பா.மாலா, சென்னை: நாங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறோம். என் குழந்தை விளையாட வெளியில் செல்வதில்லை. இதனால் அவனது உரிமை பறிக்கப்படுகிறதா?
திறந்தவெளியில் தான் குழந்தைகளின் இயல்பான உணர்வு வெளிப்படுகிறது. குதிப்பது, ஓடுவது, ஏறுவது, ஊஞ்சலாடுவது மறைந்து விளையாடுவது போன்றவை, வெளியில் விளையாடினால் தான் சாத்தியம். வீடுகளுக்குள்ளும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும், குழந்தைகள் முடக்கப்படும் போது, குறும்பு செய்வது, சுதந்திரமாகச் செயல்படுவது போன்ற குழந்தைகளுக்கான உரிமைகள் பறிக்கப்படுகின்றன. விளையாட அனுமதித்தால், குழந்தைகள் குழந்தைகளாகவே வளர்வர். இல்லையென்றால், மனதளவிலும், உடலளவிலும் குறை வளர்ச்சி உள்ளவர்களாகவே இருப்பர்.
தி. நாதன். மனநல ஆலோசகர், சென்னை.
ஜெ. பிரகாஷ், திருச்சி: எனக்கு வயது 34; நல்ல வேலையில் உள்ளேன். பகல் நேரங்களில், காபி அதிகம் குடிப்பேன். இரவில் ஆல்கஹால் எடுத்துக் கொள்வேன். இந்த பழக்கங்கள், நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் என்கின்றனர் நண்பர்கள்; உண்மையா?
என்ன தான் காபி சுறுசுறுப்பை வழங்கினாலும், அளவுக்கு அதிகமான அளவில், 'காபின்' நிறைந்த காபியைக் குடித்தால், தூக்கமின்மை ஏற்பட்டு, அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை இழக்கும். சோடா குடிக்கும் பழக்கம் இருந்தால், உடனே அதை நிறுத்துங்கள். ஏனெனில், சோடாவில் ஊட்டச்சத்துக்கள் கிடையாது. மேலும், அதில், 'பாஸ்பாரிக் ஆசிட்' உள்ளதால், அது உடலில் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவைக் குறைக்கும்.
ஆல்கஹாலை அளவுக்கு அதிகமாக குடித்தால், நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும். மேலும், வெள்ளையணுக்களின் அளவும் குறையும். மேற்சொன்ன காரணங்களால், நோயெதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது.
ப. அன்புச்செல்வன், பொது மருத்துவர், சென்னை.
தொ. ராமையா, அயன்புரம், சென்னை: எனக்கு உடலில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறது. குப்பைமேனி சாற்றை, அரிக்கும் இடத்தில் தடவ சொல்கின்றனர். அப்படி செய்யலாமா?
மழைக் காலங்களில் சாலையோரங்களில் எளிதில் வளரக் கூடிய கீரை, குப்பை மேனி. கசப்பும், கார்ப்பும் கலந்த சுவை கொண்டது.
பல் நோய், தீப்புண், வயிற்றுவலி, வாத நோய்கள், மூலம், நமைச்சல், மூச்சிரைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், போன்ற பிரச்னைகளுக்கு, இது அருமருந்து. குப்பைமேனி இலையோடு மஞ்சள், சிறிது உப்பு சேர்த்து, அரிப்பு, ஒவ்வாமை, சொறிசிரங்கு ஏற்பட்டுள்ள இடங்களில் நன்றாக தேய்த்து, குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆர். ராமகிருஷ்ணன், சித்த மருத்துவர், சென்னை.

