PUBLISHED ON : செப் 16, 2015

மருந்தாகவும், உணவாகவும் பயன்படும் அரிய வகை கீரை கரிசலாங்கண்ணி. பல்வேறு இடங்களில், இக்கீரை பரந்து விரிந்திருக்கும். பொதுவாக, கீரை வகைகளில் உள்ள அனைத்து சத்துக்களும் இதில் உண்டு. வைட்டமின், தாது உப்பு ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.
கரிசலாங்கண்ணிக்கீரை ரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. கண் பார்வையை தெளிவுபடுத்துகிறது. உடலுக்கு உரமூட்டுகிறது. மண்ணீரலில்
ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் முக்கியத்தும் பெற்றுள்ளது. தோல் வியாதிகளுக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது.
இந்தக் கீரையை உண்பதாலும், இதன் சாற்றை தலையில் தேய்ப்பதாலும் முடி கருகருவென்று வளரும். குழந்தைகளை தேய்த்து குளிப்பாட்டவும் இந்தக் கீரையின் சாற்றைப் பயன்படுத்தலாம். கரிசலாங்கண்ணி இலைச் சாறு இரண்டு சொட்டுகளுடன், எட்டு சொட்டு தேனைக் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, நீர்க்கோவை போன்றவை குணமாகும்.
நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கரிசலாங்கண்ணி சாறு சேர்த்து காய்ச்சி, தயாரிக்கப்பட்ட தைலத்தை, தலைவலி முதலியவற்றுக்குத் தேய்க்கலாம். தலையில் தேய்த்தால் தலை முடி கருமையாகும். இந்த தைலத்தை உடலில் வலியுள்ள இடத்தில் தேய்த்தால் வலி நீங்கும்.
எடையையும், உடல் பருமனையும், தொந்தியையும் கரைக்க விரும்புபவர்கள், இக்கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சாற்றை காதில் விட்டால் காது வலி நீங்கும்.

