
செந்தாமரைச்செல்வி, மதுரை: கண் வறட்சி ஏற்படுவது ஏன்
தற்போது வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் கண் வறட்சி ஏற்படுகிறது. கண்ணில் போதிய ஈரத்தன்மை இல்லாததால் இது ஏற்படுகிறது. இதனால் கண் ஒட்டியிருப்பது போன்ற உணர்வு, கண் எரிச்சல், கண் வலி, கண்ணை திறக்க சிரமம், தலைவலி ஏற்படுகிறது.
வாதநோய் உள்ளவர்களுக்கும் கண் வறட்சி ஏற்படும். எதற்காக கண் வறட்சி ஏற்படுகிறது என்பதை முதலில் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும். தலைக்கு நல்ல குளிர்ச்சி, குறிப்பாக கண்ணிற்கு குளிர்ச்சி, குளுமை அவசியம். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பதோடு உணவில் நெய்யை சேர்க்க வேண்டும். கீரைகள், நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். மசாலா உணவு, பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. கண்ணிற்கு வெளியே நெய், ஆமணக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும்.
கால் உள் பாதம், உள்ளங்கையிலும் நெய் தடவலாம். மது அருந்துபவர்கள், அதிகநேரம் ஏசியில் இருப்பவர்கள், போதிய துாக்கம் இல்லாதவர்களுக்கு கண்ணில் சூடு ஏற்பட்டு வறட்சி ஏற்படும். ஏசியில் இருக்கும் போது உடலின் ஈரத்தன்மை குறைகிறது. எனவே சிறிது நேரம் ஏசியை தவிர்த்து காற்றோட்டமான இடத்தில் அமர்வது நல்லது. சிறிய அளவில் ஏற்படும் கண் வறட்சியை கவனிக்காவிட்டால் பின் அதிகமாகி வேறு பல விளைவுகளை ஏற்படுத்தும்.
-- டாக்டர் என். நாராயணன் நம்பூதிரி, ஆயுர்வேத கண் மருத்துவ நிபுணர், கூத்தாட்டுக்குளம், கேரளா
ஆர்.கண்ணபிரான், வேடசந்துார்: மழை காலத்தில் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் என்ன செய்வது.
மழைக்காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் காய்ச்சிய நீரைத்தான் குடிக்க வேண்டும். குடிக்கிற நீரால்தான் பெரும்பாலான பாதிப்புகள் ஏற்படுகின்றன. சுயமாக மருந்துகளை வாங்கி உண்ணக்கூடாது. தட்டணுக்கள் குறைந்தால் பயப்படத் தேவையில்லை. அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. தற்போது பரவும் காய்ச்சல் பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகிறது. மக்கள் பீதியடைய தேவையில்லை. பொது இடங்களுக்கு சென்று வருவோர் மாஸ்க் அணிவது நல்லது.
- டாக்டர் லோகநாதன், தலைமை மருத்துவர். அரசு மருத்துவமனை, வேடசந்துார்
ஆ.யாழினி, போடி: எனக்கு பெண் குழந்தை பிறந்து 8 மாதங்கள் ஆகின்றன. பச்சை நிறத்தில் இயற்கை உபாதை கழிப்பது 3 நாட்களாக தொடர்கிறது. குழந்தை சோர்வாக உள்ளாள்.இதற்கான தீர்வுதான் என்ன.
பிறந்த குழந்தைக்கு பச்சை நிறத்தில் மலம் வெளியேறும்; அதனால் பயப்படத் தேவையில்லை. ஆனால் 8 மாத குழந்தை என்றால் தொற்று ஏற்பட்டிருப்பதற்கு வாய்ப்புள்ளது. பயப்பட வேண்டாம். சீதோஷ்ண நிலை காரணமாக வயிற்றுபோக்கு ஏற்படுகிறது. உணவுமுறை மாற்றம், தாய்ப்பால் குடிக்கும் அளவு, தாயின் உணவு பழக்கம் வேறுபாடு உள்ளிட்ட காரணங்களால் இம்மாதிரி பாதிப்பு ஏற்படும்.
சிறுநீர் கழிப்பது நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 6 முறையாவது இருக்க வேண்டும். குழந்தை பிறந்த போது தாய்ப்பால் கொடுக்க வேண்டிய வழிமுறைகள், இணை உணவு எப்போதுகொடுக்க வேண்டும் என அட்டவணைப்படி வழங்குவோம். இதனை முறையாக பராமரிக்காவிட்டால் இம்மாதிரி தொற்று ஏற்படும்.
குழந்தை சிறுநீர் அடிக்கடிகழிப்பதால் 'டயாப்பர்' பயன்படுத்துவர். இதில் படுக்கையில் போர்வைத்துணி உள்ளிட்டவற்றை அடிக்கடி சுடுநீரில் துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். 'டயாப்பர்' நிர்ணயிக்கப்பட்டநேரத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது. அதுதவிர தாய் சேய் பயன்படுத்தும் அறை, கழிப்பறைகளை சுகாதாரமாக தொடர்ந்து பராமரிப்பதும் சிறந்த தீர்வாக அமையும்.
- டாக்டர் செல்வக்குமார், குழந்தைகள் சிகிச்சைத்துறை தலைவர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, தேனி
என்.சங்கீதா, ராமநாதபுரம்: அடிக்கடி தலைச்சுற்றுகிறது. இதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்.
ரத்த அழுத்தம் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தால் தலைச்சுற்றல் இருக்கும். மன அழுத்தம் காரணமாக பலருக்கு ரத்த அழுத்தத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. தலைச்சுற்றல் ஏற்பட்டால் ரத்த அழுத்த பரிசோதனை செய்ய வேண்டும்.
உணவு, குடிநீர் போன்றவற்றை முறையாக எடுத்துக்கொள்ளாததால் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படும். ரத்த அழுத்தத்தால் ஒருவருக்கு இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு இருந்தால் தலைச்சுற்றல் இருக்கும். ரத்த பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகம் செயலிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
-டாக்டர் ஏ.அஷிதா, பொது மருத்துவ நிபுணர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
அ.சண்முகம்,சிவகங்கை: புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் அதிலிருந்து முழுமையாகக் குணமடையலாம். உடலில் உள்ள உறுப்புகளில் எங்கே வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம்.
புற்றுநோய் உள்ளவர்களுக்கு உடல் எடை குறைந்து கொண்டே வரும். இது அனைத்து வகையான புற்றுநோய்க்கும் பொருந்தும். உடல் எடை திடீரென்று குறைந்தால் அது குறித்து விழிப்புணர்வு தேவை. எவ்வளவு விருப்பமான உணவைக் கொடுத்தாலும் அதை உண்ண விருப்பம் இருக்காது.
உடலில் உள்ள தோல்கள் வெளுத்து வறட்சியாகக் காணப்படும். ரத்தசோகை வந்தவரைப் போல அறிகுறி தென்படும். ரத்த ஓட்டம் இருக்காது. 20 வயது இளைஞர் 50 வயது முதியவர் போல் காட்சி தருவார். எந்த உறுப்பில் புற்றுநோய் பாதிப்பு உள்ளதோ அதற்கு ஏற்ப உடல் பிரச்னைகள் உருவாகும். நுரையீரல் என்றால் ரத்தவாந்தி, மூச்சு விடமுடியாமல் தவிப்பது, தொடர்ச்சியாக இருமல் என வரும். அதே கிட்னி புற்று எனில் சிறுநீரில் ரத்தம் வெளியேறலாம். சிறுநீர் சரியாக வராமல் இருக்கலாம். வலி ஏற்படலாம். ஆகவே எந்த உறுப்பாக இருந்தாலும் அதில் ஏற்படும் மாற்றங்களைக் கவனமாக கண்டறிய வேண்டும். முதல்நிலை உள்ள புற்றுநோய் என்பது பெரிய அளவில் அறிகுறிகளைக் காட்டாமல் இருக்கும். அதனால் பலர் அலட்சியமாக இருந்து விடுவர். ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாதவருக்கும் புற்றுநோய் பாதிப்பு வரக்கூடும். அதற்கு மரபணு சார்ந்த பிரச்னைகள் முக்கிய காரணம்.
- டாக்டர் மு.தென்றல், மகப்பேறு நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை
கி.பர்வத வர்த்தினி, விருதுநகர்: முதுகில் அடிக்கடி வலி ஏற்படுகிறது. என்ன செய்தால் சரியாகும்
பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் எலும்பு தேய்மானம் ஏற்படும். இது போன்ற பிரச்னைகள் ஆண்களை விட அதிக அளவில் பெண்களுக்கு தான் இருக்கும். கால்சியம் சத்து குறைபாடு அடையும் போது வலிகள் ஏற்படுவது எதார்த்தம். பயப்பட தேவையில்லை. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கால்சியம் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். சீரான உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி மிகவும் அவசியம். ஒருவேளை அதிக வலி இருக்கும்பட்சத்தில் டாக்டரை அணுகலாம்.
-டாக்டர் குருசந்தர், பொது மருத்துவர், கல்குறிச்சி