில் தோசை, மதியம் அப்பளம், வடை, பஜ்ஜி, இரவில் புரோட்டா போன்றவைகளை எடுப்பது, மிகத்தவறான பழக்கம். எண்ணெய் அதிகம் உபயோகிப்பதால் சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதுடன், சிறுவயதில் மாரடைப்பு போன்றவை வரும் தன்மையும் கூடுகிறது. 35 வயது ஆகிவிட்டால் ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தோசை, சப்பாத்தியை தயாரிக்கையில் கல்லில், எண்ணெய் விடாமல் செய்வது நல்லது. இப்பழக்கம் உங்கள் குடும்பத்தில் பலருக்கும், பலவகைகளில் பயனளிக்கும்.
* சி. சுப்ரமணியன், மேலூர்: எனக்கு ஓராண்டுக்கு முன்பு 'பேஸ்மேக்கர்' பொருத்தப்பட்டது. ஒன்றரை மாதங்களாக அடிக்கடி சளி, ஜூரம் ஏற்படுகிறது. இதற்கு என் குடும்ப டாக்டரை பார்க்கலாமா அல்லது இருதய நிபுணரைத்தான் பார்க்க வேண்டுமா?
பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டவர்களுக்கு முதல் ஒரு மாதத்திற்கு பிறகு, இருதய டாக்டரை பார்க்க வேண்டும். பிறகு ஒரு ஆண்டுக்கு ஒரு முறை இருதய நிபுணரை பார்த்து 'செக்கப்' செய்தால் போதும். சர்க்கரை, ரத்தஅழுத்தம் மற்றும் இதர நோய்களுக்கு குடும்ப டாக்டரை தாராளமாக பார்க்கலாம். குடும்ப டாக்டரிடம், உங்களுக்கு பேஸ்மேக்கர் பொருத்திய விபரங்களை முன்னதாக தெரிவித்து, அவர் கொடுக்கும் மாத்திரைகளை தாராளமாக எடுக்கலாம். ஆண்டுக்கு ஒரு முறை இருதய டாக்டரை சந்தித்து பேஸ்மேக்கரை 'செக்கப்' செய்வது குறித்து ஆலோசனை பெற வேண்டும்.
* ஆர். ராதாமணி, அருப்புக்கோட்டை: எனக்கு நான்கு ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவை நன்கு கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன். 'கொலஸ்ட்ரால்' அளவு கட்டுப்பாட்டில் உள்ளது. என் டாக்டரோ, 'கொலஸ்ட்ராலை' குறைக்க 'ஸ்டேட்டின்' வகை மாத்திரையை தந்துள்ளார். அதை அவசியம் தொடர்ந்து எடுக்க வேண்டுமா?
தற்போதைய நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி. மாரடைப்பு, பக்கவாதம் வந்தவர்கள், சர்க்கரை நோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள், வேறு ரத்தக்குழாய் நோய் உள்ளவர்கள், ரத்தத்தில் கொழுப்பின் அளவு நார்மலாக இருந்தாலும், அவசியம் ஸ்டேட்டின் வகை மாத்திரையை எடுத்தாக வேண்டும். ஏனெனில் ஸ்டேட்டின் மருந்து கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை கூட்டுவதுடன், பல்வேறு வகைகளில் ரத்தநாளங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன.
ரத்தநாளத்தின் உட்புறச் சுவர்களை பாதுகாப்பதுடன், அடைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது; இருக்கும் அடைப்பு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதுடன், அடைப்பு வந்தாலும் மாரடைப்பு வராமலும் பாதுகாக்கிறது. ஸ்டேட்டின் வகை மாத்திரைகளை தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் ரத்தத்தில் கொழுப்பின் அளவு நன்கு குறைந்தபின்பும், தொடர்ந்து தவறாமல் எடுப்பது அவசியம்.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை. 0452- 233 7344