PUBLISHED ON : நவ 22, 2015
கடலை பர்பியை சிறுவர்களை விட, பெரியவர்களே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். காரணம் பர்பியின் சுவை தனித்துவமானதாகும். அது மட்டுமல்ல, அதில் உள்ள சத்துக்களும் ஏராளம். வேர்கடலை சாபிட்டால், கொழுப்புச்சத்து அதிகரித்து, உடல் எடை கூடும் என்ற பயம் பலருக்கு உள்ளது, இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வரும் என்ற அச்சமும் உள்ளது.
ஆனால், மருத்துவ அடிப்படையில் அப்படி எதுவும் சொல்லப்படவில்லை. வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும், புரத சத்தும் உள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற நல்ல உணவாகும். இதிலுள்ள சர்க்கரையின் அளவு மிக குறைவு.
இதில் இருக்கும் மெக்னீசியம், இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். எனவே கரை நோயாளிகள், வேர்க்கடலையை தைரியமாக சாப்பிடலாம்.
வேர்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும், சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது; குறையும். வேர்கடலையில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப் பொருள் உள்ளது. இவை வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம், உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும்.
இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் போன்ற, உயிர் வேதிப் பொருட்கள் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாகாமல் தடுக்கும். வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால், சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. ஆகவே கர்ப்பிணிகள் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது. வேர்க்கடலை பருப்பில் உள்ள தோலை, நீக்காமல் சாப்பிட வேண்டும். அதில் நிறைய சத்துக்கள் உள்ளன. வேர்க்கடலையைப் பச்சையாக சாப்பிடுவதைவிட, அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால், சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம்.
இதிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி, ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும். வேர்கடலையில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் புற்றுநோய், உருவாகக் காரணமாகும் செல்களை அழித்து விடுகின்றன. குறிப்பாக மலக்குடல் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது. பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்கடலை உதவுகிறது. உடல் அழகும், இதய பாதுகாப்பும், வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும், இவை வராமல் முன்கூட்டியே தடுப்பதுடன், பளபளப்பான தோலையும் ஏற்படுத்தித் தருகிறது. படிக்கும் மாணவ, மாணவியர், வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஞாபக மறதி ஏற்படாது என்கிறார்கள், உணவு ஆய்வாளர்கள்.
வேர்க்கடலையில் உள்ள உயிர்வேதி பொருட்கள், நரம்பு செல்களை நன்கு செயல்படத் தூண்டும். இதனால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புள்ள பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும். நரம்பு சம்பந்தமான நோய்கள் வராது. வேர்கடலையில், 30 விதமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன. இதில் புரதம் அதிகம். தினமும், 50 கிராம் வேர்க்கடலை அவித்தோ வறுத்தோ சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.

