sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டரை கேளுங்கள்

/

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்


PUBLISHED ON : பிப் 23, 2025

Google News

PUBLISHED ON : பிப் 23, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்வாதி, மதுரை: பல் தேய்மானம், கூச்சம் போக்க என்ன செய்ய வேண்டும்?

பற்களின் மேல்பகுதி எனாமல் எனப்படும். இந்த எனாமல் தேய்ந்து பற்களின் உள்பகுதி வெளியே தெரியும் போது பல் கூச்சம் ஏற்படுகிறது. மிக அழுத்தமாக பல் தேய்ப்பது, அதிகமாக குளிர்பானங்கள் குடிப்பது, பற்களை கடிப்பது போன்றவை பல் கூச்சத்திற்கு காரணங்கள்.

நாம் உண்ணும் உணவும் பல் கூச்சத்திற்கு ஒரு காரணம். பெரும்பாலான குளிர்பானங்களில் அமிலத்தன்மை உள்ளது. சாக்லேட், வாயில் ஒட்டும் மிட்டாய்களில் அதிகளவு சர்க்கரை உள்ளது. இவை பற்களின் வெளிப்புறத்தில் இருக்கும் எனாமல் படலத்தை அரிக்கும். ஒருமுறை எனாமல் அரிக்கப்பட்டால் மறுமுறை உருவாகாது. மேலும் சொத்தை வருவதற்கான வாய்ப்பும் அதிகம். துாங்குவதற்கு முன்பாக பல் துலக்குவது அவசியம். ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின் வாயை கழுவ வேண்டும்.

சிலருக்கு வயதாகும் போது எனாமல் தேயும். பல் கூச்சத்தை ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக சரிசெய்ய வேண்டும். மிக குறைவாக எப்போதாவது பல் கூச்சம் வந்தால் ஆரம்பநிலை தேய்மானம் என்று அர்த்தம். இதற்கென டூத்பேஸ்ட், கிரீம்கள் உள்ளன.

- டாக்டர் ஜெ.கண்ணபெருமான், பல் சீரமைப்பு நிபுணர், மதுரை

பூங்கொடி, ஒட்டன்சத்திரம்: தட்ப வெப்பநிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல் வருவது ஏன், வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

வழக்கமாக பருவநிலைமாறும் போது பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் விழித்தெழுந்து வீரியம் பெற்று மக்களை தாக்க புறப்படுகின்றன. மக்கள் மழையில் நனைகிறபோது இந்த கிருமிகள் பரவுவதற்கு ஏதுவாகின்றன. அந்த நேரம் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியோர்கள், இணை நோய் உள்ளவர்கள் முதலில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் தான் மழைக்காலத்தில் நோய்களும், நோயாளிகளும் அதிகரிப்பதை காண்கிறோம்.இவற்றை தடுக்க கைகால் முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். மழைக்காலத்தில் மக்கள் கூடும் பொது இடங்களுக்கு தேவையில்லாமல் செல்லாதீர்கள். பத்து நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டிய தண்ணீரை குடியுங்கள். திறந்து வைக்கப்பட்ட உணவுகள், ஈக்கள் மொய்த்த உணவுகள் வேண்டாம். சாலையோர உணவகங்களில் சாப்பிட வேண்டாம். வீட்டையும் தெருக்களையும் சுத்தப்படுத்தி பிளீச்சிங் பவுடர் துாவினால் ஈக்கள் வராது. மழை காலத்தில் அவசியம் செருப்பு அணிந்து தான் தெருக்களில் நடக்க வேண்டும்.

-- டாக்டர். பி.முருகேசன், பொதுநல மருத்துவர், ஒட்டன்சத்திரம்

எஸ்.தாரணி, ஆண்டிபட்டி: வளரும் சில குழந்தைகளுக்கு பல் வரிசை சீரற்ற முறையில் உள்ளது. இதற்கு காரணம் என்ன. சரி செய்ய முடியுமா?

குழந்தைகளுக்கு 6 மாதம் முதல் பல் முளைக்க துவங்கும். 15 மாதம் வரை கூட தாமதம் ஆகலாம். பெற்றோர்களுக்கு தாமதமாக பல் முளைத்திருந்தால் அது குழந்தைக்கும் தொடரும். குறிப்பிட்ட பருவத்தில் படிப்படியாக முளைக்கும் பற்கள் சரியாகவே இருக்கும். முதலில் முளைக்கும் பால் பற்கள் அளவில் சிறியதாக இருக்கும். முளைத்த பற்கள் ஆறு வயது முதல் விழுந்து மீண்டும் முளைக்கும். 8 முதல் 9 வயதாகியும் பல் விழவில்லை என்றால் பால் பற்களை எடுத்து விட வேண்டும். சரியான பருவத்தில் பற்கள் விழுந்து முளைக்கவில்லை எனில் சீரற்று முளைக்க வாய்ப்புள்ளது.12 வயதாகியும் பால் பற்கள் விழவில்லை எனில் மருத்துவர் ஆலோசனைப்படி அதனை பிடுங்கி விட வேண்டும். குழந்தைகளின் உணவு முறையால் பல் சொத்தை வர வாய்ப்புள்ளது. சில குழந்தைகளுக்கு பிறந்து 15 மாதம் வரை பற்கள் முளைக்காமல் இருக்கும். ஈறுகளில் கெட்டித் தன்மையால் இப்பாதிப்பு ஏற்படும். பற்கள் முளைக்கவில்லை எனில் டாக்டரின் ஆலோசனைப்படி ஈறுகளை கீறி விட வேண்டும். சீரற்ற பல் வரிசைகளை சரி செய்துவிடலாம். குழந்தைகளுக்கு பல் பராமரிப்பு மிக அவசியம்.

டாக்டர் ச.ஆசிபா ஜெய்ஸ்ரீ, பல்மருத்துவ நிபுணர், ஆண்டிபட்டி

பி.வனிதா, ராமநாதபுரம்: மூட்டு வலியால் சிரமப்பட்டு வருகிறேன். சித்த மருத்துவத்தில் இதற்கான தீர்வு உண்டா?

முதியவர்களுக்கு அதிகளவில் கால்சியம் குறைபாட்டால் மூட்டு வலி ஏற்படும். மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் அமுக்கரா சூரணம், சங்குபஸ்பம், நில வேம்பு கஷாயம் சாப்பிட்டால் வலியை கட்டுப்படுத்தும். இரவு நேரங்களில் குந்திரீகம் தைலம், கற்பூராதி தைலத்தை மூட்டு வலி உள்ள இடங்களில் தேய்த்து வர வலி குறையும்.

மூட்டு வலி தீவிரமாகி கால் வளையும் நிலை முதியவர்களுக்கு ஏற்பட்டால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையால் மட்டுமே சரி செய்ய முடியும். யோகா மருத்துவப்பிரிவில் மூட்டு வலிக்கு தொக்கன சிகிச்சையும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மூட்டு வலிக்கான தீர்வுகளை பெறலாம்.

- டாக்டர் புகழேந்தி, சித்த மருத்துவப்பிரிவு, அரசுமருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்-

சி. மோகன்,சிவகங்கை: குடலிறக்க அறிகுறி என்ன?

இன்றைய சூழலில் குடலிறக்கம் பரவலாக காணப்படுகிறது. வயிற்று தசைகள் பலவீனமடைவதால் குடலிறக்கம் ஏற்படுகிறது. நாள்பட்ட தொடர் இருமல், மலச்சிக்கல், சிறுநீர் கழிப்பதில் தொந்தரவு இருப்பவர்களுக்கும், அதிக எடை துாக்குபவர்களுக்கும் குடலிறக்கம் வரக்கூடும். மார்பு மற்றும் இடுப்புக்கு இடையில் வயிற்றுப் பகுதியில் குடலிறக்கம் ஏற்படுகிறது. குடலிறக்கம் பாதிப்பு ஏற்பட்டால் வலியை ஏற்படுத்தும். நடக்கும்போது, ஓடும்போது மாடிப்படி ஏறும்போது ஏதோ ஒன்று பிடித்து இழுப்பது போன்ற வலி ஏற்படும். சிலருக்கு காய்ச்சல் ஏற்படும். குடலிறக்கத்திலும் இடுப்பு குடலிறக்கம், வென்ட்ரல் குடலிறக்கம், தொப்புள் குடலிறக்கம், எபிகாஸ்ட்ரிக் குடலிறக்கம் என சில வகை உண்டு.

நமது உடலில் சில மாற்றங்களால் இருமல் தானே, மலச்சிக்கல் தானே என்று கவனக்குறைவாக இருக்கக்கூடாது. இந்த அறிகுறி இருந்தாலே அருகில் உள்ள டாக்டரை அணுக வேண்டும்.

- டாக்டர் எம்.எஸ்.முகம்மது இர்பான், உதவி பேராசிரியர் அறுவை சிகிச்சை நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை

சு. சுமித்ரா, சிவகாசி: எனக்கு 27 வயது ஆகிறது. மாதவிடாய் காலங்களில் வயிறு அதிகமாக வலிக்கிறது. எழுந்து நடமாடுவதே சிரமமாக உள்ளது. தவிர்க்க என்ன செய்யலாம்?

மாதவிடாய் காலங்களில் வலி வருவது இயல்புதான். வலி வராமல் இருப்பதற்கு இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக் கீரை, பேரிச்சம் பழம் போன்றவற்றை சாப்பிட வேண்டும். பயறு வகைகள், சத்தான உணவு பொருட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக வலி இருக்கும்போது டாக்டரின் ஆலோசனையின் பேரில் வலி நிவாரண மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.வலியை குறைப்பதற்கு அடிவயிற்றில் ஐஸ் பேக் வைத்துக் கொள்ளலாம். சுடு தண்ணீரும் வைக்கலாம்.

- டாக்டர் கவிதா, மகப்பேறு நிபுணர், அரசு மருத்துவமனை, சிவகாசி






      Dinamalar
      Follow us