PUBLISHED ON : நவ 23, 2016
ஹெல்மெட் அணிவதால், முடி உதிரும், செவித் திறன் குறையும் என்பது உண்மையா; ஒருவர் பயன்படுத்தும் ஹெல்மெட்டை மற்றவர் உபயோகிக்கலாமா; ஒவ்வாமை ஏதும் வர வாய்ப்புண்டா?
ஜி.கோபாலகிருஷ்ணன், திருவாரூர்
ஹெல்மெட் போட்ட சில நிமிடங்களில் எனக்கு தலைவலி வந்துவிடுகிறது. இது ஹெல்மெட்டால் வரக்கூடிய பாதிப்பா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா?
எம்.ராமா, கூடுவாஞ்சேரி
ஹெல்மெட்டால், தலைமுடி உதிரும் என்பதெல்லாம் கற்பனை. ஒரு நாளில், 100 முடி வரை உதிர்வது இயல்பான ஒன்று. அதற்கு மேல் தினமும் உதிர்ந்தால் தான்,இது ஊட்டச்சத்து குறைபாடா, நாளமில்லா சுரப்பிகளில் பிரச்னையா, இவை இரண்டும் இல்லாமல், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பதை, முறையான மருத்துவப் பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும். ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டுவது, பாதுகாப்பானது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இன்னொரு முக்கியமான விஷயம், ஹெல்மெட் அணிவது காதுகளுக்கு பாதுகாப்பானது. ஒரு குறிப்பிட்ட, 'டெசிபல்' சத்தத்தை காதுகள் கேட்பது தான் பாதுகாப்பானது. 60 டெசிபல் வரை கேட்கலாம்; 86 டெசிபல் சத்தத்தை தொடர்ந்து எட்டு மணி நேரம் வரைக் கேட்டால், காதுகளுக்கு நிரந்தர பாதிப்புகள் வரும். ஒரு புல்டோசர் இயந்திரம் இயங்கும்போது ஏற்படும் சத்தம் என்பது, 80 டெசிபல். 100 டெசிபலுக்கு மேல், 15 நிமிடங்கள் வரை, நம் காதுகள் தொடர்ந்து கேட்டாலே பாதிப்பு வந்துவிடும். மெல்லிய காற்றில் இலைகள் ஆடும் சப்தம் என்பது,
'0' டெசிபல். ஆரோக்கியமான காதுகளுக்கு, இந்த சத்தமே நன்றாகக் கேட்கும். மனிதக் காதுகள் எவ்வளவு சத்தத்தைக் கேட்கும் திறன் கொண்டவை என்பதை ஆய்வில் தெரிந்து கொள்ள முடிவதில்லை.தொடர்ந்து ஒலி மாசிலேயே இருந்தால், நிச்சயம் செவித்திறன் பாதிக்கப்படும் என்பது மட்டும் உண்மை. நீங்கள் ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டினால், வாகனங்களின் இரைச்சல், சுற்றுப்புறத்தில் இருக்கும் சத்தத்தில் இருந்து, உங்கள் காதுகள் பாதுகாக்கப்படும். தலைவலி வருவதற்கு, ஹெல்மெட் எந்த விதத்திலும் காரணமாக இருக்கவே முடியாது. ஹெல்மெட்டை தேர்வு செய்யும்போது, உங்களின் தலைக்கு பொருத்தமான, சரியான அளவில் தேர்வு செய்ய வேண்டியது முக்கியம். தளர்வாகவோ, இறுக்கமாகவோ இருக்கக் கூடாது. புதிதாக ஹெல்மெட் அணியும் போது, காற்று தலையில் படாமல் ஒருவித இறுக்கமான உணர்வு இருப்பதைப் போல தெரியலாம். இதனால் வியர்வை அதிகமாகி தலைவலி வரலாம். சுத்தமான பருத்தி துணியை தலையில் கட்டி, அதன்மேல் ஹெல்மெட்டை அணிந்தால், வியர்வை உறிஞ்விடும்; பழகப் பழக தலைவலி சரியாகிவிடும். ஒருவர் பயன்படுத்திய பொருளை, மற்றவர் முடிந்தவரை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. தவிர்க்க முடியவில்லை என்றால், தலையில் பொடுகு, தோல் அலர்ஜி, வேறு ஏதேனும் தோல் பிரச்னைகள் இருப்பவர்களின் ஹெல்மெட்டையாவது பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
டாக்டர் பாரத், பொதுநல மருத்துவர், பாளையங்கோட்டை
