PUBLISHED ON : நவ 19, 2014

எந்நேரமும் விழிப்போட இருக்கணும்னு ஆசைப்படறவங்களுக்கு, அலுவலக அரசியல் எப்பவுமே ஆரோக்கியம்தான்! இது ஒரு கசப்பு மருந்து மாதிரி; முகம் சுளிக்காம ஏத்துக்கிட்டா, மனசுல ஒரு நிம்மதி வந்துடும். தினசரி வாழ்க்கையில சுவாரஸ்யம் சேர்ந்துடும். இதுக்கு, இந்த அலுவலக அரசியலோட நெளிவு சுளிவுகளை நல்லா தெரிஞ்சுக்கணும்.
அலுவலக நண்பர்களோட மனசை படிக்கிறதுதான் இதுக்கான முதல் பாடம். இதுல தேர்ச்சி பெறணும்னா, நாம பேசுறதை குறைச்சுட்டு, அடுத்தவங்க பேச்சை நல்லா கவனிக்கணும். பொய் சொல்லலைன்னாலும் பரவாயில்லை; தேவையில்லாத உண்மைகளை, தேவையில்லாத நேரங்கள்ல சொல்லக்கூடாது! 'விசில் ப்ளோயர்ஸ்' (போட்டுக்கொடுப்பவர்கள்)கிட்டே தாமரை இலை தண்ணீரா பழகணும். அவங்களோட பல கேள்விகளுக்கு மவுனம்தான் நம்ம பதிலா இருக்கணும்.
அலுவலக சூழ்நிலைகளுக்கு ஏத்த மாதிரி விட்டுக்கொடுத்துப் போகணும். யாருக்கும் துரோகம் நினைக்கக் கூடாது; அதேநேரத்துல, யாரையும் சார்ந்தும் இருக்கக்கூடாது. முக்கியமா, அலுவலக அரசியல்ல சிக்கி யார் சின்னாபின்னமானாலும், கண்டும் காணாம தாண்டிப் போயிடணும். இல்ல, அவங்களோட எதிரிகள் நமக்கும் எதிரிகள் ஆயிடுவாங்க. இதுமூலமா, நாம தனித்து விடப்படுற சூழல் வரும். தொடர்ந்து, தாழ்வு மனப்பான்மை உருவாகும். அப்புறம் சுயபச்சாதாபம் வரும். கடைசியா, 'டிப்பென்ஸி டிஸார்டர்'ங்கற மனநோய்க்கு ஆளாயிடுவோம். இதை தவிர்க்கணும்னா, அலுவலக அரசியலைப் பத்தின இந்த தெளிவு அவசியம். இந்த தெளிவு வந்துட்டாலே போதும்; அலுவலக அரசியலை சந்திக்கிற துணிவு தானா வந்துடும். அந்த துணிவு பல்வேறு அனுபவங்களை நமக்கு கொடுக்கும்.
அரசியல்ன்னாலே எப்பவும் பிரச்னைதான்! அதுக்காக, அதைக்கண்டு பயந்து ஓடிட முடியுமா? பிரச்னைகள்தான் எப்பவுமே நல்ல அனுபவத்தை கொடுக்கும். அந்தவகையில, அலுவலக அரசியல் ஆரோக்கியமானதுதான்!
மனநல ஆலோசனைகளுக்கு: 99620 44569
- அபிலாஷா, மனநல மருத்துவர்

