தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ரிலாக்ஸ் மனமே ரிலாக்ஸ் - சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!

ரிலாக்ஸ் மனமே ரிலாக்ஸ் - சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!

ரிலாக்ஸ் மனமே ரிலாக்ஸ் - சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!


PUBLISHED ON : ஜூன் 27, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 27, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''என்னம்மா... சும்மா கருத்து வேற்றுமை அப்படி, இப்படினு சொன்னா, விவாகரத்து கொடுக்க முடியாது. உங்களுக்குள் என்ன பிரச்னைன்னு சொன்னாத்தான், அதற்கேற்ப நாங்க பிரச்னையை தீர்க்க முடியும்,'' என, குடும்ப ஆலோசனை வழங்கும் நபர் சொல்ல, அவர் எதிரே இறுகிய முகத்துடன் அமர்ந்து இருந்தாள் ஸ்வேதா.

எது நடந்தாலும், ஏற்றுக் கொள்ளும் மனநிலையில், அருகே அமர்ந்து இருந்தான் கணவன் ரகு. இருவரும் பேசாமல் ஊமை போல அமர்ந்து இருந்தனர். சிறிது நேரத்தில், வாய்தா தேதி அறிவிக்கப்பட்டதும், இருவரும் குடும்ப நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறி, தனித்தனியாக சென்றனர்.

வழியில் ரகு, அவனது கல்லுாரி தோழன் மூர்த்தியை எதிர்பாராமல் சந்தித்தான். பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, மூர்த்தியிடம் தனது குடும்ப உறவில் உள்ள குறையை, வெகு நேர தயக்கத்துக்குப்பின் எடுத்துக்கூறினான் ரகு.

அதற்கு மூர்த்தி, 'ப்பூ....இதுக்குப்போயா கலங்கி நிற்கறே! இப்பல்லாம் இது ஒரு பிரச்னையே இல்லை,'' எனக்கூறி, கோவை ஜி.கே.என்.எம்.,மனநல மருத்துவர் வினோத் பாலாஜியிடம் ரகுவை, மூர்த்தி அழைத்து சென்றான்.

தகுந்த மருத்துவம், புத்துணர்வு சிகிச்சைக்குப் பின், விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றாள் ஸ்வேதா. அவர்களின் வாழ்வில் வண்ண பூக்கள் மலர்ந்தன.

ரகுவின் பிரச்னை குறித்து, கோவை ஜி.கே.என்.எம்., மருத்துவமனை மனநல மருத்துவர் வினோத் பாலாஜி கூறியதாவது:

பொதுவாக இது போன்ற பிரச்னைகளை, உளவியல் மற்றும் உடலியல் ரீதியாக அணுக வேண்டும். மனைவியை உடல் ரீதியாக மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது குறித்து, பலருக்கு தயக்கம், பதட்டம் உள்ளது.

இதை அடிப்படையாய் கொண்டு ஏற்படுகிற சிக்கல், ஆண்களுக்கு மன அழுத்தம், பதட்டத்தை உருவாக்கலாம். கணவன், மனைவி இடையே ஏற்படும் சந்தேகம், சண்டை போன்றவை திருப்தியான இல்லற வாழ்க்கைக்கு எதிராக அமையலாம்.

உடல் ரீதியான பிரச்னை என்றால், சிலருக்கு டயபடீஸ், உயர் ரத்த அழுத்தம் இருந்தாலும், உடலில் இரைப்பை அருகே நரம்புகள் சுருண்டு, சுருண்டு இருந்தாலும், இல்லற வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தலாம். இதற்கு ஆபரேஷன்தான் தீர்வு.

நரம்பு பிரச்னை உள்ளவர்கள், ஹார்மோன் பற்றாக்குறை, அதிக போதை பழக்கம், புகை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உறவுகளில் உள்ள பிரச்னை, பதட்டநோய், மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றாலும், இல்லற உறவில் சிக்கல் ஏற்படலாம்.

இப்பிரச்னைக்கு முக்கியமான காரணம் பாலியல் குறித்த, சரியான கல்வி அறிவு இல்லாததுதான். பத்து பேரில், 8 பேருக்கு பாலியல் ரீதியான தெளிந்த அறிவு இல்லை. செக்ஸ் கல்வி, தம்பதியினருக்கு கண்டிப்பாக வேண்டும்.

எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது, எப்படி செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது குறித்து கண்டிப்பாக, தெரிந்து வைத்திருக்க வேண்டும். சரியாக செயல்பட முடியவில்லை என்றால், சிலருக்கு குற்ற மனப்பான்மை ஏற்படும். இது, அவர்களின் இல்லற உறவை பாதிக்கும். இவர்கள் தகுந்த மருத்துவரை பார்த்து, ஆலோசனை பெறலாம்.

கணவன், மனைவி இடையே ஏற்படும் விவாகரத்துகளுக்கு, 50 சதவீத காரணம் பாலியல் பிரச்னையே என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெளிப்படையாக வெளியே சொல்லத்தயங்கும், இவ்விஷயத்தால் பலபேரின் வாழ்க்கை பாழாகிறது.

என்னதான் தீர்வு

ஹார்மோன் பரிசோதனை, உடல் பரிசோதனை, ரத்த ஓட்ட பரிசோதனை, கல்லீரல், சிறுநீரக பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

பொதுவாக பாலியல் ரீதியாக, ஒருவருக்கு பிரச்னை என்றால், அவருக்கு உண்மையாக பிரச்னை உள்ளதா, அவராகவே கற்பனை செய்து கொள்கிறாரா என, பார்க்க வேண்டும்.

இவ்விஷயத்தில் பயம், மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றை தவிர்த்து, தம்பதியினரிடையே சரியான தகவல் பரிமாற்றம் ஏற்படுத்திக் கொள்வது அவசியம். மன அழுத்தம், பயம், பதட்டத்துக்கு மருத்துவம் உள்ளது. உடற்பயிற்சிகள், தியானம், யோகா பயிற்சிகளும் உதவும். இவ்வாறு, டாக்டர் வினோத் பாலாஜி கூறினார்.

இதுதான் அறிகுறிகள்

சாதாரண வாழ்க்கையில் குறிப்பிட்ட நபரின் மீது, அதிகப்படியான பணியை செய்யச் சொல்லி வற்புறுத்தினால், அவரால் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, மனச்சோர்வு ஏற்படலாம். அது போல இவ்விஷயத்தில், சிலருக்கு உளவியல் ரீதியான பிரச்னை எற்படலாம். நம்மால் முடியுமா, முடியாதா என பதட்டம் ஏற்பட்டு, அதனால் நடுக்கம், உள்ளங்கை வேர்த்து போதல், இதயத்துடிப்பு அதிகரித்தல் ஆகியவை, இதன் அறிகுறிகள்.

டாக்டர் வினோத் பாலாஜி,

மனநல மருத்துவர்

80567 44455

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us