PUBLISHED ON : ஜூலை 09, 2017

தோப்புக்கரணம் போடுவது என்பது, பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வராவிட்டாலோ, ஆசிரியர்கள் மாணவர்களை தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. தேர்வு நேரத்தில் பக்தி அதிகரித்து, மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு.
இந்த தோப்புக்கரணம், அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ், ''இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன,'' என்கிறார்.
அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன், தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின், மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார். யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் என்பவர், காதுகளைப் பிடித்துக் கொள்வது, மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டும் செயல் என்கிறார்.
அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும், சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில், மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.
தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை, கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்களின் செயல்பாடுகள் அதிகரிப்பதை, பரி÷சாதனையில் காண்பித்த அவர், மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்தி பெறுவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள், வலுப்பெறுவதும் பரி÷சாதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட, இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம், மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக, அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன. இதனால் தான் பள்ளிகளில் தோப்புக்கரணம், நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால், தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத்திறன் அதிகரிக்க வழி காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
பயிற்சி: கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல், இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக்கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
மூச்சை நன்றாக வெளியே விட்டபடி, அப்படியே உட்கார்ந்து, மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாள, லயத்துடன் இருக்கட்டும். செய்து பழக்கமில்லாதவர்கள், ஆரம்பத்தில் ஒரு நிமிடத்தில் துவங்கி, நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரிக்கலாம்.

