PUBLISHED ON : மே 30, 2010
எனக்கு கடந்த 2 ஆண்டுகளாக ரத்தத்தில், " TRIGLYCERIDES (TGL)' அளவு 400 மி.கி.,க்கு மேலாகவே உள்ளது. இதற்காக நான் ATORVA STATIN மாத்திரை எடுத்து வருகிறேன். அதன் பிறகும் LDL அளவு குறைகிறதே தவிர, TGL அளவு குறையவில்லை. நான் என்ன செய்வது?
-பி.ராஜாராமன், பழநி
ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைப்பதற்கு முதலில் வாழ்க்கை முறை மாற்றம் மிகவும் முக்கியம். இதில் உணவுக் கட்டுப்பாட்டுடன், நடைப் பயிற்சி ஆகியவையே முதன்மையானவை. இதன் பின்னரும் TGL அளவு கூடுதலாக இருந் தால் அதற்கு, "FIBRATE' வகை மாத்திரைகள் உன்னதமானவை. இவை ரத்தத்தில் TGL அளவை நன்கு குறைக்கும் மருந்துகளாக உள்ளன. TGL அளவு 200 மி.கி., அளவுக்கு கீழ் வந்த பின், ROSUVA STATIN வகை மாத்திரைகளை எடுப்பது நல்லது. இது ATORVA STATIN மாத்திரைகளை விட TGL அளவை நன்கு குறைக்கிறது. இத்துடன் மீன் எண்ணெய் மாத்திரையான OMEGA3 FATTY ACID மாத்திரையை எடுப்பது நல்லது. இவை அனைத்தையும் செய்தால் TGL அளவை குறைத்துவிட முடியும்.
எனக்கு அவ்வப்போது இடது கை குடைச்சல், இடது மார்பகத்தில் வலி வருகிறது. நான் எவ்வகை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்?
- எம்.பரமேஸ்வரி, அண்ணாநகர்
இடது கை, தோள்பட்டை, நெஞ்சு, முதுகு, கழுத்து, தாடை, மேல்வயிறு போன்ற இடங்களில் வரும் வலியை அலட்சியப்படுத்தக் கூடாது. இது இருதய வலி, தசை வலி, நரம்பு தொடர்பான வலியாகவோ, எலும்பு சம்பந்தமான வலியாகவோ இருக்கலாம். முதலில் இது இருதய வலியா என கண்டறிவது மிகமுக்கியம். இதற்கு டிரெட் மில் பரிசோதனை, எக்கோ பரிசோதனை ஆகிய இரண்டும் அவசியம் செய்தாக வேண்டும்.இந்த இரண்டு
பரிசோதனைகளும் நார்மலாக இருந்தால், அது இருதய வலி அல்ல என தெரிந்து கொள்ளலாம். இருதய வலியாக இல்லாவிட்டால் அவற்றை வலிநிவாரணி மாத்திரைகள் மூலம் எளிதில் சரிசெய்யலாம்.
எனக்கு 38 வயதாகிறது. நான் மிகவும் உடல் பருமனாக உள்ளேன். நான் எவ்வகை மாத்திரைகளை எடுத்தால் உடல் பருமனை குறைக்க முடியும்?
-வி.மீனாட்சி, விருதுநகர்
ஒருவரின் சரியான உடல் எடை அவரது உயரத்துக்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும். உடல் எடை (கிலோ கிராமில்) = உயரம் (செ.மீ.,யில்) - 100. அதாவது உடல் எடை என்பது உயரத்தை செ.மீ.,யில் குறித்துக் கொண்டு, அதில் நூறை கழித்தால் வரும் அளவே சரியான எடையாகும். உடல் எடையை குறைக்க வாழ்க்கை முறை மாற்றமே சரியான வழிமுறையாகும். உணவு கட்டுப்பாடு முக்கியம். குறிப்பாக காபி, டீ யில் சர்க்கரையை தவிர்ப்பது, இனிப்பு பலகாரங்கள், நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்ப்பது மற்றும் அரிசி வகை உணவை நன்கு குறைப்பது மிகமுக்கியம். இத்துடன் கடினமான உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை குறைக்க முடியும். இதற்கு தற்போது நவீன மருந்துகளும் வந்துள்ளன. இந்த மருந்துகள் உடலின் எடையை நன்கு குறைக்கும் தன்மை படைத்தவைதான். ஆனால் அவற்றை சில மாதங்கள் எடுத்துவிட்டு நிறுத்தினால், மீண்டும் எடை கூடும் தன்மை உள்ளது. அத்துடன் பக்க விளைவுகளும் உள்ளன. எனவே எடையை குறைக்க மருந்து இன்றி, உணவுப் பழக்கம், உடற்பயிற்சியே சிறந்த வழிமுறையாகும்.
எனக்கு இரண்டு மாத காலமாக சிறிது தூரம் நடந்தாலே நெஞ்சில் வலி ஏற்படுகிறது. ஆனால் வியர்வையோ, மூச்சுத் திணறலோ வருவதில்லை. இது இருதய வலியாக இருக்க வாய்ப்புள்ளதா?
-கே.சந்தானராஜ், திருப்பூர்
நடக்கும்போது ஏற்படும் நெஞ்சுவலி இருதய வலியாக இருக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். எனவே அதை அலட்சியம் செய்யவேகூடாது. உடனடியாக இருதய டாக்டரிடம் சென்று, இ.சி.ஜி., எக்கோ பரிசோதனைகள், டிரெட் மில் பரிசோதனையை செய்து கொள்வது முக்கியம். டிரெட் மில் பரிசோதனையில் மாறுதல் ஏற்பட்டால் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்வது அவசியம். ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் கிடைக்கும் முடிவுக்கு ஏற்ப, உங்களுக்கு மருந்து மாத்திரை முறையோ, பலூன் சிகிச்சை அல்லது பைபாஸ் சர்ஜரி சிகிச்சையோ தேவைப்படலாம்.
டாக்டர் விவேக்போஸ், மதுரை

