
மனோகரன், மதுரை: உடலுக்கு உடற்பயிற்சி போல கண்ணிற்கு பயிற்சி உள்ளதா.
உடலில் வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சமநிலையில் வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம். போதிய உடற்பயிற்சி இல்லாததால் அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்படுகிறது. உடற்பயிற்சி செய்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதேபோல கண்ணிற்கு பயிற்சி அவசியம்.
எப்போதும் அலைபேசி, 'டிவி', கம்ப்யூட்டர் பார்க்க வேண்டியிருப்பதால் குறிப்பிட்ட இடைவெளியில் கண்ணிற்கு பயிற்சி அளிப்பது அவசியம். கம்ப்யூட்டரில் பணிபுரிபவர்கள் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்ணிற்கு சில நிமிடங்கள் ஓய்வு தரவேண்டும். கம்ப்யூட்டரில் இருந்து கண்ணை விலக்கி கண்ணை இமைக்க வேண்டும். கருவிழியை மேலே, கீழே, இடது, வலது என அசைக்க வேண்டும். கம்ப்யூட்டரை கை அகல துாரத்தில் வைத்து பணி செய்ய வேண்டும்.
கம்ப்யூட்டரை அருகில் பார்க்கும் அதே வேளையில் துாரத்தில் உள்ள ஏதாவது ஒரு பொருளையும் அடிக்கடி பார்க்குமாறு உங்கள் இருக்கை அமைய வேண்டும். கண்ணிற்கு போதிய பயிற்சி கிடைக்காததால் மயோபியா, ஹைப்பர் மெட்ரோபியா, வயதாகும் போது கிட்டப்பார்வை குறைதல் போன்றவை ஏற்படுகிறது. அலைபேசியை ஒரு மணி நேரம் அருகில் வைத்து பார்த்துவிட்டு சற்று துாரத்தில் உள்ள ஒரு பொருளை பார்த்தால் அது மங்கலாக தெரியும். அப்படி ஏற்படாமல் இருக்க கண் பயிற்சி அவசியம். பத்து நிமிடங்கள் சற்று ஓய்வெடுத்து துாரத்தில் உள்ள பொருளை பார்க்க வேண்டும்.
கண்ணை அடிக்கடி சிமிட்ட வேண்டும். கண்ணை இடது பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக, வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கமாக மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக நகர்த்தி பயிற்சி செய்ய வேண்டும். சுத்தமான நீரால் கண்ணை கழுவலாம். கழுத்திற்கும் பயிற்சி தரவேண்டும். அசையாமல் கழுத்தை வைத்திருந்தால் ஒற்றை தலைவலி ஏற்படும். கழுத்தின் இடது, வலதுபக்கம், மேலே, கீழே என அசைத்து பயிற்சி தரவேண்டும்.
- டாக்டர் நாராயணன் நம்பூதிரி, ஆயுர்வேத கண் மருத்துவர், கூத்தாட்டுக்குளம்
முருகேசன், ஒட்டன்சத்திரம்: எனக்கு பற்கள் சொத்தையாக உள்ளது. வாயிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. பற்சிதவை தடுக்கும் வழிமுறைகள் என்ன...
பல் சொத்தைக்கு முக்கிய காரணம் இனிப்பு அதிகமாக உண்பது. சர்க்கரை பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக் கொள்ளும் போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து லாக்டிக் அமிலத்தை சுரக்கின்றன. இந்த அமிலம் எனாமலை அரித்து பற்களை சிதைக்கிறது. இதனால் பற்கள் சொத்தை ஆகின்றன. ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளே வாய் துர்நாற்றத்திற்கு முதன்மை காரணம்.
சரியாக பல் துலக்காமல் இருப்பது உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. சாப்பிட்டதும் வாயை நன்றாக சுத்தம் செய்ய தவறினால் உணவு துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டி கொள்ளும். அப்போது வாயில் இயற்கையாகவே உள்ள பாக்டீரியாக்கள் இந்த உணவுப் பொருட்களுடன் வினைபுரிந்து கந்தகம் எனும் வேதிப்பொருளை உருவாக்கும். இது கெட்ட வாயுவை வெளியேற்றும். இதுதான் வாய் துர்நாற்றத்திற்கு அடிப்படை காரணம்.
பற்சிதைவை தடுக்க காலை, இரவு பல் துலக்க வேண்டும். மிருதுவான,நடுத்தர வகை டூத் பிரஸ்களை பயன்படுத்தலாம். குழந்தைக்கு பாட்டில் பால் கொடுத்தவுடன் ஈறு பகுதியை தண்ணீரால் நன்றாக துடைத்து விட வேண்டும். வைட்டமின் சி, வைட்டமின் டி, கால்சியம் சத்துக்கள் மிகுந்த ஆரஞ்சு, தக்காளி, திராட்சை,எலுமிச்சை, நெல்லிக்காய், காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதல்வற்றையும் புரதச் மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி உணவுகளில் சேர்த்துக் கொண்டால் பல் ஈறும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும். தினமும் பால் அருந்துங்கள். அதில் உள்ள கால்சியம் பல்லுக்கு பாதுகாப்பு தரும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
- டாக்டர் நடராஜன், பல் மருத்துவர், ஒட்டன்சத்திரம்
ராமகிருஷ்ணன்அருப்புக்கோட்டை: எனக்கு 42 வயது. கடவாய் பற்கள் சொத்தை காரணமாக எடுக்கப்பட்டது. அந்த இடத்தில் உடனே பல் கட்ட வேண்டுமா. சில மாதங்கள் கழித்து செய்து கொள்ளலாமா.
முன் கடவாய் பற்கள் பின் கடவாய் பற்கள் என உள்ளது. சொத்தை காரணமாக எடுத்தவுடன் வேறு பல் கட்டுவது நல்லது. அல்லது 5 மாதத்திற்குள் கட்ட வேண்டும். இல்லையெனில் பற்கள் எடுத்த இடத்தில் உள்ள எலும்புகள் தேய்மானம் அடைவதுடன் அருகில் உள்ள பற்களின் பிடிமானம் குறைந்து விடும். பற்கள் எடுத்த இடத்தில் உள்ள தசைகள் மற்ற பற்கள் அசையும் போது கடிபடும். பற்களை கட்டாமல் விட்டு விட்டால் இளமையாக இருப்பவர்களுக்கு வயதான லுக் காட்டும். கடவாய் மற்றும் மற்ற பற்கள் தான் 70 சதவிகிதம் உணவுகளை அரைத்து ஜீரண சக்திக்கு முக்கிய காரணியாக உள்ளது. அதனால் சேதமடைந்த பற்கள் எடுத்தவுடன் பற்களை கட்ட வேண்டும். இதில் யோசித்தால் உடம்பில் பல்வேறு பிரச்சனைகள் வரும். பற்கள் கட்டுவதில், பற்களை கழற்றி மாற்றுவது, நிரந்தரமாக பொருத்துவது என இரண்டு வகைகள் உள்ளன. தங்கள் வசதியை பொறுத்து தேர்வு செய்து கட்டிக் கொள்ளலாம்.
- டாக்டர் மணியமுதுபல், வாய், தாடை சிகிச்சை நிபுணர் அருப்புக்கோட்டை
ஆர்.நாகராணி, ஆண்டிபட்டி: எங்கள் குடும்பத்தில் பலரும் சித்த மருத்துவ முறையை பின்பற்றி வருகிறோம். தற்போது மழைக்கால நோய்களிலிருந்து பாதுகாக்க சித்த மருத்துவ ஆலோசனை தாருங்கள்.
மழைக்காலங்களில் காய்ச்சல், இருமல், ஆஸ்துமா, சேற்றுப்புண், கழிச்சல் போன்ற நோய்களால் பாதிப்பு ஏற்படும். இந்த நோய்களை தடுக்க குடிநீரை காய்ச்சி ஆற வைத்து குடிப்பது அவசியம். வெந்நீர் குடித்தல், துளசி, மஞ்சள், மிளகு, கற்பூரவள்ளி, இஞ்சி போன்றவற்றை தண்ணீரில் போட்டு காய்ச்சி கஷாயமாக குடிக்கலாம். சூடான பாலில் மஞ்சள், மிளகுத்துாள், பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். தொண்டை வலி ஏற்பட்டால் சூடான நீரில் கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
சித்த மருத்துவ முறையில் ஆவி பிடிப்பதை கடைபிடிக்க வேண்டும்.ஒரு லிட்டர் நீரில் நொச்சி இலை ஒரு கைப்பிடி, மஞ்சள் ஒரு ஸ்பூன் கலந்து நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம். அல்லது வேப்பிலை ஒரு கைப்பிடி, யூகலிப்டஸ் தைலம் மூன்று முதல் ஆறு துளிகள் சேர்த்து ஆவி பிடிக்கலாம். மழைக்காலங்களில் துாதுவளை ரசம் எடுத்துக் கொள்ளலாம். நிலவேம்பு குடிநீர் எடுத்துக் கொள்ளலாம். சளி, இருமலை குணப்படுத்த சித்த மருந்துகளான தாளி சூரணம், திரி கடுகு சூரணம், ஆடாதொடை குடிநீர், ஆடாதோடை மணப்பாகு, தாளி சாதி வடகம் போன்றவற்றை எடுத்துக் கொண்டால் நல்லது. வெளியில் உணவு சாப்பிடுவதை தவிர்த்து வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. கழிச்சலை போக்க சித்த மருந்துகளான தயிர் சுண்டி சூரணம், சுண்டைவற்றல் சூரணம் எடுத்துக் கொள்ளலாம்.
- டாக்டர் எஸ்.மணிமேகலை, உதவி சித்த மருத்துவ அலுவலர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், டி.சுப்புலாபுரம்
எஸ்.பிரியா, சிவகங்கை: பெண்களுக்கு நீர்கட்டி, சினைப்பை கட்டி எதனால் உருவாகிறது
பொதுவாக அனைத்து வயது பெண்களுக்கும் இந்த கட்டி உருவாகும். குறிப்பாக 15 முதல் 45 வயது உள்ளவர்களுக்கு காணப்படும். பூப்பெய்தல் வயது 10ல் இருந்தே ஆரம்பமாகும் போதே இது உருவாக வாய்ப்பு உண்டு.
உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். துரித உணவு, நொறுக்கு தீனி தவிர்க்க வேண்டும். மூன்று வேளையும் சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். பசியின்மை, துாக்கமின்மை அதிகரித்தால் மாதவிடாய் பிரச்னை ஏற்படும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அல்லது மாதவிடாய் வராமல் இருக்கும். தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு நீர்க்கட்டி வரக்கூடும். இதனால் திருமணம் முடிந்தவுடன் கருத்தரித்தலில் சிரமம் ஏற்படும். முறையான எடையை பராமரிக்க வேண்டும். யோகா, உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
- டாக்டர் மு.தென்றல், மகப்பேறு நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை