PUBLISHED ON : மார் 02, 2016

கடந்த இரண்டு வாரங்களாக, கருப்பையில் துவங்கி ஒவ்வொரு பருவத்திலும் என்ன மாதிரியான மனப் பிரச்னைகள் வரும் என்பதை விளக்கி வருகிறார், மனநல சிறப்பு மருத்துவர் லட்சுமி விஜயகுமார். இந்த வாரம், 14 முதல், 19 வயது வரை உள்ளவர்களுக்கு...
இந்தப் பருவத்தில், உடல் வளர்ச்சியோடு சேர்ந்து, ஹார்மோன்களின் வளர்ச்சியும் வேகமாக இருக்கும். ஹார்மோன்களின் செயல்பாடு, உடலை விட மன மாற்றங்களை அதிகம் ஏற்படுத்தக் கூடியது; இதனால் உணர்ச்சிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் உள்ள இடைவெளியால் எல்லா விஷயத்திலும், 'எமோஷனலாக' இருப்பர். அதே சமயம், உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்கான மனப்பக்குவம் அந்த வயதில் இருக்காது.
பார்த்தவுடன், பழகியவுடன் தங்களுக்கு பிடித்த விஷயங்கள், வாட்ஸ் ஆப், குறுந்தகவல் வழியே
நண்பர்களுக்கு செய்தி அனுப்புவது, சிறிய விஷயத்திற்கெல்லாம், 'மூட் அவுட்' ஆவது இதன் வெளிப்பாடு தான். இது பெற்றோருக்கு தெரிந்து கண்டித்தால், 'தான் செய்வது சரி என்று பிடிவாதம் பிடிப்பர்; எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்ற மனோபாவத்துடன் இருப்பர். இதை நாங்கள், 'அப்போசிஷனல் பிஹேவியர்' என்று செல்வோம்.
இந்த வயதில், பெற்றோரை விடவும் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். 'நண்பர்கள் தான், தனக்கு எல்லாம் என்ற நம்பிக்கை அதிகமாக இருக்கும். உடுத்துவது, பேசுவது, சாப்பிடுவது என்று, அன்றாட நடவடிக்கையில் தங்களுக்கென்று தனியாக ஒரு வழியை பின்பற்ற நினைப்பர். இதனால் படிப்பில், விளையாட்டில் கவனம் சிதறும். 'ஏன்' என்று கேள்வி கேட்கும் போது தான், பெற்றோருக்கும் இவர்களுக்கும் இடையே பிரச்னை வருகிறது.
பதினான்கு முதல், 19 வயதினருக்கான உடல், மன வளர்ச்சியில் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டு பக்குவமாக கையாண்டால் எந்தப் பிரச்னையும் இருக்காது.