டாக்டர்கள் எடுக்கும் அனைத்து மருத்துவ முடிவுகளும் சரிதானா?
டாக்டர்கள் எடுக்கும் அனைத்து மருத்துவ முடிவுகளும் சரிதானா?
PUBLISHED ON : மார் 31, 2024

நவீன மருத்துவ தொழில்நுட்பம் தினமும் வளர்ந்து வரும் நிலையில் தங்களை மேம்படுத்தினால் மட்டுமே, சிறந்த மருத்துவராக இருக்க முடியும்.
என்னிடம் நண்பர் ஒருவர், 'சில மருத்துவர்கள் அறுவை சிகிச்சை வேண்டும் என்றும், சிலர் அவசியம் இல்லை என்றும் இருவிதமாக பரிந்துரைப்பது ஏன்? என்று கேட்டார். இது சம்பந்தமான என் பதிலை இறுதியில் சொல்கிறேன்.
என்னை சந்தித்த நோயாளி, முட்டியில் அடிபட்டு ஓராண்டாகியும் நடக்கும் போது எதிர்பாராத சமயங்களில் முட்டிப் பகுதி நழுவி விடுவது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும், வலி எதுவும் இல்லை என்றும் கூறினார்.
ஏன் ஓராண்டாக டாக்டரிடம் காட்டவில்லை என்றதற்கு, அடிபட்டவுடன் மருத்துவரிடம் சென்றேன்; பிரச்னை எதுவும் இல்லை என்று கூறியதாக சொன்னார்.
உங்கள் சட்டை கிழிந்திருக்கிறது. அருகில் இருக்கும் டெய்லரிடம் தைத்து தர சொல்கிறீர்கள். அவர் கிழியவில்லை என்று திருப்பி தந்து விடுகிறார். மீண்டும் அதே சட்டையை அணியும் போது நண்பர்கள் கிழிந்திருப்பதை சொல்கின்றனர். மீண்டும் அதே டெய்லரிடம் சட்டையை கொடுக்க, பழைய பதிலையே சொல்கிறார். சட்டையில் இருக்கும் கிழிசலை கண்டறியும் திறன் இல்லாதது தெரிந்தும், மற்றொரு டெய்லரை அணுகாதது உங்கள் தவறு தானே என்றேன். அதன்பின், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்ததில், முட்டியில் ஜவ்வு கிழிந்திருப்பது தெரிந்தது. அவருக்கு நுண்துளை அறுவை சிகிச்சை செய்து, நன்றாக நடக்கிறார்.
தரமான மருத்துவம் தேடும் பலருக்கு சரியான மருத்துவமே கிடைப்பதில்லை, காரணம், மருத்துவத்தை பலர் வணிகமாக மாற்றியதே. எப்போது அரசு மருத்துவமனைகளை விட, தனியார் மருத்துவமனைகள் அதிக வசதிகளையும், நவீன தொழில்நுட்பங்களையும் அதீத முதலீட்டில் செய்ததோ, அன்றே எளிய மக்களுக்கு தரமான மருத்துவம் நிராகரிக்கப்பட்டது. சில மருத்துவமனைகளும், ஒரு சில மருத்துவர்களும் மட்டுமே தரமான சிகிச்சைகளை செய்கின்றனர். சமூக ஊடகங்கள் ஆட்சி புரியும் இந்த காலத்தில், அவர்கள் சாதாரண மக்களின் கண்களுக்கு புலப்படாமல் போய் விடுகின்றனர். சில மருத்துவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர்.
சில மருத்துவர்கள் அறுவை சிகிச்சை வேண்டும் என்றும், சிலர் வேண்டாம் என்றும் பரிந்துரைப்பது ஏன் எனில், ஒரே பிரச்னை அறுவை சிகிச்சை மூலமாகவும், அறுவை சிகிச்சை இல்லாமலும் குணப்படுத்த இயலும். இது, மருத்துவரின் அனுபவத்தை சார்ந்து எடுக்கப்படும் முடிவாக மட்டுமே இருக்க முடியும்.
சில மருத்துவர்கள் நோயாளியின் இயலாமை, பயத்தை பணமாக்குகின்றனர் என்பதும் உண்மை.
அவர் கேட்ட கேள்விக்கு பதில், சிக்கலான உடல் கோளாறுகளுக்கு, ஒரே ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல், இரண்டு, மூன்று மருத்துவர்களின் கருத்தைக் கேட்பதில் தவறில்லை என்பது தான்.
டாக்டர் பிரதீப் குமார்
எலும்பியல் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர்,
சென்னை96001 81234

