
* ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி, திண்டுக்கல் : காலரா என்றால் என்ன? காலரா நோய் எதனால் ஏற்படுகிறது? இந்நோயை குணப்படுத்த நவீன சிகிச்சை முறை மற்றும் வராமல் தடுக்க வழிமுறைகள் என்னென்ன?
'விப்ரியோ காலரே' என்ற, கமா உருவம் கொண்ட உயிரியால், காலரா ஏற்படுகிறது. கழிவுநீரில் இது காணப்படுகிறது. மழைக் காலத்தில், குடிநீருடன் கழிவுநீர் கலக்க அதிக வாய்ப்பு ஏற்படுவதால், காலரா தொற்று, ஊர் முழுவதும் மிக வேகமாகப் பரவுகிறது. தொடர் பேதி ஏற்படுவதால், உடலில் நீர் சத்து குறைந்து விடுகிறது. அளவுக்கு அதிகமாக நீர் சத்து குறைவதால், மரணம் கூட ஏற்பட்டு விடுகிறது. நீர் சத்தை அதிகரிக்க முதலில் உடலுக்கு நீர் ஏற்றப்படும். 'ஓரல் ரீஹைட்ரேஷன் சொல்யூஷன்' பருக வேண்டும். உயிரைக் காக்க இது மிகவும் அவசியம். பவுடர் வடிவிலும், நீராக பாட்டிலிலும் மருந்து கடைகளில் இது கிடைக்கிறது. அரிசி கஞ்சி, இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். 6 - 8 மணி நேரமாக சிறுநீர் வெளியேறவில்லை எனில், 'டிரிப்ஸ்' ஏற்ற வேண்டியது அவசியம். சாப்பிடுவதற்கு முன், கையைச் சுத்தமாக கழுவிக் கொள்ளுதல், காய்கறிகளை சுத்தமாக கழுவிய பிறகு சமைத்தல், பழங்களை நன்கு கழுவிய பிறகு உண்ணுதல் ஆகிய பழக்கங்களை மேற் கொண்டால், காலராவை தவிர்க்க லாம். நோய் எதிர்ப்பு மருந்தும் உள்ளது. வாய் வழியே உண்ணக் கூடிய வகையிலான மருந்து இது. 85 சதவீதம் நம்பகத் தன்மை கொண்டது.
ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை இதை சாப்பிட வேண்டும்.
* கே.ஜெ.வைத்தியநாதன், சென்னை : 80 வயதான எனக்கு, பி.பி., சுகர் நார்மலில் உள்ளது. பகலில் தூங்குவது இல்லை. இரவில் தூங்கும் போது, 30 வருடங்கள் முன் நடந்தது எல்லாம், கனவில் வருகிறது. கனவு வராமல் இருக்க வழி உண்டா?
ஏற்கனவே நினைவில் பதிந்தவை தான், கனவாக வருகிறது. நீங்கள் தூங்கும் போது, மனதில் உள்ள தடைகள் விலகி, கனவுகள் மேலெழும்புகின்றன. கனவுகளை தடுக்க முடியாது.
ஆனால், உங்கள் உடலோடு, மூளையும் சோர்வாக உள்ளதா என்பதை உணர்ந்த பின், தூங்கச் சென்றால், சோர்வடைந்த மூளை, தானாக ஓய்வெடுத்துக் கொள்ளும். சாப்பிட்டதும், அரை மணி நேர நடைபயிற்சி மேற்கொண்டு, பின் ஒரு டம்ளர் பால் குடித்து தூங்கினால், நல்ல தூக்கம் வரும்.
* ஓ.கே.சிவா, சந்தைப்பேட்டை, மதுரை : என் வயது 42. என் தாயார் 15 ஆண்டுகளாகவும், நான் இரண்டாண்டும், சர்க்கரை வியாதிக்காக மாத்திரை எடுத்துக் கொள்கிறோம். 35 வயதுடைய இரண்டாவது தம்பிக்கும் சர்க்கரை நோய் உள்ளது தெரிய வந்துள்ளது. இப்போது எங்கள் வீட்டில் மூன்று பேரும் சர்க்கரை நோயாளிகள். தாய் அல்லது தந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால், மூத்தவர் அல்லது இளையவருக்கு வரும் என்று கேள்விப்பட் டிருக்கிறேன் உண்மையா? இப்படி வர என்ன காரணம்? விளக்கமாக கூறவும்...
பல மரபணு கொண்ட பாரம்பரியம் கொண்டது நீரிழிவு நோய். நீரிழிவு நோய் உள்ள பெற்றோரிட மிருந்து, அவர்களின் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த மரபணு செல்வதால், குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே நீரிழிவு நோய் ஏற்படும் என்று கூறுவது தவறு; அனைவருக்கும் ஏற்படலாம். ஆரோக்கியமான வாழ்க்கை அமைந்தால், நீரிழிவு நோய் ஏற்படுவது தாமதமாகலாம். பி.எம்.ஐ., (உடல் நிறை குறியீட்டு எண்) அளவு 23ல் இருத்தல். (உயர அளவை, எடையின் இரு மடங்கு பெருக்க எண்ணால் வகுக்கும் போது கிடைக்கும் விடை தான், பி.எம்.ஐ., எனப்படுகிறது.) ஓட்டப் பயிற்சி, நடைப் பயிற்சி, நீச்சல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் 40 நிமிடமும், 20 நிமிட உடற்பயிற்சியும் செய்தால், நீரிழிவு நோய் வருவதை தள்ளிப் போடலாம்.

