PUBLISHED ON : அக் 11, 2015
பெண்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு பல்வேறு சத்துக்கள் அத்தியாவசியம். இச்சத்துக்கள் எதில் உள்ளன?
ஒமேகா- 3: பெண்களுக்கு மிகவும் தேவைப்படும், ஒரு சிறந்த கொழுப்பு அமிலம் இது. உயர் ரத்த அழுத்தம், வீக்கம் மற்றும் நாள்பட்ட நோய்களைச் சரி செய்வதுடன், இதயப் பாதிப்பிலிருந்தும் காக்கிறது. நாள் ஒன்றுக்கு, 1.1 கிராம் அளவுக்குப் பெண்களுக்குத் தேவைப்படும். கடல் மீன்களிலிருந்து, இச்சத்தை பெறலாம்.
பொட்டாசியம்: பொட்டாசியத்தின் குறிப்பிடத்தக்க வேலை, நரம்புகளில் ரத்தத்தை பிரச்னைகள் இல்லாமல், எடுத்துச் செல்ல உதவுவதுதான். உறுதியான எலும்புக்கும், புத்துணர்ச்சிக்கும் சக்தியாக அமையும். இந்த சத்தை தயிர், உருளைகிழங்கு மீன் மற்றும் மாமிசத்தில் இருந்து, அதிகம் பெறலாம். 19 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 4,700 மி.கி., அளவு இச்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின் சி: நோய் எதிர்ப்பு சக்திக்கு, அதிகம் தேவைப்படும், இந்த வைட்டமின் ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடன்ட். தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை வராமல் தடுக்கும். இந்த வைட்டமினை, 19 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், 75 மி.கி., அளவுக்கு, எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு, கிவி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களிலிருந்து, இந்த வைட்டமினை பெறலாம்.
நார்ச்சத்து: குடல் செரிமானத்துக்கு பெரிதும் உதவுவது நார்ச்சத்து. 19-50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஒரு நாளைக்கு, 25 கிராம் அளவுக்கு மட்டுமே இதை எடுத்துக் கொள்ளவேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது அவசியம் தேவைப்படுகிறது. இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. கோதுமை, காய்கறி, கீரை மற்றும் பழங்கள் மற்றும் தானியங்கள் நார்ச்சத்து நிறைந்தவை.

