
திவ்யா, மதுரை: பற்களை எடுக்காமல் பற்சொத்தைக்கு சிகிச்சை அளிக்க முடியுமா.
பல் வலியால் அவதிப்படுபவரில் பாதிக்கும் மேற்பட்டோர் பல் பிரச்னை இருந்தும் பல் டாக்டரிடம் செல்வதில்லை. அதுவே நாளடைவில் வலியாகவோ வீக்கமாகவோ மாறி விடும். பல் எடுக்க வேண்டியிருக்குமோ என்ற பயமே பல் மருத்துவமனைக்கு செல்லாமல் இருப்பதற்கான முதல் காரணம். பல் எடுப்பதற்கு பயந்து சிறிய பல் சொத்தையைக்கூட கவனிக்காமல் விட்டு விட்டால் பின்னாளில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவிற்கு கொண்டு செல்லும். பல் எடுக்காமல் செய்யக்கூடிய பல சிகிச்சை வழிமுறைகள் தற்போது உள்ளன.
பல் சொத்தையினால் வலி வந்தால் பல் எடுக்க வேண்டும் என்பதில்லை. சொத்தையின் அளவைப்பொறுத்து பல் அடைப்பது அல்லது வேர் சிகிச்சை செய்து பற்களை சரிசெய்து அதன் மேல் 'செராமிக் கேப்' போட்டு விட்டால் இயற்கை பற்கள் போலவே மாறி விடும். முன்பு வேர் சிகிச்சை செய்ய முடியாது என்று சொல்லப்பட்ட பல பற்களுக்கு இன்றைய நவீன சாதனங்களால் எளிதாக மற்றும் வலியின்றி வேர் சிகிச்சை செய்ய முடியும். சொத்தையினாலோ அல்லது அடிபட்டோ பற்கள் உடைந்தால் கூட வேர் சிகிச்சை செய்து பற்களை கட்ட முடியும்.
பல் ஆடினால் பல் எடுக்க வேண்டியிருக்கும் என்ற தவறான கருத்தும் பெரும்பாலானோரிடம் உள்ளது. இல்லாவிட்டால் பல் ஆடி அதுவே விழும் வரை பொறுத்திருப்பது. இது இரண்டுமே சரியான முறையல்ல. ஆடும் பற்களையும் நிலையாக்கி அதனை இயற்கை பற்கள் போல மாற்றும் சிகிச்சை பல உள்ளன. ஈறுகளை பலப்படுத்தி அதன் மூலம் பற்கள் ஆடாமல் இருக்க செய்வது, வலுவான பற்களோடு ஆடும் பற்களை இணைத்து அவற்றை பலம் பெறச்செய்வது போன்ற வழிமுறைகளால் ஆடும் பற்களை எளிதாக சரிசெய்து விடலாம்.
முன்பெல்லாம் உடைந்த பற்களை எடுப்பது தான் முதல் சிகிச்சையாக இருந்தது. இப்போது அந்த நிலை மாறி உடைந்த பற்களுக்கு கூட 'போஸ்ட் அன்ட் கோர்' எனும் சிகிச்சை மூலம் இழந்த பலத்தை சரிசெய்து அதன் மேல் 'கேப்' போடலாம். சொத்தை பற்கள், ஆடும் பற்கள், உடைந்த பற்கள் அனைத்திற்கும் பல் எடுக்காமல் செய்யும் நவீன சிகிச்சைகள் உள்ளன.
-டாக்டர் கண்ணபெருமான், பல் மருத்துவ நிபுணர், மதுரை
ராஜாத்தி, வடமதுரை: குடி பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் எனது கணவருக்கு ஏற்பட்டு அதற்காக முயற்சிக்கும் போது கை நடுக்கம், பதட்டம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. ஆலோசனை கூறுங்கள்.
நீண்ட காலமாக அதிகமாக குடிக்கும் ஒருவர் திடீரென மது பழக்கத்தை நிறுத்தும்போது லேசான அறிகுறிகளாக பதட்டம், துாக்கமின்மை, குமட்டல், வாந்தி, நடுக்கம், வியர்வை காணப்படும். மிதமானது முதல் தீவிரமான அறிகுறிகளாக இதய துடிப்பு, ரத்த அழுத்தம் அதிகரிப்பு, மாய எண்ணங்கள் என்று சொல்லப்படும் இல்லாதவற்றை பார்ப்பது, கேட்பது, டெலிரியம் எனப்படும் கடுமையான குழப்பம், வலிப்பு தாக்கங்கள் காணப்படும். ஒருவர் குடிக்கும் அளவு அதன் தீவிரத்தை பொறுத்து இந்த அறிகுறிகள் சில நாட்கள் முதல் பல வாரங்கள் வரை இருக்கும். இவ்வாறான சூழ்நிலையில் மனநல டாக்டரை அணுகி அவரது ஆலோசனைபடி சிகிச்சை எடுத்தால் விரைவில் குணமாகி இயல்பான வாழ்க்கை முறைக்கு திரும்ப வைக்கலாம்.
-டாக்டர் ஆர்.பாலகுரு, மூளை நரம்பியல் மன நல மருத்துவர், வடமதுரை
எம்.ஜெயந்தி, கூடலுார்: எனக்கு வயது 50 ஆகிறது. சேரில் நீண்ட நேரம் உட்காரும் போதும், பஸ்சில் பயணம் செய்யும் போதும் கால் வீங்கி விடுகிறது. இதற்கு காரணம் மற்றும் தீர்வுகூறுங்கள்.
கால் அடிக்கடி இதுபோன்று வீங்கும்போது மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெற்றும், மருத்துவ பரிசோதனை செய்தும் தீர்வு காண வேண்டும். பொதுவாக நரம்பு பிரச்னை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உப்புச்சத்து உள்ளவர்களுக்கு இது போன்ற பிரச்னை இருக்கும். கம்ப்யூட்டரில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கும், நீண்ட நேரம் நிற்கும் பஸ் கண்டக்டர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கால் வீக்கம் வரலாம். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும் போது சற்று ஓய்வெடுக்கும் வகையில் சிறிது நடக்க வேண்டும். அந்த நேரத்தில் தண்ணீர் குடித்துவிட்டு சிறிது நேரத்துக்கு பின் மீண்டும் பணியை துவக்கலாம். நரம்பு பிரச்னையால் கால் வீக்கம் ஏற்படும் போது இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்புள்ளது.
- டாக்டர் காஞ்சனா, அரசு மருத்துவர், ஆரம்ப சுகாதார நிலையம், கூடலுார்
எஸ்.யாழினி, ராமநாதபுரம்: கர்ப்பிணியான எனக்கு தலை வலி, பார்வை மங்குதல், வாந்தி போன்றவை தொடர்ந்து இருக்கிறது. எதனால் ஏற்படுகிறது. மீள்வது எப்படி
கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அவர்களுக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்படும். தலைவலி, பார்வை மங்குதல், மேல் வயிற்றில் வலி, வாந்தி போன்ற பிரச்னைகள் இருந்தால் சிகிச்சை பெற வேண்டும்.
பெரும்பாலான கர்ப்பிணிகள் மிகவும் அசட்டையாக இருந்து விட்டு இறுதி நேரத்தில் வருகின்றனர். அப்போது அவர்களுக்கு வலிப்பு ஏற்பட்டு குழந்தைக்கும், தாய்க்கும் பிரச்னைகளை ஏற்படுத்தும். கர்ப்பிணியாக இருக்கும் போது ரத்த அழுத்தம் ஏற்பட்டால் கண், இதயம், கல்லீரல், சிறுநீரகம் என அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும்.
கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் பாதிப்பு இருந்தால் சிறுநீர் மிக, மிகக் குறைவாக செல்லும். ரத்த அழுத்தம் பாதிப்பு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விழிப்புணர்வு கர்ப்பிணிகளுக்கு ஏற்பட வேண்டும். அப்போது தான் ரத்த அழுத்தம் பாதிப்பிலிருந்து விடுபட முடியும். இல்லை என்றால் வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
- டாக்டர் ஜி.சொரூபராணி, மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
எஸ்.சரவணன்,சிவகங்கை: மன அழுத்தம் ,சோர்வை எவ்வாறு சரி செய்வது
துாக்கமின்மை, படபடப்பு, எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு அதிகமாக மனச்சோர்வு, மன அழுத்தம் உருவாகிறது. இவர்கள் பெரும்பாலும் தனிமையை விரும்புவார்கள். இவர்களில் ஒரு சிலருக்கு பசி அதிகமாக இருக்கும், ஒரு சிலருக்கு பசியே எடுக்காது. எந்த வேலையை செய்தாலும் கடினமானதாக உணர்வார்கள். டிவி பார்ப்பது, பாடல் கேட்பது புத்தகம் படிப்பது போன்றவற்றில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள். யாரிடமும் அதிகமாக பேசாமல் அதே நேரத்தில் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு கோபப்பட கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களை தனிமையில் விடக்கூடாது. மன அழுத்தம் அதிகமானால் தற்கொலை எண்ணங்கள் கூட வரக்கூடும்.
சிலருக்கு மன அழுத்தத்தால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இரதய நோய், அல்சர் உள்ளிட்ட உடல் பாதிப்பு வரக்கூட வாய்ப்பு உள்ளது. இவற்றை உணர்ந்தால் உடனடியாக அருகில் உள்ள மனநல டாக்டரை அணுக வேண்டும்.
- டாக்டர் முகமது ரபி, மனநல மருத்துவர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை
வரதராஜன், விருதுநகர்: என் குழந்தைக்கு ஒன்றரை வயதாகிறது. கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. பொன்னுக்கு வீங்கி நோய் என நினைக்கிறேன். சரியாக என்ன செய்ய வேண்டும்.
கன்னம் வீங்கி காணப்பட்டால் நெறிகட்டி உள்ளது என பெற்றோர் வீட்டிலே இருந்து விடுவர். டாக்டரிடம் சென்று ஆலோசனை பெறுவது அவசியம். இது 'மம்ப்ஸ்' எனப்படும் வைரஸ் கிருமியால் ஏற்படும் நோய். பெரிதாக கவலைப்பட தேவையில்லை. உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி காரணமாக தானாக சரியாகிவிடும். நல்ல நீர்ச்சத்து கொடுக்க வேண்டும்.
காய்ச்சல் வந்தால் மருத்துவரின் அனுமதியோடு தேவைப்பட்ட அளவு மருந்து கொடுக்க வேண்டும். மற்ற குழந்தைகளுக்கு பரவாதவாறு குழந்தையை தனிமைப்படுத்த வேண்டும். வீக்கம் குறைந்த உடன் சகஜமாக இருக்க விடலாம். எம்.எம்.ஆர்., தடுப்பூசி போட்டு கொண்டால் பொன்னுக்கு வீங்கி வராமல் தடுத்து கொள்ளலாம். மற்ற குழந்தைகளுக்கு பரவுவதையும் தடுத்து கொள்ளலாம். கை கழுவுவது, எங்கு சென்றாலும் தண்ணீரை எடுத்து செல்வது போன்ற சுகாதாரமான பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.
- டாக்டர் அரவிந்த்பாபு, குழந்தைகள் நல நிபுணர், விருதுநகர்