PUBLISHED ON : டிச 31, 2017

கடந்த வாரம், அருவி படம் பார்த்தேன்; அருமையான படம். ஒரு சில காட்சிகள், இன்னும் கொஞ்சம் தெளிவாக படமாக்கி இருக்கலாம் என்பதைத் தவிர, வேறு எந்த குறையும் இல்லை. மற்றவர்கள் அந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு தருவதற்கும், நான் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக நினைக்கிறேன். காரணம், எனக்கு, ஹெச்.ஐ.வி., தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, வரும் ஏப்ரல் மாதத்துடன், 23 ஆண்டுகள் ஆகிறது.
என்னுடைய சொந்த ஊர் நாமக்கல். 20 வயது ஆவதற்கு முன்பே திருமணம் ஆகி விட்டது. திருமணமான சில ஆண்டுகளில், உடல் நலம் இல்லாமல் கணவர் இறந்த பின், எனக்கு பரிசோதனை செய்ததில், 'ஹெச்.ஐ.வி., பாசிடிவ்' இருப்பது தெரிந்தது; அப்போது, 24 வயது எனக்கு!ஹெச்.ஐ.வி.,யால் பாதிப்பட்டவர்களை, தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று, ஹெச்.ஐ.வி., பற்றிய கருத்தரங்கிற்கு சென்னை அழைத்து வந்தது; நிறுவன உறுப்பினர்கள் பேசுவதை மட்டுமே கேட்க முடிந்ததே தவிர, எங்கள் பிரச்னைகள் குறித்து நாங்கள் பேச முடியவில்லை. இது எனக்கு மிகுந்த சோர்வைத் தந்தது.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், ஹெச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணை, பிரசவத்திற்கு கூட அரசு மருத்துவமனையில் அனுமதிக்க தயங்குவர்; பலமுறை சண்டை போட்டு, அவசர சிகிச்சை பிரிவில் நான் சேர்த்திருக்கிறேன். 'என்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்களின் ஒவ்வொரு பிரச்னைக்கும், தனி மனுஷியாக சண்டை போடுவதை விட, ஒரு அமைப்பாக இருந்தால், இன்னும் வலிமையாக இருக்கும்' என நினைத்தேன். அதற்கு முன், 'நான் ஹெச்.ஐ.வி., பாசிடிவ்' என்பதை வெளிப்படையாக அறிவித்தேன். இதை, இந்தியாவில் செய்த முதல் பெண் நான் தான் என்பதில், எனக்கு மகிழ்ச்சி.என்னுடன் மேலும், மூன்று பெண்களை இணைத்து, 'பாசிடிவ் வுமன் நெட்வொர்க்' என்ற அமைப்பை ஏற்படுத்தினேன். இதுவும், ஹெச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சொந்தமான முதல் அமைப்பு. அமைப்பில் முழு கவனத்துடன் ஈடுபட ஆரம்பித்த நாளில் இருந்து, எனக்கு எதிர்மறை எண்ணங்கள் வரவில்லை. நாம் எந்த வேலை செய்தாலும், அதில் முழு ஈடுபாடும், அக்கறையும் இருக்க வேண்டும். குடும்பத் தலைவியாக வீட்டை கவனித்துக் கொண்டாலும் சரி, வேறு பொறுப்பானாலும் சரி, அர்ப்பணிப்பு முக்கியம். அது இல்லாமல், சுயநலமாக சிந்திப்பதால் தான் போட்டி, பொறாமை உணர்வுகள், வன்முறைகள், தற்கொலைகள் நடக்கின்றன. நம் வாழ்க்கை முன்னேற வேண்டும் என, கவனத்துடன் செயல்பட்டால், நாமும் முன்னேறுவோம்; நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் முன்னேற்றுவோம்.
கடந்த, 2002ல் டர்பன் நகரில் நடந்த மாநாட்டிற்கு சென்றேன். கருத்தரங்கு நடந்த இடமும், நான் தங்கிய அறையும் தவிர, வேறு எதுவும் எனக்குத் தெரியாது. எந்த வெளிநாட்டிற்குப் போனாலும், ஹெச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்கு, என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே சிந்திப்பேன். என் கண் முன் இறப்பவர்களை காப்பாற்றுவதைத் தவிர, வேறு மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்? என் அமைப்பில் இதுவரை, 50 ஆயிரம் பெண்கள் இருக்கின்றனர். 86 சதவீத பெண்களுக்கு வாழ்க்கை துணையால் தான், ஹெச்.ஐ.வி., பாதிப்பு உள்ளது.ஹெச்.ஐ.வி., பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படும் பிற தொற்றுகளை பரிசோதிக்க, அரசு மருத்துவமனைகளில் தேவையான வசதிகளும், மருந்துகளும் இல்லை; கவனிப்பும் இல்லை. இந்த தொற்று இருப்பது தெரிந்தால், வீட்டில் ஒதுக்குவர்; சமுதாயம், பயம் கலந்த அருவருப்புடன் பார்க்கும். ஆரம்பத்தில், ஒரு மாதத்திற்கு சாப்பிட வேண்டிய மருந்தின் விலை, 7,000 ரூபாய். என் வீட்டில் வாங்கிக் கொடுத்தனர். ஆனால் ஏழைகள் என்ன செய்வர்? எங்கள் அமைப்பின் மூலம், பல்வேறு விதங்களில் தொடர்ந்து போராடி, ஏ.ஆர்.வி., மருந்து தற்போது, மாதம், 1,000 ரூபாய்க்கு கிடைக்கிறது; இம்மருந்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே கிடைக்கிறது.எல்லா இடத்திலும், ஹெச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலன் மற்றும் உரிமைகளுக்காக, தினமும் சண்டை போட்டபடியே இருக்கிறேன்.
கவுசல்யா பெரியசாமி, நிறுவனர், பாசிடிவ் வுமன் நெட்வொர்க், சென்னை.pkousalya@gmail.com

