எனக்கு வயது 30. அடிக்கடி தலை சுற்றல், தலைவலி ஏற்படுகிறது. சில நிமிடங்களில் சரியாகி விடுகிறது. ஒரு செயலை செய்யும் போது, இவ்வாறு ஏற்படுவதில்லை. மாறாக, தூங்க செல்கையில் நேர்கிறது. இதற்கு என்ன காரணம்?
- கோவிந்தராஜ், அயன்புரம், சென்னை.
நமது செவி மண்டலம், கேட்கும் பணியை செய்வதுடன், நமது 'வெஸ்டிபுலர் சிஸ்ட'த்தையும் கவனிக்கின்றன. காதுகளில் இருக்கும் நரம்பு, பாதிப்பு அடைந்தால், தலை சுற்றும்; காது பகுதியில் உள்ள நரம்புகள், மூளையுடன் இணையும் பகுதியில் பாதிப்பு அடைந்திருந்தாலும், தலை சுற்றும். அதோடு தலைவலியும் இருக்கும். உங்கள் வயது 30 என்பதால், காதுப் பகுதியின் நரம்பு பாதிப்பால், வந்ததாக இருக்க வாய்ப்பு உள்ளது. சீரற்ற ரத்த அழுத்தம், உணவு பழக்கம், வாழ்வியல் மாற்றங்களால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம். எனவே, காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகி, அவரின் ஆலோசனை பெற்று, சிகிச்சை மேற்கொள்வது நல்லது.
-வசந்த குமார், காது, மூக்கு, தொண்டை நிபுணர்.
நாய்க் கடியினால் ஏற்படும் வெறிநோயால் (ரேபிஸ்), இறப்போரின் எண்ணிக்கை, இந்தியாவில்தான் அதிகமாமே?
- சீதாராமன், கானகம், சென்னை.
உலக அளவில், ஆண்டுக்கு 56 ஆயிரம்பேர், வெறிநோயால் இறக்கின்றனர். இந்தியாவில், இன்றைய நிலவரப்படி, ஆண்டுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், வெறிநோயால் இறக்கின்றனர். அவர்களில், 35 சதவீதத்தினர், 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் என்கிறது, உலக சுகாதார நிறுவனம்.
- கனகவேல், பொது மருத்துவர்.
எனக்கு வயது 27. திடீரென்று, உடல் எடை கூடிவிட்டது. 'தைராய்டு' பிரச்னை என்கின்றனர் நண்பர்கள். 'தைராய்டு' என்பது என்ன?
- ராஜி, திருத்தணி.
உடலுக்கு தேவையான சில முக்கிய ஹார்மோன்களை, 'தைராய்டு' சுரப்பி சுரக்கிறது. அந்த ஹார்மோன் இதய துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பம், உடல் எடை போன்றவற்றை கட்டுப்படுத்துகின்றன. உதாரணத்துக்கு, அதிக ஹார்மோன் சுரப்பு, இதய துடிப்பை அதிகரிக்கும். குறைந்த ஹார்மோன் சுரப்பு, இதய துடிப்பு மந்தமாகும்.
'கால்சிடோனின் சீ' செல்கள் எனப்படும், விசேஷ செல்கள், இந்த ஹார்மோனை சுரக்கின்றன. உடலில் கால்சியம் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதற்கு, இந்த ஹார்மோன் முக்கியம். இதை தவிர தைராய்டிலேயே 'பாரா தைராய்டு' எனப்படும் சுரப்பிகள் பொதிந்துள்ளன. இவை 'பாரா தார்மோன்' எனப்படும் ஹார்மோனை சுரக்கின்றன. இதுவும் உடலில் கால்சியம் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதற்கு, மிக முக்கிய பங்காற்றுகிறது. 'தைராய்டு' குறைவாக அல்லது அதிகமாக இருந்தால், நாளமில்லா சுரப்பி நிபுணரை அணுகி சிகிச்சை எடுத்து கொள்ளலாம்.
- ஜாகீர் உசைன், நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை நிபுணர்.