PUBLISHED ON : ஜூலை 17, 2011
நிமோனியா காய்ச்சலுக்கு தடுப்பூசி உண்டு
நிமோனியா காய்ச்சலிலிருந்து தப்பிக்க, முதியோர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என, எங்கோ நான் படித்தேன். என் மருத்துவரிடம் கேட்டபோது, எந்த தடுப்பூசி கொடுக்க வேண்டும் என, தனக்குத் தெரியாது எனக் கூறி விட்டார்.
முதியோர் அனைவரும், குறிப்பிட்ட நோய்களுக்கு, 'சட்'டென ஆளாகி விடுவர். சாதா குளிர் காய்ச்சல் கூட, அவர்களை அதிகமாக பாதிக்கும்; பக்க விளைவுகளை ஏற்படுத்தும். 60 வயதைக் கடந்த முதியோருக்கு, குளிர் காய்ச்சல் பருவங்களான அக்டோபர் / நவம்பர் மாதங்களில், அதற்கான தடுப்பூசி போட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இது மேற்கொள்ளப்பட வேண்டும்.
'நீமோகாக்கஸ்' என்ற பாக்டீரியாவால் கூட, நிமோனியா காய்ச்சலும், மூளைக் காய்ச்சலும் ஏற்பட வாய்ப்புண்டு. 'நீமோ 23' என்ற தடுப்பூசி, இக்காய்ச்சல் வராமல் தடுக்கும். கையில் இதற்கான ஊசி போடப்படும். ஒரு முறை ஊசி போட்டால், 20 ஆண்டுகள் வரை அதன் வீரியம் இருக்கும்.
என் எடை, 50 கிலோ. இதை அதிகரிக்க விரும்புகிறேன். உணவு அளவை அதிகப்படுத்த, தினமும் இரண்டு முட்டைகள் சாப்பிடுகிறேன். உணவில் நெய்யும் சேர்த்துக் கொள்கிறேன். இவை அனைத்தும் என் முகத்தில் பருக்களைத் தோற்றுவிக்குமா?
உணவு அளவை அதிகரிப்பதால் உங்கள் எடை கூடும் என்பது உண்மை; கூடவே, கொழுப்பும் சேர்ந்து விடும். எனவே, பெரிய வயிறும், ஒல்லியான கை கால்களுமாய் தோன்றத் துவங்கி விடுவீர்கள். எனவே, தினமும் ஒரு மணி நேரம் ஓட்டப் பயிற்சியும், உடலை உறுதிப்படுத்தும் பயிற்சியும் மேற்கொள்ளுங்கள். அப்போது, தெளிவான தோற்றம் கிடைக்கும். எண்ணைப் பசை நிறைந்த சருமம், ஹார்மோன் மாறுபாடுகளுமே, முகத்தில் பரு தோன்றக் காரணங்கள். அதிக உணவுடன், சரியான உடற்பயிற்சியும் இருந்தால், முகத்தில் பரு தோன்ற சாத்தியமில்லை.
- டாக்டர் கீதா மத்தாய்,
குழந்தை நல மருத்துவர், வேலூர்.
தொடர்புக்கு: yourhealthgm@yahoo.co.in
