PUBLISHED ON : ஜூலை 30, 2023

ஆரோக்கியமான வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி உட்பட பல காரணங்கள் தாய்ப்பாலில் இருந்தாலும், குழந்தையுடன் உணர்வுப்பூர்வமான பந்தம் ஏற்படுவதற்கு இயற்கை கொடுத்த வரம் தாய்ப்பால்.
வாடகைத் தாய் உதவியுடன் குழந்தை பெறும் பெண்கள், ஒரே பாலினத்தை வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்பவர்கள், மூன்றாம் பாலினத்தவர், திருமணம் செய்யாமல் தனித்து வாழ்பவர்கள், எதிர்கால நம்பிக்கைக்கு குழந்தை வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பான ஒன்று. இவர்கள் தத்து குழந்தைக்கு தாய்ப்பால் தர முடியும்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தில் இதை நடைமுறைப்படுத்தி உள்ளனர். நம் நாட்டைப் பொருத்தவரை, வாடகைத் தாய் உதவியுடன் குழந்தை பெற்ற பெண்களுக்கு இந்த சிகிச்சை செய்துள்ளோம்.
கர்ப்பிணியின் உடலில் நிகழும் மாற்றங்களை, தாய்ப்பால் தர விரும்புபவர்களுக்கு ஹார்மோன் சிகிச்சை நான்கு மாதங்களுக்கு தருவோம். பக்க விளைவுகள் எதுவும் இருக்காது. அதன்பின், மூன்று வாரங்களில் பால் சுரக்க ஆரம்பிக்கும். மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி, ஆக்சிடோசின், புரோலாக்டின் என்ற இரு ஹார்மோன்களை சுரக்கிறது. பால் சுரப்பி துாண்டப்படுவதற்கு இந்த ஹார்மோன்கள் அவசியம். இதை சுரக்க வைப்பது தான் இந்த சிகிச்சை முறை.
மாதவிடாய் நின்ற பெண்கள், கர்ப்பப் பை, கருக்குழாய் கோளாறுகளால் குழந்தை பெற முடியாத பெண்கள், தத்து குழந்தைக்கு பால் தர விரும்பினால், இந்த சிகிச்சை பெரிய வரம். ஆண்கள், மூன்றாம் பாலினத்தவருக்கும் தாய்மையை உணர வைக்க வாய்ப்பாக இருக்குமே தவிர, எந்த நிலையிலும் ஒரு பெண்ணின் தனித்தன்மைக்கு இது மாற்று கிடையாது.
இயல்பாக சுரக்கும் தாய்ப்பாலில் ஐந்தில் ஒரு பகுதி மட்டுமே இந்த சிகிச்சையால் சுரக்கும்.
பல நடைமுறை காரணங்களால் தாய்ப்பால் தரும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குழந்தை பெறவே முடியாதவர்களும் தாய்மையை உணர்வதற்கு இந்த சிகிச்சையை விரும்பும் போது, இயற்கை கொடுத்த வரத்தை தவிர்க்க வேண்டாம் என்று பெண்களுக்கு உணர்த்தவே இதைச் சொல்கிறோம்.
டாக்டர் டீனா அபிஷேக்
மகப்பேறு மற்றும் பாலுாட்டுதல் ஆலோசகர்,
சென்னை.
98845 67371

