sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டரை கேளுங்கள்!

/

டாக்டரை கேளுங்கள்!

டாக்டரை கேளுங்கள்!

டாக்டரை கேளுங்கள்!


PUBLISHED ON : ஏப் 20, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 20, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணம்மாள், மதுரை: உடலில் ஏற்படும் நோய்க்கு வாயில் அறிகுறி தெரியுமா?

வாயின் ஆரோக்கியம் காப்பது உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியம். உடலில் வரும் நோய்களில் பலவற்றிற்கு வாயில் அறிகுறிகள் காணப்படும். வாயில் உள்ள கிருமிகள் முதலில் பாதிப்பது பற்களையும் ஈறுகளையும் தான்.

இந்த நோய் கிருமிகள் தான் உடலிலும் பரவும். அதே போல உடலில் உள்ள நோய்களில் பலவற்றிற்கு வாயிலும் அதன் தாக்கம் தெரியும். முக்கியமாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஈறுநோய் எளிதில் வரும் வாய்ப்புள்ளது. குடல் நோய், சுவாசக்கோளாறு, இதய நோய்களுக்கும் வாயின் ஆரோக்கியத்திற்கும் மருத்துவ ரீதியான தொடர்பு உள்ளது.

சிலருக்கு அடிக்கடி வாய் உலர்ந்து போகும். நாக்கு ஒட்டிக் கொள்வது போலிருக்கும். வாயில் எரிச்சலும் இருக்கும். இந்த நிலைக்கு 'சீரோஸ்டோமியா' என்று பெயர். உமிழ்நீர் சுரப்பது குறையும் போது இதன் அறிகுறிகள் தென்படும். இதற்கு உணவுப்பழக்கம், உடலில் இரும்புச்சத்து குறைவு, சில வகை மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, சர்க்கரை நோய், புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம் போன்ற பல காரணங்கள் உண்டு.

உமிழ்நீர் இயற்கையாகவே வாயில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்யும். அது குறையும் போது சொத்தைப் பற்கள் வரும் வாய்ப்பு 60 முதல் 75 சதவீதம் அதிகமாகிறது. இதற்கு நோயின் காரணத்திற்கு ஏற்ப சிகிச்சை செய்ய வேண்டும். இந்த அறிகுறி உள்ளவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

- டாக்டர் ஜெ.கண்ணபெருமான், பல் சீரமைப்பு நிபுணர், மதுரை

வடிவேல், ஒட்டன்சத்திரம்: வெயில் காலத்தில் ஏற்படும் தோல் பிரச்னைகளை தவிர்க்கும் வழி முறைகள் என்னென்ன?

வெயிலின் போது வியர்வை அதிகமாக உற்பத்தியாகி தோலை விட்டு வெளியேறாமல் தோலினுள் நீர் கோர்ப்பது போன்ற அலர்ஜி ஏற்படுகிறது. இதனைத்தான் வேர்க்குரு என்கிறோம். வெயிலில் விளையாடிவிட்டு முகத்தை கழுவாமல் இருப்பதால் முகப்பரு அதிகமாகலாம். வறண்ட சூடான காற்று தோல் வறட்சியை ஏற்படுத்துகிறது. இதனால் தோல் அரிப்பு ,எரிச்சல் ஏற்படுகிறது. காற்றோட்டம் இல்லாத உடை, இறுக்கமான உள்ளாடைகள் அணிதல், அடிக்கடி குளிக்காமல் இருப்பதால் தேமல், படர்தாமரை, முடியின் வேரில் சீழ் பிடித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இவற்றை தவிர்க்க அடிக்கடி நீர் அருந்துதல், வெயிலில் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்த்து இரு முறை வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். ஆண்டிபயாட்டிக் சோப் பயன்படுத்தலாம். வெயிலில் போகும் முன்பு சன் ஸ்கிரீன், மாய்ஸ்சரைசர் போன்றவற்றை உபயோகிக்கவும். கூலிங் கிளாஸ், அகன்ற தொப்பி, முழுக்கை சட்டை போன்றவை வெயில் அலர்ஜியை தடுக்க பயன்படும்.

-டாக்டர் ராஜராஜன் தங்கராஜ்,தோல், முடி, லேசர் சிகிச்சை சிறப்பு மருத்துவர், ஒட்டன்சத்திரம்

என்.முத்துபேச்சி, பெரியகுளம்: எனது 5 வயது மகன் சில தினங்களாக விழித்திருக்கும் போதும், துாங்கும் போதும் கண்களில் இருந்து தண்ணீர் வருகிறது. கண்களை அடிக்கடி தேய்த்து கொள்கிறான். தினமும் அதிக நேரம் அலைபேசியில் விளையாடும் பழக்கம் உள்ளவன்.

கண்களில் அரிப்பு, தண்ணீர் வருவது கண்விழியில் அலர்ஜியின் அறிகுறி. பயம் வேண்டாம். முன்பு குழந்தைகளுக்கு இரவில் நிலவை காட்டி உணவு ஊட்டுவர். இதனால் குழந்தைகள் நான்கு திசைகளிலும் பார்க்கும். இதனால் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் கண்களுக்கு பயிற்சி கிடைத்தது. தற்போது குழந்தை, சிறுவர்கள் உணவு சாப்பிட மறுத்தால், அவர்களை சந்தோஷப்படுத்துவதாக நினைத்து அலைபேசியை கொடுக்கின்றனர். இது முற்றிலும் தவறு. இதனால் கண் விழி படலத்தில் அலர்ஜி ஏற்படுகிறது.

கண்ணில் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் வரும். காலப்போக்கில் பார்வை பாதிக்கும் அபாயம் உள்ளது. தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் அலைபேசி, டி.வி. பார்க்கும் நேரம் அதிகரிக்கும். இதனை கட்டுப்படுத்த வேண்டும். கேரட், கீரை, காய்கறி வகைகள், மீன், முட்டை, பால் இதில் ஏதாவது தினமும் ஒன்றிரண்டு சாப்பிட சொல்ல வேண்டும். தினமும் படிப்பு சம்பந்தமாக ஒரு மணி நேரம் அலைபேசி பார்க்க அனுமதிக்கலாம். ஓவியம் வரைவது, மைதானத்தில் ஓடுவது, விளையாடுவதால் அதிக நேரம் அலைபேசி பார்க்கும் பழக்கம் குறைய வாய்ப்புள்ளது.

- டாக்டர் ஆர்.சரயு வெங்கடலட்சுமி, கண் அறுவை சிகிச்சை நிபுணர், மாவட்ட அரசு மருத்துவமனை, பெரியகுளம், தேனி

பி.சிவநேசன், ராமநாதபுரம்: அடிக்கடி தலைவலியால் அவதிப்பட்டு வருகிறேன். தீர்வு என்ன?

கண் வறட்சி நோய் பாதிப்பு இருந்தால் அடிக்கடி தலைவலி ஏற்படும். தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், அலைபேசியை பயன்படுத்துபவர்களுக்கு கண்களில் உள்ள நீர் வறண்டு தலைவலி ஏற்படுகிறது.

அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், தொடர்ந்து அலைபேசி பார்ப்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்களுக்கு 5 முதல் 10 நிமிடங்கள் ஓய்வு கொடுக்க வேண்டும். கிட்டப்பார்வையை தவிர்த்து துாரத்து பொருட்களை பார்க்க வேண்டும்.தொடர்ந்து கண்களை இமைத்து பயிற்சி எடுக்க வேண்டும். தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்ப்பதால் கண்கள் இமைப்பதை கூட மறந்து விடுகிறோம். இதன் காரணமாக கண்களில் உள்ள மைக்ரோ தசைகள் பாதிக்கப்படுகிறது.

இதனால் கண்களில் எரிச்சல் ஏற்படும். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டர் பார்ப்பதை நிறுத்த வேண்டும். அலைபேசிகள் பார்ப்பதையும் நிறுத்த வேண்டும். நன்றாக துாங்கி கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். கண்களுக்கான அலோபதி சொட்டு மருந்துகளை அடிக்கடி கண்ணில் விட்டால் கண் பார்வை பாதிப்பு குறையும். இதனால் தலைவலியும் குறையும்.

-எஸ்.ஆனந்த், கண் அறுவைசிகிச்சை நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதரம்

அ.ராமநாதன், சிவகங்கை: கோடையில் புட் பாய்சன் ஏற்படுத்தும் உணவு எவை, எவ்வாறு தடுப்பது?

கோடை காலத்தில் முழுமையாக சமையல் செய்யாமல் அரை குறையாக சமைத்த இறைச்சி உணவு, நீண்ட நேரத்திற்கு முன்பு வெட்டி வைத்த பழங்கள், முதல் நாள் சமைத்த உணவை மறுநாள் சாப்பிடுவது புட் பாய்சனை ஏற்படுத்தும். புட் பாய்சனால் வயிற்றுப் பிரச்னை ஏற்படும். கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும். வாந்தி அல்லது குமட்டல், வயிற்று வலி, உடல் சோர்வு, வாய் வறட்சி, சிறுநீர் குறைவு, மயக்கம், பார்வை மங்கல், தசை பலவீனம் உள்ளிட்ட அறிகுறி தென்படும். ஆகையால் கோடைகாலத்தில் காய்கறிகள் பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்தவும். உணவை முழுமையாக சமைக்க வேண்டும். வெளியில் திறந்து வைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். கையை அடிக்கடி கழுவ வேண்டும்.

- டாக்டர் மு.தென்றல், மகப்பேறு நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை

சிவராமன், ராஜபாளையம்: வெயில் காலத்தில் வெளியே சென்று வரும் போது கண்கள் சிவந்து பாதிப்பிற்கு உள்ளாகிறது. முறையான சிகிச்சை முறைகளை தெரிவியுங்கள்?

வெயில் காலங்களில் உடலில் நீர்ச்சத்து குறைவதுடன் 'அல்ட்ரா வைலட்' பாதிப்புகளால் கண்கள் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இவற்றை தடுக்க யு.வி. கண்ணாடி அணிதல் வேண்டும். உணவில் வைட்டமின் சி, இ எடுத்துக் கொள்வதும், நீச்சல் குளங்களில் குளிக்கும் போது குளோரின் பாதிப்பை தடுக்க கண்ணாடியை அணிவதும் கண்களை பாதுகாக்கும் நடைமுறை.

- டாக்டர் பிரபு பாண்டியன், கண் சிகிச்சை நிபுணர், அரசு பொது மருத்துவமனை, ராஜபாளையம்






      Dinamalar
      Follow us