
சித்ரா, மதுரை: சர்க்கரை கட்டுப்பாட்டு அளவு என்ன. சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி?
எட்டு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் காலையில் வெறும் வயிற்றில் ரத்த நாளங்களில் இருந்து பரிசோதிக்கப்படும் ரத்த சர்க்கரை 110க்கு கீழ் இருப்பது சர்க்கரை நோய் இல்லாத நிலை. 126க்கு மிகையாக இருப்பது ரத்த சர்க்கரை நோயை உறுதி செய்கிறது. 110க்கும் 125க்கும் இடையே இருப்பது சர்க்கரை நோயின் ஆரம்பநிலையை குறிக்கிறது.
இதேபோன்று காலை உணவிற்கு 2 மணி நேரத்திற்கு பின்பு ரத்த சர்க்கரை 140 க்கு கீழ் இருப்பது சர்க்கரை நோய் இல்லாத நிலை. 200க்கு மேல் இருப்பது சர்க்கரை நோயை குறிக்கிறது. 141 முதல் 199 வரை ஆரம்பநிலை சர்க்கரை நோயை குறிக்கிறது.
ரத்தசர்க்கரை நோய் ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமெனில் உங்கள் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை (பி.எம்.ஐ.) கொண்டிருக்க வேண்டும். அதிக உடல் எடை இருந்தால் அதை 3 முதல் 10 சதவீதம் குறைக்க வேண்டும். எடை குறைப்பதற்காகவும் சர்க்கரை நோய் ஏற்படாமல் தவிர்க்கவும் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். கலோரி அதிகமுள்ள அரிசி சாதம், மைதா உணவுகள், துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். இரவில் குறைந்தது 7 மணி நேர உறக்கம் அவசியம். மன ஆரோக்கியத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
- டாக்டர் ராஜ்குமார்சர்க்கரை நோய், பொதுமருத்துவ நிபுணர், தேனி.
சாந்தி, ஒட்டன்சத்திரம்: முகப்பரு வரும் காரணங்கள் தவிர்க்க வேண்டிய உணவு சிகிச்சை முறைகள் என்ன?
முடியின் வேர்க்கால்களில் எண்ணெய் அடைத்து கொள்ளுதல், தோலில் இருந்து வெளியேறும் இறந்த செல்கள் , கிருமியின் வளர்ச்சியினால் பரு உண்டாகிறது. முகம் மட்டுமின்றி சிலருக்கு தோள்பட்டை, நெஞ்சு பகுதிகளிலும் ஏற்படும். ஹார்மோன் மாற்றம், உணவு பழக்கவழக்கங்கள், சூரிய ஒளி, காற்று மாசுபாடு, பொடுகு தொல்லை, மன அழுத்தம், துாக்கம் இன்மை, கருமுட்டையில் ஏற்படும் நீர்க்கட்டி போன்ற பல்வேறு காரணிகளால் முகப்பரு ஏற்படும்.
சோடா வகைகள், பீசா, பர்கர், எண்ணெயில் பொறித்த உணவுகள், இனிப்பு தின்பண்டங்கள், பாலில் இருந்து எடுக்கக்கூடிய வே-புரோட்டின், ஐஸ்கிரீம், சாக்லேட் இவை அனைத்தும் பருவை அதிகரிக்கும் உணவுகள். இதற்கு சிகிச்சை பெறாவிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள், தழும்பு போன்றவை ஏற்படலாம். முகப்பருவிற்கு உணவு முறை மாற்றங்களோடு சேர்த்து மாத்திரைகள், வெளிப்புறம் பூசிக் கொள்வதற்கான களிம்பு, சன் ஸ்கிரீன் போன்றவை பயன்படுத்தலாம் .
- டாக்டர் ராஜராஜன் தங்கராஜ் தோல் மருத்துவ சிகிச்சை நிபுணர் ஒட்டன்சத்திரம்.
வி.மாடசாமி, ஆண்டிபட்டி: 40 வயதாகும் எனக்கு சில நாட்களாக சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர் பாதையில் லேசான வலி ஏற்படுகிறது. உடல் சூட்டினால் ஏற்படும் வலியா அல்லது வேறு ஏதேனும் பாதிப்பா?
சிறுநீர் பாதையில் தொற்று இருந்தால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. வயிறு வலியுடன் சேர்ந்து சிறுநீர் பாதையில் வலி இருந்தால் கல்லடைப்புக்கு வாய்ப்புள்ளது. உடலில் சர்க்கரை பாதிப்பு இருந்தால் கிருமி தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ளது. சிறுநீர் பரிசோதனை செய்து என்ன வகையான நோய் தொற்று என்று அறிந்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். ஸ்கேன் செய்வதால் வலிக்கான காரணத்தை அறியலாம். சிறுநீர் வெளியேறும் குழாய் பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சதை வளர வாய்ப்புள்ளது. இதனால் வலி ஏற்படும். பெண்களுக்கு இந்த பாதிப்பு வராது. உடலில் நீர் சத்தை சமன் செய்ய அதிக நீர் குடிக்க வேண்டும். டாக்டரிடம் உடல் பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது அவசியம்.
- டாக்டர் ஏ.முத்துக்குமார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தேனி
பி.மகேஸ்வரன், ராமநாதபுரம்: குடலிறக்கம் நோயால் அவதிப்படுகிறேன். இதற்கான தீர்வு என்ன?
பிறந்த குழந்தைகள் உட்பட வயதானவர்கள் வரை அனைவருக்கும் குடலிறக்கம் நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாகும். நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சில நேரங்களில் குடல் இறுகி அழுகும் நிலை ஏற்படும். இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
பாதிக்கப்பட்டவர்கள் கவனமாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக எடையுள்ள பொருட்களை துாக்கக் கூடாது.இவர்களுக்கு மலச்சிக்கல், நாள் பட்ட இருமல் இருக்கும். சிறுநீர் செல்வதில் அடைப்பு ஏற்படும். மது, புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
-டாக்டர் எஸ்.சுரேந்திரன்பொது அறுவை சிகிச்சை நிபுணர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
க.அருண்,சிவகங்கை: பருவ கால மாற்றத்தால் வரும் காய்ச்சலில் இருந்து எப்படி பாதுகாப்பது?
பருவகால மாற்றத்தால் பொதுவாக வைரஸ் காய்ச்சல் பரவத் தொடங்கும்.இந்த காலங்களில் நாம் ஒருவரை ஒருவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா காலத்தில் கடைப்பிடித்த தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தண்ணீரை சுட வைத்து குடிக்க வேண்டும். கையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். நுரையீரல் தொற்று, சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். டாக்டர் ஆலோசனை இல்லாமல் மாத்திரையை வெளியே வாங்கி உண்ணக்கூடாது. காய்ச்சல் வருவதை உணர்ந்தால் உடனடியாக டாக்டரை அணுகி உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- டாக்டர் ஸ்ரீநாத்நெஞ்சக நோய் நிபுணர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை
ஸ்ரீவத்ஸ்சன், விருதுநகர்: எனது மகனுக்கு நான்கு வயதாகிறது. காலை நேரங்களில் வெயிலும், மாலை நேரங்களில் மழையும் பெய்வதால் ஜலதோஷமும், இளைப்பும், வயிற்று போக்கும் ஏற்படுகிறது. இதில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
காலை நிலை மாற்ற பிரச்னையை தவிர்க்க குழந்தைகளுக்கு சூடாக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட குடிநீரை கொடுக்க வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். குளிர் நேரத்தில் வெளியில் விளையாட அனுமதிக்க கூடாது.
வெக்கை நேரத்தில் காற்றில் ஈரப்பதம் இருப்பதால் சொறி, சிரங்கு போன்ற தோல் பிரச்னைகள் வரவும் வாய்ப்புள்ளது. பள்ளி விட்டு வந்ததும் ஈர டவலால் உடலை துடைக்க வேண்டும். காட்டன் ஆடைகளை அணிவிக்க வேண்டும். உடல் சூட்டால் ஏற்படும் வயிற்று போக்கு போன்ற பிரச்னைகளுக்கு வெளியில் உணவு வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பற்ற குடிநீர் குடிக்க கூடாது. உடல் சூட்டை தணிக்க மோர், இளநீர் அவ்வப்போது வழங்க வேண்டும். காய்கறி சூப், ஜூஸ் வகைகளையும் சாப்பிட வேண்டும்.
- டாக்டர் அரவிந்த்பாபுகுழந்தைகள் நலத்துறை பேராசிரியர் அரசு மருத்துவக்கல்லுாரிவிருதுநகர்