நான் 26 வயது பெண். எனக்கு முகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக உள்ளது. மாதவிடாய் சரியாக வருவதில்லை. காரணம் என்ன?
-திவ்யா, நாமக்கல்
நீங்கள், கூறும் அறிகுறிகளை வைத்து பார்க்கும் போது, சினைப்பை நீர்கட்டிகள் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆண் பாலின ஹார்மோன், அளவுக்கதிகமாக உடலில் சுரக்கும் போதுதான், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும். பொதுவாக, சீரற்ற மாதவிலக்கு அல்லது மாதவிலக்கு வராமலிருத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். சினைப்பைகள், ஆண்பால் ஹார்மோன்களை சுரக்க துவங்குவதால், சினைப்பையிலிருந்து கருமுட்டை வெளியாகும், ஓவல்யூஷன் எனப்படும் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால், உடலில் ஆண் தன்மை அதிகரிக்கும். சினைப்பை நீர்கட்டிகளால் பாதிக்கப்பட்டோருக்கு, உடல் எடை அதிகரிக்கலாம். இடுப்பை சுற்றி கொழுப்பு சேரலாம். மார்பு, வயிறு, முதுகு, விரல்கள் போன்ற இடங்களில், அதிக ரோமங்கள் முளைக்கலாம். மார்பகம் சிறிதாவது, குரல் கடினமாவது போன்ற பாதிப்புகள் வரலாம். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
எனக்கு வயது 36. அடிக்கடி முதுகு வலிக்கிறது. நண்பர்கள், ஏதேதோ சொல்லி பயமுறுத்துகின்றனர். முதுகு தண்டுவடப் பிரச்னையாக இருக்குமோ?
-தினேஷ் குமார், கூடுவாஞ்சேரி.
முதுகுத் தண்டுவடத்தில், 33 எலும்புகள் உள்ளன. அந்த எலும்புத் தொடர்களின் மீது, அதிக அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது எலும்புகள் முறையற்ற வளர்ச்சி கொண்டிருந்தாலோ, முதுகுத் தண்டுவடம் இயல்பான நிலையை விட்டு, வளைய நேரிடும். அந்த நேரத்தில், முதுகு வலி ஏற்படும். ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றவாறு, முதுகுவலியை பிரிக்கலாம். 'ஆஸ்டியோபோரோசிஸ்,' அடி முதுகுப் பகுதியில், முதுகு தசைகளில் ஏற்படும் வீக்கம், முதுகெலும்புக்கு இடையே உள்ள ஜவ்வு நழுவுதல், கால்சியம் சத்து குறைபாடு, இருசக்கர வாகனம் ஓட்டுவது, உடல் எடை அதிகரித்து இருத்தல், எலும்பு புற்றுநோய் என, முதுகு வலி ஏற்படுவதற்கான மருத்துவ காரணங்கள் பல உண்டு. எலும்பு நிபுணரை அணுகி சிகிச்சை பெறவும்.
48 வயதாகும் எனக்கு கணைய பிரச்னை உள்ளது; மருந்துகள் சாப்பிட்டு வருகிறேன். மேற்கொண்டு, கணையம் பழுதாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
-சுந்தர்ராஜன், வயலூர், திருநெல்வேலி.
பொதுவாக கணையத்தை காக்க பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றினாலே போதும்.
மது அருந்துபவராக இருந்தால் உடனே கைவிட வேண்டும். பித்தப்பையில் கற்கள் உருவாகாமல், கவனத்துடன் இருக்க வேண்டும். மீறி உருவானால், உடனே சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். குழந்தைகளாக இருந்தால், சிறு வயதிலேயே மஞ்சள் காமாலை, ருபெல்லா போன்றவைகளுக்கு, தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்கு மேல் உள்ளோர், கொழுப்பு உணவுகளை குறைத்து கொண்டால், கணையத்தை பாதுகாத்து கொள்ளலாம்.