முன்னேற்பாடுகளுடன் முதுமையை இருகரம் கூப்பி வரவேற்போம்
முன்னேற்பாடுகளுடன் முதுமையை இருகரம் கூப்பி வரவேற்போம்
PUBLISHED ON : செப் 21, 2025

கண் பார்வை சுருங்கத்தான் செய்யும், நடையில் சற்று நடுக்கம், தலை முடிகளில் நரை தோன்றத்தான் செய்யும். இதுபோன்று முதுமைக்கான சில மாற்றங்களை, நாம் ஏற்று அதை எதிர்கொள்ள தயாராகிவிட்டால், முதுமை என்றும் அழகாகத்தான் இருக்கும் என்கிறார், இந்திய மருத்துவ சங்க கோவை செயலாளர் டாக்டர் சீத்தாராம். அவர் கூறியதாவது:
* முதுமை என்பது அனைவரும் கடந்து செல்ல வேண்டிய ஒரு அழகிய பயணம். அதை நாம் உடல் மற்றும் மனதளவில் வரவேற்க, 50 வயதில் தயாராகிவிட வேண்டும்.
* முன்பெல்லாம், குடும்ப டாக்டர் என்றே ஒருவர் இருப்பார். தற்போதும் பலர் அதை பின்பற்றுகின்றனர். தொடர்ந்து ஒருவரிடம் செல்வதால், நம் உடல் நலம் பற்றி அவர் புரிந்து இருப்பார். ஏதேனும் சிக்கல்கள் இருந்தாலும் முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும்.
* பெரும்பாலும் முதியோர் பலர், கடைகளில் தாமாக மருந்து வாங்கி உட்கொள்வதை காணமுடிகிறது. சுயமருத்துவம் எப்போதும் கூடாது. கட்டாயம் மருத்துவரை பார்க்க வேண்டும்.
* முதுமையில், எலும்புகள் அதிக தேய்மானம் அடைந்து இருக்கும். கீழே விழுந்தால் முதுகு, இடுப்பு எலும்பு உடைந்து பாதிப்பு ஏற்படும் என்பதால், கவனமாக இருக்க வேண்டும். டாக்டர் பரிந்துரையின் பேரில், தேய்மானம் சமநிலைப்படுத்த மருந்து எடுத்துக்கொள்ளலாம்.
* ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை, காய்ச்சல் தடுப்பூசி போன்றவை எடுத்துக்கொள்வதும்; சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.
* சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
* வயதாகும் போது, கால் பராமரிப்பில் கவனம் வேண்டும். முதுமையில் கால் நரம்பு மதமதப்பு ஏற்பட்டு புண்கள் அதிகம் ஏற்படும். சர்க்கரை இருப்பவர்களுக்கு, இது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
* உப்பு அளவு கட்டாயம் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்பளம், ஊறுகாய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* பெண்கள் மாதவிடாய் சார்ந்த பிரச்னைகளையும், மார்பகத்தில் கட்டி இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆண்கள், சிறுநீர் கழிப்பதில் சிரமம், மலம் கழிப்பதில் சிரமம் இருந்தாலும் பரிசோதனை செய்ய வேண்டும்.
* உடல் நலம் தவிர்த்து, இன்சூரன்ஸ், ஓய்வு கால பணப்பலன்களிலும் முன்கூட்டியே திட்டமிடல் அவசியம்.முதுமை பொறுத்தவரையில், வரும் முன் தவிர்ப்போம் என்பதே சரியாக இருக்கும்.

