PUBLISHED ON : டிச 22, 2024

உடலில் தேங்கியுள்ள நச்சுகளை வெளியேற்ற ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் முறை 'கந்துஷா' என்று அழைக்கப்படும் ஆயில் புல்லிங். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், வாயில் எண்ணெய் விட்டு கொப்பளிப்பது.
நம் பாரம்பரிய மருத்துவத்தில் இது பழங்கால முறை. உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்குவதோடு, வாய் சுகாதாரத்திற்கும் இந்த முறை உதவும்.
இதை தினசரி செய்யும் போது, ஒட்டு மொத்த தசைகள், நரம்புகள் வலிமையடைவதுடன், வாய் பகுதியில் உள்ள நரம்புகள், தசைகள் வலிமை பெறும்.
இத்துடன் கண்களுக்கும் நல்லது; காதுகள், தொண்டை, பற்கள், ஈறுகள், சுவாச மண்டலத்தின் சில பகுதிகள், செரிமான மண்டலம் ஆகியவை ஆரோக்கியம் பெறும்.
எப்படி செய்வது?
கொப்பளித்தல் செய்ய, ஆயுர்வேதத்தில் நல்லெண்ணெய் மட்டுமே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படும்; தேங்காய் எண்ணெயும் உபயோகிக்கலாம்.
எதுவாக இருந்தாலும், மரச்செக்கில் ஆட்டிய சுத்தமான எண்ணெயாக இருப்பது அவசியம். காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், பல் துலக்குவதற்கு முன் எண்ணெய் கொப்பளிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் இரவில் துாங்கப் போவதற்கு முன் செய்யலாம்.
ஒன்று அல்லது இரண்டு டீ ஸ்பூன் அதிகபட்சமாக ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் எடுத்து, வாய் முழுக்க பரவும் வகையில் தொடர்ந்து கொப்பளிக்க வேண்டும். தொடர்ந்து சில நிமிடங்கள் கொப்பளிக்கும் போது, எண்ணெயுடன் சேர்ந்து எச்சில் ஊறி, நீர்த்துப் போகும்; துப்பி விடலாம். அதன்பின், வெதுவெதுப்பான நீரில் வாயை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
கொப்பளிக்க வாயில் ஊற்றிய எண்ணெயை விழுங்கி விடாமல் கவனமான இருக்க வேண்டும்.
டாக்டர் மீரா சுதீர், டாக்டர் சுதீர் ஐயப்பன்,
ஸ்ரீஹரியம் ஆயுர்வேதம், சென்னை86101 77899sreehareeyam.co.in