
முருங்கை கீரையை தெரிந்த அளவுக்கு, கல்யாண முருங்கையை பற்றி பலருக்கு தெரியாது. கல்யாண முருங்கை இலை அபூர்வமான மருத்துவ குணம் கொண்டது. இதை நாட்டு மருந்தாக பயன்படுத்துவது மூலம் பல நோய்கள் தீரும்.
கல்யாண முருங்கை இலை, சீரகம் இரண்டையும், நெல்லிச் சாறு விட்டு அரைத்து, தினமும் அதிகாலையில் சாப்பிட்டால், பித்தம், பித்த மயக்கம், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் தீரும். இந்த இலையுடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் சளி மற்றும் கப நோய்கள் குணமாகும்.
இலையுடன், ஊற வைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், உடல் சூடு, வெள்ளைப்படுதல் போன்ற குறைபாடுகள் தீரும்.
இத்துடன் சிறிது பார்லியை சேர்த்து அரைத்து கஷாயமாக செய்து சாப்பிட்டால், சிறுநீர் எரிச்சல் குறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
கல்யாண முருங்கை இலையுடன் ஓமம், வாய்விளங்கம் இரண்டையும் சேர்த்து அரைத்து, இரவில் சாப்பிட்டு வந்தால், அதிகாலையில், மலங்கழிப்பதில் பிரச்னை இருக்காது.
இந்த இலையுடன் சம அளவு அம்மான் பச்சரிசி இலையை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்துப் பூசினால், படை சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும். முருங்கை இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து அவித்து சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.