sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டரை கேளுங்கள்

/

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்


PUBLISHED ON : மார் 02, 2025

Google News

PUBLISHED ON : மார் 02, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முருகேஸ்வரன், மதுரை: எனக்கு 45 வயது. இந்த வயதில் கல்லீரல் பரிசோதனை செய்வது நல்லது என்கின்றனர். எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. எதற்காக பரிசோதனை செய்ய வேண்டும்.

முறையான உணவுப்பழக்கத்தை கடைப்பிடித்து உடற்பயிற்சி செய்து நோய் தொந்தரவு இல்லாத ஆரோக்கியமான நபர் என்றால் 40 வயது வரை கல்லீரல் பற்றி கவலைப்படவோ பரிசோதனை செய்யவோ தேவையில்லை. 40 வயதிற்கு மேல் வயதின் காரணமாக இயற்கையாகவே உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். உடல் செல்களில் மாற்றங்கள் ஏற்படலாம், செல்கள் வளராது. அந்த நேரத்தில் நமது உடலின் தேவையை கல்லீரல் தரமுடியாமல் போகும் போது சில நோய்கள் ஏற்படும்.

மஞ்சள் காமாலை, கண்ணில் நிறம் மாறுதல், உடல் அரிப்பு, மலத்தின் மஞ்சள் தன்மை குறைந்து நிறம் மாறுவது, சிறுநீர் நிறம் மாறுதல், கை, கால் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது கல்லீரல் பாதிப்பின் அறிகுறி. அவர்கள் உடனே கல்லீரல் பரிசோதனை செய்ய வேண்டும். இதுதவிர கல்லீரலை பாதிக்கும் பழக்கவழக்கங்களை வைத்திருப்பவர்களும் பரிசோதனை செய்ய வேண்டும்.

மது அருந்துபவர்கள், சர்க்கரை, கொழுப்புச்சத்து அதிகமுள்ளவர்கள், வைரஸ் தாக்குதல் உள்ளவர்கள், உடல்பருமன் உள்ளவர்கள் எந்த தொந்தரவும் தெரியவில்லை என்றாலும் கல்லீரல் பரிசோதனை செய்வது அவசியம்.

- டாக்டர் பி. ராஜேஷ்பிரபு, வயிறு, இரைப்பை, கல்லீரல் நோய்களுக்கான சிறப்பு நிபுணர், மதுரை

கண்மணி, பழநி: மெனோபாஸ் காலத்தில் கால் மூட்டு வலி வராமல் தடுப்பது எப்படி

கால்சியம் அதிகம் உள்ள பால், தயிர், மோர் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். கீரையை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். தினமும் நடைப்பயிற்சி உள்ளிட்ட சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இருக்க வேண்டும். மூட்டு வலி ஏற்படும் பெண்கள் அதிக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமல் மூட்டுகளை வளைக்காமல் சாதாரண உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். படி ஏறி இறங்குவதை தவிர்க்க வேண்டும்.

- பிரேம்சந்த், எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணர், பழநி

காயத்ரி, கம்பம்: என் மகனுக்கு அடிக்கடி சாதாரண வைரஸ் காய்ச்சல் வருகிறது. காய்ச்சல் நாட்களில் என்ன மாதிரியான உணவு கொடுக்கலாம்.

காய்ச்சல் சமயங்களில் கஞ்சி குடிப்பது நல்லது. பால் கஞ்சி முதல் கொதி கஞ்சி வரை உள்ளது. அரிசி ஒரு பங்கு, தண்ணீர் 4 அல்லது 8 பங்கு சேர்த்து வைப்பது தான் கஞ்சி. அரிசியுடன் பாதி பால், பாதி தண்ணீர் வைத்து கொதிக்க வைத்தால் பால் கஞ்சி. அரிசி, பாசிப்பயறு சேர்த்து வைத்து வைக்கும் கஞ்சி சிறுபயிறு கஞ்சி.

அரிசியுடன், தோலுடன் கூடிய உளுந்து சேர்ந்து காய்ச்சப்படுவது உளுந்தம் கஞ்சி. 100 கிராம் அரிசி, 3 லிட்டர் தண்ணீர், சுக்கு 15 கிராம் துணியில் முடிச்சாக கட்டி தொங்கவிட்டு கொதிக்க வைக்க வேண்டும். இது முடிச்சு கஞ்சி. துவரை, உளுந்து, கடலை, சிறுபயிறு, பச்சரிசி இவற்றை சமஎடை எடுத்து அவற்றை தனித் தனியே துணியில் முடித்து 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 500 மில்லியாக வற்றியவுடன் பருகலாம். இது பஞ்ச முட்டி கஞ்சி. இது தவிர நெற்பொறி கஞ்சி, கொள்ளு கஞ்சி, கோதுமை கஞ்சியும் உண்டு. காய்ச்சல் சமயத்தில் இதில் ஏதாவது ஒன்று பருகினால் நல்லது.

- டாக்டர் சுவாமிநாதன், சித்தா மருத்துவர், அரசு மருத்துவமனை, உத்தமபாளையம்

எம்.கனிஅமுது, ராமநாதபுரம்: எனது குழந்தைக்கு பார்வை குறைபாடு உள்ளது. அதற்கான சிகிச்சை என்ன.

குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடு ஏற்படும் போது பள்ளியில் போர்டில் உள்ள எழுத்துக்கள் சரிவர தெரியவில்லை என ஆசிரியர்களிடம் கூறுவார்கள். ஆசிரியர்கள் உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்.

சில நேரங்களில் ஆசிரியர்கள் இதுபோன்ற மாணவர்களை முன் இருக்கையில் அமர வைத்து அசட்டையாக விட்டு விடுவார்கள். இது அந்த குழந்தையின் பார்வைத் திறனை தொடர்ந்து பாதிக்கும். பார்வை திறன் குறையும் போது குழந்தைகள் உற்றுக்கவனித்து படிப்பதால் தலைவலி ஏற்படும்.

இதுபோல் தலைவலி ஏற்பட்டால் டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் குழந்தைகளின் பார்வைத்திறனை சரிசெய்ய முடியும்.

இல்லாவிட்டால் அதிக பவர் கொண்ட கண் கண்ணாடிகளை அணிந்து பார்வை குறைபாட்டுடன் வாழ வேண்டிய நிலை ஏற்படும். அதிக நேரம் டிவி, அலைபேசி பார்ப்பதாலும் பார்வை குறைபாடுகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும்.

- டாக்டர் ஏ.முகமது மொகைதீன், அரசு பொது நல மருத்துவர், ராமநாதபுரம்

எஸ்.சத்யா, சிவகங்கை: பெண் கர்ப்பமாக இருக்கும் போது எந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்

முதலில் ஒரு பெண் கர்ப்பம் என அறிந்தவுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று கர்ப்பத்தை உறுதி செய்ய வேண்டும். டாக்டரின் ஆலோசனைபடி முதல் மூன்று மாதங்களுக்கு கர்ப்பப்பதிவு எண், ரத்தப் பரிசோதனைகள், ஸ்கேன், போலிக் ஆசிட் மாத்திரைகள், உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். மாதந்தோறும் கர்ப்பகால பரிசோதனைக்கு செல்ல வேண்டும். கர்ப்பகாலத்தில் வரக்கூடிய ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு பிரச்னைகள், ரத்தசோகை குறித்த ஆலோசனைகளுக்கு டாக்டரின் ஆலோசனையின்றி மாத்திரைகளை உட்கொள்ளவோ, நிறுத்தவோ கூடாது.

துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ள கூடாது. பழங்கள், வீட்டில் சமைத்த உணவு, வேகவைத்த காய்களை சூடாக உண்ண வேண்டும். சுயமாக மருந்து உட்கொள்ள கூடாது. தலைவலி, தலை சுற்றல், அதிகப்படியான வாந்தி, அடிவயிற்று வலி, கால் வீக்கம், இரட்டை பார்வை, கண்பார்வை மங்குதல், ரத்தப் போக்கு, சிறுநீர் கழிப்பதில் மாற்றம் ஏற்படுதல், குழந்தை அசைவில் மாற்றம் போன்றவற்றில் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

- டாக்டர் ஆர்.எம்.நபிஷா பானு, வட்டார மருத்துவ அலுவலர், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிரான்மலை

கு.சிவராமன் ராஜபாளையம்:.எனக்கு 49 வயது ஆகிறது. குனிந்தாலும், துாங்கி எழுந்தவுடனும் தலை சுற்றலால் கீழே தள்ளுவது போல் உள்ளது. இது ரத்த அழுத்தமாக இருக்குமோ, இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்.

தலைச்சுற்றல் அனைத்துமே ரத்த அழுத்தத்திற்கான காரணம் அல்ல. அறியாமையால் அவ்வாறு முடிவு எடுக்கிறோம். அந்த நேரம் மருத்துவரிடம் சோதனை செய்தாலும் பதட்டம், புதிய சூழலால் ரத்த அழுத்தம் அதிகரித்து காணப்படலாம். இந்த வயதில் தலைச்சுற்றல் என்பது பொதுவாக எலும்பு தேய்மானத்தினால் வரும் பிரச்னையாக இருக்கலாம். இந்த ஏற்றத்தாழ்வு உள் காதில்

நகரும் திரவம் சமநிலை மாறுபாடால் வெர்டிகோவை ஏற்படுத்துகிறது. எனவே பிரச்னைக்கான காரணத்தை அறிதல் முக்கியம்.

உடலில் சோடியம், பொட்டாசியம் குறைபாடும், உறக்கமின்மை, உணவு பழக்கங்களும் தலைசுற்றலுக்கு காரணமாகலாம்.

தற்போதைய காலகட்டத்தில் அலைபேசி பயன்பாடு, மாறுபட்ட உணவுகள், உழைப்பின்மை, வெற்றுக் கவலை, ஏமாற்றம், அதீத எதிர்பார்ப்பு போன்ற பிரச்னைகளாலும் பதட்டம், துாக்கமின்மை ஏற்படுகிறது.

- டாக்டர் அலெக்சாண்டர், ஊரக தலைமை மருத்துவர், ஜமீன் கொல்லங்கொண்டான்






      Dinamalar
      Follow us