தொட்டால் சிணுங்கி மூச்சுக் குழல்... இலவச சிகிச்சையும் பெறலாம்
தொட்டால் சிணுங்கி மூச்சுக் குழல்... இலவச சிகிச்சையும் பெறலாம்
PUBLISHED ON : மே 05, 2024

நுரையீரல், மூச்சுக் குழலைத் தாக்கும் நாள்பட்ட கோளாறான ஆஸ்துமாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய்க் கிழமை, உலக ஆஸ்துமா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு நாளை மறுநாள், மே 7, உலக ஆஸ்துமா தினம்.
புகை, நாற்றம், துாசு என்று ஏதோ ஒரு காரணி, மூச்சுக் குழலினுள் செல்லும் போது, மூச்சுக் குழலில் ஒரு வகை வீக்கம், சளியை உண்டாக்குகிறது. தொட்டால் சிணுங்கி செடியை தொட்டவுடன் சுருங்கிக் கொள்வதைப் போன்று. மூச்சுக் குழாய் எளிதாக சுருங்கிக் கொள்ளும் இத்தன்மையை, 'ஹைப்பர் எக்ஸ்சைட்டபிள்' என்று சொல்லுவோம்.
ஆஸ்துமாவைப் பற்றிய அறிவுப்பூர்வமான தகவல்கள் பலருக்கும் தெரிவதில்லை. நாள்பட்ட நோயாக ஆஸ்துமா இருப்பதால், இதற்கான சிகிச்சையும் நாள்பட்டதாகவே அமையும். ஆனாலும் வாழ்க்கை முழுதும் ஆஸ்துமா சிகிச்சை தேவைப்படாது. ஆஸ்துமா மிகப் பரவலான நோய். நம் நாட்டில் 100 பேரில் ஏழு பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது.
கல்லுாரி, பள்ளிகளில், 'ஸ்கிரீனிங்' செய்ததில், 100 மாணவர்களில் 18 பேருக்கு ஆஸ்துமாவிற்கான அறிகுறிகள் இருப்பதை கண்டுபிடித்தோம்.
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.
மரபியல் காரணியால் பரவக்கூடிய ஆஸ்துமா, பலருக்கு வெளிக் காரணிகளாலும், சில குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமையாலும் ஏற்படலாம்.
இதில் வருத்தமான விஷயம், பல நேரங்களில் டாக்டர்கள் கூட ஆஸ்துமா என்ற சொல்லை தயக்கத்தோடே சொல்கின்றனர். அந்த அளவுக்கு மருத்துவ உலகில் தீண்டாமை போல இந்நோய் உள்ளது.
'இன்ஹேலர்' தான் ஆஸ்துமாவிற்கு மிகச் சிறந்த மருந்து. 'கேப்ஸ்சியூல்' வடிவில் உள்ள மருந்தை, சிறிய துகள்களாக இன்ஹேலரில் வைத்து, வாய் வழியாக இழுத்தால், நேரடியாக நுரையீரலுக்குள் மருந்து சென்று, உடனடியாக பலன் தரும்.
ஆஸ்துமாவிற்காக தரப்படும் ஸ்டிராய்டு மருந்துகள், மற்ற நோய்களுக்கு தரப்படும் ஸ்டிராய்டு மருந்து போன்றது இல்லை.
இது முற்றிலும் மாறுபட்ட ஸ்டிராய்டு. இதை மைக்ரோ கிராம் அளவில் தான் தருவோம்.மற்ற சிகிச்சையில் தரப்படும் ஸ்டிராய்டு மருந்துகள், மில்லி கிராம் அளவில் இருக்கும். 1 மி.கி., என்பது 1,000 மைக்ரோ கிராம். இன்ஹேலர் ஸ்டிராய்டு அதிகபட்சம் 200 மைக்ரோ கிராம் அளவில் தான் தரப்படும். 4 மி.கி., என்றால் 4,000 மைக்ரோ கிராம் மட்டுமே.
பக்கவிளைவுகள் இல்லாத, ஆஸ்துமாவை கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய ஸ்டிராய்டு 50, 100, 200 மைக்ரோ கிராம் தான் தரப்படும். பாதுகாப்பான மருந்து இது.
அதிக நேரம் மூச்சுக் குழலை விரிந்த நிலையில் வைத்திருக்க உதவும் 'பிராங்கோடைலேட்டர்' என்ற மருந்தை, ஸ்டிராய்டுடன் சேர்த்து தரும்போது ஆஸ்துமாவிற்கு சிறந்த நிவாரணத்தை தருகின்றன. இது, ஆஸ்துமாவை வராமல் தடுக்கும் நிவாரணி.
இதை விடுத்து, ஆஸ்துமா வரும் போது, 'சல்புயுடோமோல்' போன்ற ஸ்பிரே மருந்துகளை உபயோகிப்பது சரியான சிகிச்சை அல்ல.
பாதிப்பு வரும் சமயங்களில் மட்டும், இந்த மருந்துகளை உபயோகிப்பதால் தான் ஆஸ்துமா கட்டுக்குள் வராமல் சிரமப்படுகின்றனர். அதன்பின், அலோபதி மருத்துவத்தில் சரியான சிகிச்சை இல்லை என்று மாற்று மருத்துவத்திற்கு சென்று, அது ஏமாற்று மருத்துவமாக முடிந்து விடுகிறது.
ஆங்கில மருத்துவத்தில் ஆஸ்துமாவிற்கு அற்புதமான சிகிச்சைகள் உள்ளன. ஆஸ்துமாவை உறுதி செய்ய, நவீன பரிசோதனை முறைகள் உள்ளன.
உணவால் அலர்ஜியா, உள்ளே செல்லும் காற்றில் அலர்ஜியா என்பதை துல்லியமாக கண்டறியவும், வேறு பாதிப்புகள் உள்ளதா என்பதை 'எக்ஸ்ரே, ஸ்கேன்' வாயிலாக கண்டறியலாம்.
ஆஸ்துமா மட்டுமல்ல; அதற்கு மூலக் காரணமான சைனசை உறுதி செய்யவும் ஒருங்கிணைந்த பரிசோதனைகள் உள்ளன. முறையாக சிகிச்சை செய்தால், இயல்பாக வாழ முடியும் என்பதை, ஆஸ்துமா சிகிச்சையில், 45 ஆண்டுகள் அனுபவம் உள்ள என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
கற்பக சுவாசாலயா
ஆஸ்துமா நோயாளிகளுக்கு அவர்களின் பொருளாதார நிலை, சிகிச்சைக்கு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கு பரிசோதனை, சிகிச்சை, உடனடி மருந்துகள், நாள்பட்ட மருந்துகள் என்று அனைத்தும் இலவசமாக தரக்கூடிய சேவை மையத்தை துவங்கி இருக்கிறோம்.
பொருளாதார நிலையில் பின்தங்கிய குழந்தைகள், பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என்று யாரும் வந்து இலவசமாக சிகிச்சை பெறலாம். ராம்கோ சிமென்ட் தலைமை செயல் அதிகாரி இதில் ஒரு அறங்காவலர்.
இந்த அறக்கட்டளைக்கு, 1 லட்சம் ரூபாய் நன்கொடையாக தந்துள்ளார்.
டாக்டர் ஆர்.ஸ்ரீதரன்,
ஆஸ்துமா, அலர்ஜி குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்,
சென்னை.
044 - 2499 4044, 87544 10349