PUBLISHED ON : பிப் 11, 2024

இன்ஸ்டன்ட் நுாடுல்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், குளிர்பானங்கள், பாஸ்தா, பிரஞ்சு பிரை, பீட்சா, சாக்லெட், பர்கர், ஹாட் டாக், மில்க் பிரெட், பிஸ்கட் போன்ற பாக்கெட்டுகளில் விற்கும் உணவுகளில், நார்ச்சத்து, விட்டமின்கள், தாதுக்கள் இருக்காது. பதிலாக, அதிக கலோரி, உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகம் இருக்கும். வாய்க்கு ருசியாக, கண்ணுக்கு அழகாக, திரும்ப திரும்ப சாப்பிடத் துாண்டும்.
இவற்றில் மிக அதிகமாக கார்போஹைட்ரேட், ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும் டிரான்ஸ்பேட்ஸ், உப்பு, நீண்ட காலத்திற்கு கெடாமல் இருக்க வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.
'ஜங்க் புட்' சாப்பிட்டால் என்ன நடக்கும்?
நார்ச்சத்து இல்லாமல், அதிக கொழுப்பு இருப்பதால் செரிமானம் ஆவதற்கு சிரமம். இதனால், மெட்டபாலிசம் எனப்படும் உடலின் உள் செயல்பாடுகள் இயல்பை விட அதிகமாக செயல்பட வேண்டிருப்பதால், செரிமானம் தவிர வேறு வேலைகளை முழுமையாக செய்ய முடியாது. இதனால் மூளை உட்பட உடல் உள் உறுப்புகளுக்கு குறைந்த அளவு ஆக்சிஜனே கிடைக்கும். மூளையின் செயல்பாடுகள் சீராக இருக்காது.
ஜங்க் உணவுகளில் உள்ள அதிகபடியான அமிலம், பசியின்மை, வயிற்றுப்புண், வயிற்றில் ரத்தக்கசிவு, ஏன் வயிற்றில் கேன்சர் கூட உண்டாகலாம். நரம்பு மண்டலத்தை மிக மோசமாக பாதிக்கிறது. நம் உடலில் வலி ஏற்பட்டால் நரம்புகள் தான் அவற்றை வெளிப்படுத்தும். அதிக ஜங்க் புட் சாப்பிடும்போது, இந்த திறனை நரம்புகள் இழக்கின்றன. இது தவிர, மறதி, கற்பதில் சிரமம் வரலாம்.
டாக்டர் என். தினகரன்,
முன்னாள் பேராசிரியர், ஜீரண மண்டல பிரிவு,
மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்,
சென்னை.
போன்: 98411 51599