sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டரை கேளுங்கள்...

/

டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...


PUBLISHED ON : ஆக 24, 2025

Google News

PUBLISHED ON : ஆக 24, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வசந்தி, மதுரை: கோவிட் காலத்தில் நுரையீரல் பாதிப்பால் பலர் இறந்தனர். தொற்று முதலில் நுரையீரலை பாதிப்பது ஏன்?

கொரோனா வைரஸ் இருமல், சளி மூலம் காற்றினுள் கலக்கிறது. மேலும் அருகில் இருப்பவர்கள் அக்காற்றினை சுவாசிப்பதன் மூலம் மூக்கு, வாய் வழியாக நுரையீரலுக்குள் சென்று நிமோனியாவை ஏற்படுத்துகிறது. கொரோனா கிருமி நுரையீரலில் புகும் போது சிலருக்கு நுரையீரலையும் இதயத்தையும் இணைக்கும் குழாயில் ரத்தக்கட்டி போன்ற பல பாதிப்புகளுடன் மரணம் வரை ஏற்படுத்தியது.

காற்றில் பரவக்கூடிய கிருமிகளான வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை ஆகியவை மூக்கு, வாய் வழியாக நுரையீரலுக்குள் சென்று அங்கு நிமோனியாவை ஏற்படுத்தும். உதாரணமாக 'மைக்கோ பாக்டீரியம் டியூபர்க்ளோசிஸ்' எனும் பாக்டீரியா, கொரோனா போல காற்றில் பரவி அக்காற்றை சுவாசிப்பவர்களின் நுரையீரலுக்குள் சென்று காசநோயை உண்டாக்குகிறது. காற்றினால் பரவும் அனைத்து கிருமிகளும் நுரையீரலில் பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

- டாக்டர் பி.பிரேம் ஆனந்த், நுரையீரல் நோய் சிறப்பு நிபுணர், மதுரை

கந்தசாமி, பழநி: சர்க்கரை நோய் வருவதை அறிகுறிகள் மூலம் முன்கூட்டியே அறிந்து தடுப்பது எப்படி?

சர்க்கரை நோய் வருவதை முந்தைய அறிகுறிகளை வைத்து முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். கண்களை சுற்றி மரு ஏற்படுதல், கை, கால்கள் திடீரென மரத்துப் போகுதல், உணவு சாப்பிட்ட பிறகு உடனடியாக ஏதாவது இனிப்பு சாப்பிட தோன்றும் உணர்வு, உடல் சோர்வு எப்போதும் இருப்பது போன்று தோன்றுவது, பெண்களுக்கு பி.சி.ஓ.டி., பிரச்னை ஏற்படுவது போன்றவை சர்க்கரை நோய் வருவதற்குரிய அறிகுறிகள். இது போன்ற அறிகுறிகள் ஏற்படும் போது மருத்துவர்களை அணுகி அதற்கான மருத்துவத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

- டாக்டர் அரசு, பொது மருத்துவர். பழநி

நவநீதன், அல்லிநகரம்: தலையின் ஒரு பகுதியில் தோல் அரிப்பு அதிகம் உள்ளது. சொறிந்தால் தோல் உரிந்து வருகிறது. சில நேரத்தில் அந்த இடத்தில் புண் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு தடுக்கலாம்?

தலையில் அரிப்பு ஏற்படுவதற்கு பொடுகு பிரச்னை காரணமாக இருக்கலாம். இந்த வகை அதிகம் பதின் பருவத்தினரை பாதிக்கும். இதனை தவிர்க்க வாரத்திற்கு 3,4 நாட்கள் நன்கு குளிக்க வேண்டும். தலைக்கு ஷாம்பூ பயன்படுத்த வேண்டும். தலையில் அதிகம் எண்ணெய் வைப்பதை குறைக்க வேண்டும். தோல் உரிந்து வருகிறது என்றால் அது சீபோ சொரியாஸிஸ்' ஆக இருக்கலாம். இது உடலில் எதிர்ப்பு சக்தி குறைவு, மரபணு மூலம் ஏற்படலாம். தலைமுடி வேர்பகுதியில் அதிக எண்ணெய் படிதல், தலையை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட காரணத்தால் இந்த சொரியாஸிஸ் ஏற்படுகிறது. மருத்துவரை அணுகி அவர்கள் வழங்கும் லோஷன், மாத்திரகளை எடுத்து வந்தால் இந்த வகை சொரியாஸிஸ் நோயை கட்டுப்படுத்தலாம்.

- டாக்டர் சந்தியா, தோல் மருத்துவர், பழனிசெட்டிபட்டி, தேனி

கோகிலா, ராமநாதபுரம்: எனக்கு 45 வயதாகிறது. கடந்த ஓராண்டாக மாதவிடாய் 3 முதல் 4 மாதத்திற்கு ஒரு முறை ஏற்படுகிறது. இதனால் வழக்கத்தை விட அதிக வலி ஏற்படுகிறது. இதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வு கிடைக்குமா?

40 வயதுக்கு மேல் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று தான். அதனால் பயப்பட வேண்டாம். இதற்கு பெரிமெனோபாஸ் என்று பெயர். தொடர்ந்து 4 மாதம் முதல் 8 மாதம் வரை நடக்கும். கருப்பை குறைந்த ஈஸ்ட்ரோஜனை எடுத்துக் கொள்வதால் இது போன்ற நிலை ஏற்படும். இந்த நேரத்தில் பெண்களுக்கு தைராய்டு ஹார்மோன்மாற்றம் கூட ஏற்படும். இதற்கு சித்த மருத்துவம் மூலம் தீர்வு காணப்படும். அசோகப்பட்டை சேர்ந்த மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர் விட்டான் லேகியம், அஸ்வகந்தம், விதை மல்லிகள், பிளாக்சி எனும் ஆழிவிதை பரிந்துரைக்கப்படுகிறது.

இவை தவிர்த்து பெண்கள் பாதாம், அத்திப்பழம், பீட்ருட், நெல்லிக்காய் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் மாதவிடாய் காலத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். திரிபலா எனும் பொடி எடுத்துக் கொள்வதன் மூலம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும்.உணவு பழக்கத்தை தாண்டி தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இந்த நேரத்தில் அதிகப்படியான வியர்வை வரும். அதை குறைக்க வேண்டும் என்றால் காபி, காரமான உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வருடம் மாதவிடாய் ஏற்படவில்லை என்றால் அந்த பெண்ணுக்கு மெனோபாஸ் எனும் மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படும்.

- டாக்டர் சுஜாதா, சித்த மருத்துவர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்

அ.சத்யஜோதி, சிவகங்கை: உறவுக்கார பெண்ணிற்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவள் அழுவதும் கோபப்படுவதுமாக இருக்கிறாள். குழந்தையை கவனிப்பதில்லை, என்ன செய்வது?

பிரசவத்திற்கு பின் இவ்வாறு சில பெண்களுக்கு ஏற்படுவது இயல்பானது. காரணம் இன்றி அழுகை, சோகம், மன அழுத்தம் ஏற்படும். துாக்கமின்மை, குழந்தை கவனிப்பில் குறைபாடு ஏற்படுத்தல் போன்றவற்றை பிரசவத்திற்குப் பிந்தைய ப்ளூஸ், பேபி ப்ளூஸ் என்று கூறுவோம். தற்போது 7ல் ஒரு பெண்ணுக்கு பிரசவத்திற்குப் பிறகு முதல் இரண்டு வாரங்களில் அனுபவிக்கும் உணர்ச்சி குறைபாடு, மனநிலை ஊசலாட்டம், கண்ணீர், பதற்றம் உள்ளிட்ட அறிகுறிகளோடு காணப்படுகிறார்கள். பெண்கள் பொதுவாக பிரசவத்திற்கு பிறகு மிகுந்த மனச்சோர்வோடு காணப்படுகிறார்கள். பிரசவத்திற்கு பின் ஹார்மோன் மாறுபாடு, வாழ்வியல் மாற்றம், தாய்மை பொறுப்பு ஆகியவற்றால் கூட இது ஏற்படும். இவற்றைக் கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை. மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இவ்வாறு உள்ள பெண்களுக்கு அன்பும் அரவணைப்பும் ஆறுதலும் கொடுத்தாலே போதும்.

- டாக்டர் அனிதா பாய், உதவி பேராசிரியர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை

வாசுதேவன், விருதுநகர்: வாயுத் தொல்லை அதிகமாக இருக்கிறது. எவ்வாறு தீர்வு காண்பது?

இதற்கு முக்கிய காரணம் நேரத்திற்கு சாப்பிடாதது தான். குறிப்பாக காலை உணவை தவிர்த்தால் வாயு தொல்லை அதிகரிக்கும். அதுபோல் குடலில் கெட்ட பாக்டீரியா அதிகமாக இருந்தாலும் வாயுத் தொல்லையை அதிகரித்து, மலச்சிக்கலை உண்டாக்கும். குறிப்பாக 6 மாதத்திற்கு ஒரு முறை குடல் புழுக்களை வெளியேற்றும் மாத்திரைகளை சாப்பிட வேண்டும். ஒன்றரை வயது குழந்தைகள் முதல் அனைவரும் இதை எடுத்துக் கொள்ளலாம். பூரி, புரோட்டா போன்ற செரிமானத்திற்கு கடினமான உணவுகளை தவிர்க்க வேண்டும். டீ, காபி குடிக்க கூடாது. எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு எடுத்துக் கொண்டால் வாயுத் தொல்லையில் இருந்து தீர்வு காணலாம்.

- -டாக்டர் தீபக்ராஜா, காரியாபட்டி






      Dinamalar
      Follow us