தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/14 மருத்துவமனைகளில் நுண்துளை சிகிச்சை : அரசு டாக்டர்களுக்கு சிறப்பு பயிற்சி

14 மருத்துவமனைகளில் நுண்துளை சிகிச்சை : அரசு டாக்டர்களுக்கு சிறப்பு பயிற்சி

14 மருத்துவமனைகளில் நுண்துளை சிகிச்சை : அரசு டாக்டர்களுக்கு சிறப்பு பயிற்சி


PUBLISHED ON : ஜன 05, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 05, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்வேறு பிரச்னைகளுக்கு, 'ஓப்பன் சர்ஜரி' எனப்படும், அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. அப்படி இல்லாமல், 5. மி.மீ., அளவில் துளையிட்டு, அந்த நுண்துளை வாயிலாகவே, இந்த பிரச்னைகளை சரி செய்யும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இதனால், நோயாளி மருத்துவமனையில், அதிக நாட்கள் தங்க வேண்டியதில்லை. விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். எலும்பியல் துறையில், மூட்டு, ஜவ்வு ஆகிய பிரச்னைகளுக்கு நுண்துளை சிகிச்சை அளிக்க, இந்தியாவிலேயே, நான்கு டாக்டர்கள் மட்டுமே நிபுணத்துவம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர், டாக்டர் லியோநார்ட் பொன்ராஜ். இவர், 14 அரசு மருத்துவமனைகளில், எலும்பியல் நுண்துளை சிகிச்சை மையத்தை துவக்குவதற்காக, எலும்பியல் மூட்டு துறை டாக்டர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

அவரிடம் பேசியதில் இருந்து...

தமிழகத்தில், எத்தனை அரசு மருத்துவமனைகளில் நுண்துளை மூட்டு சிகிச்சை வசதி உள்ளது?

தமிழகத்தில், நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை, சென்னையில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மட்டுமே அளிக்கப்படுகிறது. இதை விரிவுப்படுத்தும் வகையில், ஏழு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், ஏழு தலைமை மருத்துவமனைகள் என, 14 மருத்துவமனைகளில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன், தலா, 45 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் தருவிக்கப்பட்டு வருகின்றன. எனவே, ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் தலா, இரண்டு டாக்டர்களுக்கு, மூன்று மாதம் பயிற்சி அளிக்கிறேன். இதில், தமிழக அரசு எல்லா வகையிலும் உதவி வருகிறது.

ஜவ்வு பிரச்னை என்றால் என்ன?

பெரும்பாலும் விளையாட்டு வீரர்களுக்கு, இது போன்ற ஜவ்வு பிரச்னை ஏற்படுகிறது. குறிப்பாக, தோல் மூட்டு, கால் மூட்டு பகுதிகளில், அதிக பிரச்னை ஏற்படும். மூட்டு பகுதியில், இரண்டு வித ஜவ்வு ஒன்றி இருக்கும். விபத்தின் போது, ஜவ்வில், ஒருபகுதி கிழிந்துவிடும். அதற்கான சிகிச்சை பெற்று சில வாரங்களில், அவர்கள் குணமடைந்து விடுவர். அதன்பின், சில மாதங்கள் அல்லது ஆண்டுகளில், மீண்டும் அவர்களுக்கு அதே பகுதியில் பிரச்னை ஏற்படும். இதை தவிர்க்க ஆரம்பித்திலேயே, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்து பார்ப்பது மிகவும் முக்கியம். அதில், ஜவ்வு கிழிந்திருந்தால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்வது அவசியம்.

ஜவ்வு அறுவை சிகிச்சை எப்படி?

கால் பகுதியில் உள்ள, 30 செ.மீ., ஜவ்வு, அறுவை சிகிச்சை இல்லாமல் வெட்டி எடுத்து விடுவோம். அவற்றை, நான்கு மடிப்பாக, 7.5 செ.மீ., அளவிற்கு சுருட்டி, மூட்டு பகுதியில், நுண்துளை வாயிலாக ஜவ்வு இணைக்கப்படும்.சில நாட்களில், அவர்கள் குணமடைந்து விடுவர். கால் பகுதியில் எடுக்கப்பட்ட ஜவ்வு, ஆறு மாதங்களில் வளர்ந்து விடும் என்பதால், எதிர்காலங்களில் பிரச்னை இல்லை.

இடுப்பு மூட்டு நுண்துளை அறுவை சிகிச்சை சாத்தியமா?

ஆம். இடுப்பு மூட்டில், சிலருக்கு, எலும்பு அதீத வளர்ச்சி அடைந்துவிடும். இதனால், அவர் உட்காரும்போது, இடுப்பு மூட்டு மற்றும் மற்றும் தொடை எலும்பு மூட்டு உராய்ந்து, உயிர்போகும் அளவிற்கு வலி இருக்கும்.அந்த நோயாளிக்கு, 'ஓப்பன் சர்ஜரி'யில், வளர்ச்சியடைந்த எலும்பு வெட்டி அகற்றப்படும். ஆனால், நுண்துளையில் அதுபோன்று இல்லாமல், வளர்ச்சியடைந்த எலும்பை செதுக்கி அகற்றலாம். இந்த சிகிச்சை நல்ல பலன் தந்துள்ளது. இதுபோன்ற பல்வேறு வகையான சிக்கலான பிரச்னைகளுக்கும், நாம் தீர்வு அளித்து வருகிறோம்.

மக்களுக்கு கூறும் அறிவுரை?

விளையாட்டு மற்றும் விபத்துகளில் காயம் ஏற்படும்போது, எலும்பு உடைந்திருக்கிறதா என, 'எக்ஸ்ரே' பார்ப்பது அவசியம். ஆனால், அதில், ஜவ்வு பிரச்னை தெரியாது. அப்படியே கவனிக்காமல் விட்டால், வருங்காலங்களில் பாதிப்பு அதிகரிக்கும். எனவே, ஆரம்பத்திலேயே, எம்.ஆர்.ஐ.,ஸ்கேன் எடுத்து, அதில் ஜவ்வு பிரச்னை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பிரச்னை இருப்பின், உரிய டாக்டரிடம் சிகிச்சை பெறுவது அவசியம்.

தென் மாநிலத்திலேயே ஒரே நிபுணர்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரியில், 1986ல், எம்.பி.பி.எஸ்., படித்தவர், லியோநார்ட் பொன்ராஜ். 1994ல், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரியில், எலும்பு மூட்டு பிரிவில் முதுநிலை படித்தார். அதன் கீழ் இயங்கும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று, அங்கேயே அரசு பணியில் சேர்ந்தார்.

கடந்த, 2000ல், லண்டனில், நுண்துளை மூட்டு மற்றும் விளையாட்டு காயங்கள் துறை சார்ந்த படிப்புகளை படித்தார். அதைதொடர்ந்து, ஜெர்மன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் சிறப்பு பயிற்சி பெற்றார். இதன் வாயிலாக, விளையாட்டு காயங்கள் மற்றும் நுண்துளை மூட்டு சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றார். பல தனியார் மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் சம்பளம் தர தயாராக இருந்தாலும், ஏழை மக்களுக்கு சேவையாற்ற, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார். இவர், 2007ம் ஆண்டில் இருந்து இதுவரை, 3,000க்கும் மேற்பட்ட நுண்துளை மூட்டு சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். மேலும், விளையாட்டு காயங்கள் மற்றும் நுண்துளை மூட்டு சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர்களில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் ஒரே டாக்டர் இவர் மட்டுமே. தென் மாநில அளவிலும், இச்சிகிச்சையை அளிக்கும் ஒரே டாக்டர் இவர்.

-- நமது நிருபர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us