PUBLISHED ON : ஜூன் 05, 2022

சுகாதாரமற்ற, சமைக்காத உணவுகள், அசுத்தமான நீர் வாயிலாக பரவும், பாக்டீரியா தொற்றால் ஏற்படும் டைபாய்டு காய்ச்சலின் பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. மோர், லஸ்சி, ஜூஸ் என்று வெளியில் வாங்கி குடிக்கும் போது, அதில் பாதுகாப்பான நீரை பயன்படுத்துவரா என்பது தெரியாது. தவிர, பாத்திரங்கள், பலர் பயன்படுத்தும் டம்ளர் இவற்றை முறையாக சுத்தம் செய்கின்றனரா என்பதும் தெரியாது.
அழுக்கு நீரில் கழுவுவது, உணவில் ஈ மொய்ப்பது, சமைத்து பல நேரம் திறந்த நிலையில் உணவை வைத்திருப்பது என்று பல சுகாதார கேடுகளால் டைபாய்டு பரவும். அதற்காக வெளியில் போகவே கூடாது; கடைகளில் சாப்பிடக் கூடாது என்று இருக்க முடியாது. முடிந்தவரை சூடான உணவுகளையே சாப்பிட வேண்டும். சட்னி, மோர், சாலட் போன்ற சூடு செய்யாத உணவுகளை தவிர்த்து விடலாம்.
கொதிக்க வைத்து ஆறிய நீரை வீட்டிலிருந்து எடுத்துச் செல்லலாம். கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்த போது, கை கழுவுவதை எந்த அளவு கவனமாகச் செய்தோம் என்பதை எப்போதும் மறக்கக் கூடாது.
ஆபத்தை ஏற்படுத்தாத எந்த காய்ச்சலும் மூன்று நாட்களுக்கு மேல் இருக்காது. ஐந்து நாட்களுக்கு மேல் காய்ச்சல், வயிற்றுப் போக்கு இருந்தால் மருத்துவ ஆலோசனை அவசியம். ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் என்றால், 'அட்மிட்' செய்து விடுவது நல்லது. ஒரு நிமிடத்திற்கு 30 - 40 முறை சுவாசிப்பது இயல்பு. சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்த முதல் நாளே மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், நிமோனியாவின் அறிகுறியாக இருக்கலாம்.
குழந்தையின் ரத்த ஓட்டம் சீராக இருந்தால், ஒரு நாளைக்கு ஐந்து முறை சிறுநீர் கழிப்பர். சிறுநீர் கழிப்பது குறைந்தால், ரத்த ஓட்டம் குறைந்து உள்ளது அல்லது நீர் சத்து குறைந்துள்ளது என்று அர்த்தம். இயல்பாக இல்லாமல், எல்லா நேரமும் பேசாமல் படுத்தே இருந்தால், குழந்தையின் நினைவு குறைவாக இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
உடலில் ஏற்படக் கூடிய சிவப்பு புள்ளிகள், சாதாரண காய்ச்சலிலும் வரலாம்; தீவிர நிலையிலும் வரலாம். இவையெல்லாம் ஆபத்தான அறிகுறிகள். இந்த சூழலில் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
அவ்வப்போது உடல் வெப்பநிலையை பார்க்க, வீட்டில் 'தெர்மா மீட்டர்' அவசியம் இருக்க வேண்டும். 99 டிகிரி பாரன்ஹீட் அல்லது 37 டிகிரிக்கு மேல் உடலின் வெப்ப நிலை இருந்தால் காய்ச்சல் என்று புரிந்து, நிறைய திரவ உணவு தர வேண்டும்.
பாராசிட்டமால் மருந்தை ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டும் தரலாம். வேறு எந்த மருந்தையும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தரக் கூடாது.
காற்றோட்டமான இடத்தில் படுக்க வைப்பது, இளநீர் போன்ற நீராகாரம் தருவது, ஐஸ் போடாத சாத்துக்குடி ஜூஸ், காய்கறி சூப், புளிக்காத மோர் தரலாம். இவையெல்லாம் காய்ச்சலை குறைக்க உதவும். ஐஸ் ஒத்தடம் செய்ய வேண்டாம்; இது பலன் தராது.
டைபாய்டுக்கு தடுப்பூசி உள்ளது. ஆறு மாதங்களில் இருந்து எந்த வயதிலும் இதை போட்டுக் கொள்ளலாம்.
டாக்டர் எஸ்.தங்கவேலு,
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்,
மேதா மருத்துவமனை, சென்னை
