PUBLISHED ON : செப் 06, 2015

இன்று கீரைகள் மீது பொதுமக்களுக்கு, எக்கச்சக்க நம்பிக்கை வந்து விட்டது. மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளும், கீரைகளின் இயற்கையான குணமாக்கும் தன்மையும்தான் காரணம்.
இதில், அகத்திக்கீரை அபூர்வமான இயற்கை மருந்தாகும். குறிப்பாக, வயிற்றுப் புண்களை போக்க கிடைத்த அரிய வகை கீரைகளில் இதுவும் ஒன்று. கன்று ஈன்ற பசுவுக்கு அகத்திக்கீரையை தீவனமாக கொடுத்தால், நன்றாக பால் சுரக்கும். அகத்திக்கீரை தோட்டங்
களில், விளைநிலங்களில், வெற்றிலைக் கொடிக்கால்களில் ஊடுபயிராக வளர்க்கப்படுகின்றன. அகத்தியில் சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என சில வகைகள் உண்டு. பொதுவாக அகத்தி வெள்ளை நிறத்திலும், சிவப்பு நிறத்திலும் பூக்கும். சிறிது உப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையை, வேறு மருந்துகள் உண்ணும் காலங்களில் உண்ணக் கூடாது. அப்படி உண்டால் மருந்துகளின் வீரியத்தை அகத்திக்கீரை குறைத்துவிடும். நோய் குணமாக காலதாமதம் ஆகும். இக்கீரையை அடிக்கடி சாப்பிட கூடாது. சாப்பிட்டால் ரத்தம் கெட்டுப்போக வாய்ப்புண்டு. சொறி, சிரங்கும் ஏற்படும். ரத்தம் குறைந்து ரத்த சோகை நோய் ஏற்படலாம். வயிற்று
வலியும், பேதியும் உண்டாகலாம்.
காய்ச்சல் நேரத்தில் இக்கீரையைப் பிழிந்து, சாறு எடுத்து இரு துளிகள் மூக்கில் விட்டால் காய்ச்சல் உடனே நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி, நெற்றியை லேசாக அனலில் காண்பித்தால் கடுமையான தலைவலியும் சரியாகும். சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ சத்துக்கள் இதில் நிறைய உள்ளது.
போதுமான பால் சுரக்காத தாய்மார்கள், தொடர்ந்து அகத்திக்கீரையை சாப்பிட்டு வந்தால் நன்கு பால் சுரக்கும். இக்கீரையை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். இதில் உள்ள ஒருவகை கசப்பு, வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும். வயிற்றில் பூச்சிகளால் ஏற்படும் வலி நீங்கும். மலச்சிக்கல் போகும். குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக்
கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்து, தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும்.
அகத்திக்கு வாயு தொல்லையை உண்டாக்கும் தன்மை இயல்பாக உண்டு. எனவே, வாய்வுக் கோளாறு உள்ளவர்கள், இக்கீரையை தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக அல்சர் தொல்லையால் அவதிப்படுவோர், அகத்திக்கீரையுடன் இஞ்சி, பூண்டு, சீரகம், கொஞ்சம் மிளகு ஆகியவற்றை நசுக்கி போட்டு, நன்றாக வேக வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி சூப் போல், வெறும் வயிற்றில் குடித்து வந்தால், ஒரே மாதத்தில் அல்சர் நோய் குணமாகும்.

