PUBLISHED ON : அக் 16, 2022

ரூமட்டாய்டு ஆர்த்ரைடீஸ் எனப்படும் மூட்டு முடக்குவாதம் என்பது, மூட்டுக்களில் ஏற்படும் அழற்சி. பிரச்னை வந்தவுடன் சிகிச்சை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாததால், நோய் முற்றியநிலையிலேயே பலரும் வருகின்றனர்.
முப்பது ஆண்டுகளுக்கு முன், ரூமட்டாய்டு ஆர்த்ரைடீஸ் என்று முடிவானதும், வீரியம் குறைந்த மருந்துகளையே கொடுத்தோம்; இப்போது நிலைமை அப்படி இல்லை. 2020ல் சிகிச்சை முற்றிலும் மாறி விட்டது. வேதி மற்றும் உயிரி தொழில்நுட்பத்தில் நிறையமருந்துகள் தற்போது உள்ளன.
ரூமட்டாய்டு ஆர்ரைடீஸ்
ரூமட்டாய்டு ஆர்த்ரைடீஸ் 18 - 40 வயது வரை உள்ள பெண்களையே அதிகம் பாதிக்கும். இந்த வயதில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவு அதிகம் சுரப்பது பிரச்னைக்கு காரணம் என்பதை கண்டுபிடித்து விட்டோம். 40 வயதிற்கு மேல் ஈஸ்ட்ரோஜென் குறைந்தால், நோயின் தீவிரமும் குறைந்து விடுகிறது.
மூட்டுக்களில் முட்டையின் வெள்ளைக் கரு போல, 90 சதவீதம் நீர், மீதி 10 சதவீதம் வேதிப் பொருட்கள் சேர்ந்த சவ்வு இருக்கும். வயதாகும் போது, இது இறுகி நுங்கு போல ஆகிவிடுகிறது.
வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுகள், வேறு பல உடல் கோளாறுகளாலும் ரூமட்டாய்டு ஆர்த்ரைடீஸ் வரலாம் என்றாலும், பல நேரங்களில் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள், காரணமே இல்லாமல், மூட்டுக்களில் உள்ள செல்களை அழிக்கத் துவங்குகிறது.
காலையில் எழுந்ததும், கை விரல் நகங்களின் கீழ் உள்ள மூட்டுக்கள், இடுப்பு, தோள்பட்டை தவிர, மற்ற கை, கால் மூட்டுக்களில் தாங்க முடியாத வலி இருப்பது, இதன் பிரதான அறிகுறி. இடுப்பு, தோள்பட்டை இரண்டிலும் அபூர்வமான சூழலில் தான் பாதிக்கும். ஆறு வாரங்களுக்கு தொடர்ந்து மூட்டுக்களில் வலி இருந்தால், ரூமட்டாய்டு ஆர்த்ரைடீஸ் இருக்கலாம்.
கழுத்து, அக்குளில் நெறி கட்டலாம்; காய்ச்சல் விட்டு விட்டு வரலாம். பசியின்மை, மனச் சோர்வு, உடல் வலி, உடல் எடை குறைதல், தசையின் அடர்த்தி குறைவது போன்ற பல அறிகுறிகள் இருக்கலாம்.
இளம் பெண்களுக்கு கழுத்து எலும்பை முக்கியமாக பாதிக்கும். எம்.ஆர்.ஐ., பரிசோதனை செய்தால், 95 சதவீதம் பாதிப்பு இருக்கும். வலி இல்லாமல் கழுத்து பாதிப்பு வரலாம். கழுத்தில் உள்ள எலும்பை பாதித்தால், உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம். கை, கால் மூட்டுகளில ஏற்படும் விரைப்புத் தன்மை 30 நிமிடங்கள் வரை நீடிக்கலாம்; அதன் பின் சரியாகி விடும்.
பரிசோதனை செய்து ரூமட்டாய்டு ஆர்த்ரைடீஸ் இருப்பதை உறுதி செய்ய முடியாது. காரணம், டெங்கு, மலேரியா, கேன்சர், காசநோய், டைபாய்டு, எய்ட்ஸ், வைரஸ்,பாக்டீரியா தொற்று என்று பல கோளாறுகளுக்கும் பரிசோதனை செய்தால், ரூமட்டாய்டு ஆர்த்ரைடீஸ் பாசிட்டிவ் என்று தான் வரும்.
சிறுநீரகங்களில் புரதம்
எனவே, இதற்கென்று உள்ள சிறப்பு மருத்துவர் நேரில் ஆய்வு செய்தால் மட்டுமே, உறுதி செய்ய முடியும். நோய் பாதித்த மூன்று ஆண்டு களுக்கு பின் தான், எக்ஸ்ரே சோதனை யில் நோய் இருப்பது தெரியும்.
இது மூட்டுக்களை மட்டும் பாதிப்பது இல்லை... கண்கள் எதிர்பாராமல் அடிக்கடி சிவக்கும். நுரையீரலை பாதிக்கும். காற்று பைகள் இறுகி விடும். பூஞ்சை தொற்று வரலாம். இதயத் தசைகள், நுரையீரலை சுற்றி நீர் கட்டலாம். சிறுநீரகங்கள் மட்டும் அவ்வளவு எளிதாக பாதிக்காது. தொடர்ந்து 15 ஆண்டுகள் இப்பிரச்னை இருப்பவர்களுக்கு, சிறுநீரகங்களில் புரதம் சேரலாம்.
முறையான சிகிச்சை செய்வதன் வாயிலாக, நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
டாக்டர் அ. தமிழ்செல்வம்
மூட்டு முடக்கவியல் மருத்துவர்,
சென்னை
போன்: 97894 81143
