PUBLISHED ON : நவ 22, 2015

நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து, உடல் நோய்களுக்கான அறிகுறிகளை எளிதில் கண்டுபிடித்து விடலாம். பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நமது உடலில் ஏற்படும் பாதிப்புகளை பொறுத்து, நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும்.
ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும். சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால், நகங்களின் வளர்ச்சி குறைந்து, பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல ரத்தமும், கெட்ட ரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும். நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு, நகங்கள் வளைந்து இருக்கும். ரத்த சோகை ஏற்பட்டு, இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.
சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால், நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும். நகத்தில் மஞ்சள் கோடுகள் இருந்தால், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம். நகங்களுக்கு பாலிஷ் தீட்டுவதால் ஏற்பட்ட ரசாயன மாற்றத்தின் காரணமாகவும், மஞ்சள் கோடுகள் இருக்கலாம்.
நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால், சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும். ரத்தத்தில் போதிய அளவுக்கு ஆக்சிஜன் இல்லாவிட்டால், நகங்கள் நீலமாக இருக்கும். ஆர்சனிக் என்ற நச்சுக்களால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் நீலநிறத்தில் காணப்படும். மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால், மூட்டுவலி உள்ளதாக காட்டும் மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.
நகங்களை நலமாக வைத்துக் கொள்ள, பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறை: நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற செயல்களுக்கு, நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, அதிகமாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.
நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து, அதிக வலியை ஏற்படுத்தும். நகத்தை பற்களால் கடிக்கக் கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியால்
மட்டுமே வெட்ட வேண்டும்.
சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது, நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும். நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ள வேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை, சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

