PUBLISHED ON : அக் 30, 2011

எனது சகோதரருக்கு 3 வாரங்களுக்கு முன் சென்னையில் பைபாஸ் சர்ஜரி நடந்தது. அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு ரயில் அல்லது விமானம், எதில் பயணிப்பது நல்லது? எஸ்.பார்த்திபன், மதுரை
பைபாஸ் சர்ஜரி என்பது இருதய ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பை, நெஞ்சில் இருந்தோ, கால், கைகளில் இருந்தோ ரத்தக் குழாயை எடுத்து பொருத்தும் அறுவை சிகிச்சை. இந்த அறுவை சிகிச்சை முடிந்தபின் 2 வாரங்களுக்கு விமான பயணத்தை தவிர்ப்பது நல்லது. அதன் பின் மேற்கொள்ளலாம். உங்கள் சகோதரருக்கு மூன்று வாரங்கள் ஆகிவிட்டதால் ரயில் அல்லது கார் அல்லது விமானத்தில் நன்றாகவே பயணம் செய்யலாம்.
Statin வகை மாத்திரை எடுத்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுமா? பி. முருகநாதன், தேனி
இருதய வைத்தியத்தில் இருக்கும் மருந்து வகைகளிலேயே ஸ்டேட்டின் வகை மருந்து மிகப்பெரிய வரப்பிரசாதம். ஸ்டேட்டின் வகை மருந்து எடுப்பதால் ரத்தக்குழாய்களுக்கு பல்வேறு வகைகளில் நன்மைகள் உள்ளன என்பது அசைக்க முடியாத உண்மை. அது கெட்ட கொழுப்பையும், டிரைகிளிசரைடு (டி.ஜி.எல்.,) அளவையும் நன்கு குறைக்கிறது. நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கச் செய்கிறது. ரத்தக்குழாய்களில் மாரடைப்பு, பக்கவாதம் வராமல் பாதுகாக்கிறது என, பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த மாத்திரை எடுப்பது, ஒருவரது இருதயத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் ஏற்படுத்துவது போன்றதாகும். இதில் மிகமிகச் சிறிய அளவில் கல்லீரலில் லேசான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதை எளிய ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து குணப்படுத்த முடியும். இன்னும் மிகச்சிறிய அளவில் சிலருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கூட வாய்ப்புள்ளது. இதைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. இந்த மாத்திரை எடுப்பதால் கிடைக்கும் பலன், அதனால் பெறும் பக்கவிளைவைவிட, பலஆயிரம் மடங்கு அதிகம். எனவே இந்த மாத்திரையை நீங்களாக நிறுத்தவோ, குறைக்கவோ கூடாது. தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் எடுப்பது அத்தியாவசியமானது.
எனது 12 வயது மகளுக்கு எக்கோ பரிசோதனை செய்ததில், அ.கு.ஈ., என வந்துள்ளது. இதற்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென எங்கள் டாக்டர் கூறுகிறார். அறுவை சிகிச்சை அவசியம்தானா?
கே. மகேஸ்வரி, திண்டுக்கல்
Atrial Septal Defect என்பதன் சுருக்கமே ஏ.எஸ்.டி., என்பது. இருதயத்தின் மேல் இரண்டு பாகங்களுக்கு இடையில் உள்ள ஓட்டையை இது குறிக்கிறது. இது பிறவியில் இருந்தே ஏற்படும் வியாதி. இதை மருந்து, மாத்திரையால் குணப்படுத்த முடியாது. பெரும்பாலான ஓட்டைகளை அறுவை சிகிச்சை இன்றி கதீட்டர் மூலம், 'டிவைஸ் குளோசர்' என்ற முறையில் எளிதில் சரிசெய்ய முடியும். இதில் நெஞ்சில் தழும்போ, வடுவோ ஏற்படுவதில்லை. ஒருசில ஏ.எஸ்.டி., வகைகளை கதீட்டர் மூலம் சரிசெய்ய இயலாது. அவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்.
இருதய நோயாளிகள் மதியம் சிறிதுநேரம் தூங்குவது நல்லதா?
எஸ். பிரகாஷ், ராமநாதபுரம்
மதிய தூக்கம் என்பது பல்வேறு வகைகளில் இருதய நோயாளி களுக்கு உதவுகிறது. அதாவது உடலை 'ரீசார்ஜ்' செய்வதுடன், களைப்பை போக்கி மனதையும் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. சமீபத்தில் நடந்த நவீன ஆய்வில், மதியம் சிறிது நேரம் தூங்குவதால் ஆயுள் கூடுவதாக தெரிய வந்துள்ளது. எனவே மதியம் சிலநிமிடங்கள் தூங்குவது நல்லதுதான். அதற்காக நன்கு சாப்பிட்டுவிட்டு, பலமணி நேரம் தூங்கினால் உடலில் எடையும், சர்க்கரை அளவும் அதிகரிக்கும் என்பதும் உண்மையே.
- டாக்டர் சி.விவேக்போஸ்
மதுரை
