PUBLISHED ON : ஜூன் 06, 2010

* எனக்கு 4 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. இருதயத்தில் 6 மாதங்களுக்கு முன் STENT பொருத்தப்பட்டது. தற்போது எனக்கு அடிக்கடி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது. இருந்தாலும் எனது டாக்டர், சர்க்கரை மாத்திரைகளை குறைக்க வேண்டாம் என்று கூறுகிறார். நான் என்ன செய்வது?
- மே. ரத்தினம், தேனி.
இருதய நோயாளிகளுக்கு சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைப்பது முக்கியம். சர்க்கரை அளவு மிகவும் குறையாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். மருத்துவ வழிகாட்டுதல்படி, இருதய நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு மிகவும் குறைந்தால், அது இருதயத்தை கொடூரமாக பாதிக்கிறது என தெரியவந்துள்ளது. அதனால் சர்க்கரை வியாதி உள்ள இருதயநோயாளிகள் தங்களது சர்க்கரை அளவை வெறும் வயிற்றில் 130 மி.கி.,க்கு கீழும், சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின் 180 மி.கி.,க்கு கீழும் வைத்துக் கொண்டால் போதுமானது. அதனால் உடனடியாக உங்கள் சர்க்கரை மாத்திரை அளவை குறைப்பது மிகவும் அவசியம்.
* ஹார்ட் பெயிலியருக்கும், ஹார்ட் அட்டாக்கிற்கும் என்ன வேறுபாடு?
- பி. சவும்யா தேவி, தேவிபட்டினம்
"ஹார்ட் பெயிலியர்' என்பது இருதயத்தின் பம்பிங் திறன் மற்றும் செயல்பாடு குறைந்து, அதனால் ஏற்படும் மூச்சுத்திணறலையே "ஹார்ட் பெயிலியர்' என்கிறோம். இது மூச்சுத் திணறலாகவோ, கால் வீக்கமாகவோ, வயிறு வீக்கமாகவோ தென்படலாம். ஹார்ட் பெயிலியர்க்கு பல காரணங்கள் உள்ளன. இதில் ஒன்றுதான் ஹார்ட் அட்டாக். இருதயத்திற்குள் ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, அதனால் இருதயத்திற்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது, அதை மாரடைப்பு என்கிறோம். தவிர, ஹார்ட் பெயிலியர்க்கு வால்வுகளில் கோளாறு, ரத்தகொதிப்பு, இருதய தசை வியாதி, நுரையீரலில் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, சில வகை மருந்துகள், பிறவியில் இருந்தே இருக்கும் இருதய ஓட்டைகள் போன்ற பல காரணங்கள் உள்ளன.
* நான் ஒரு மேடை பேச்சாளன். எனக்கு பை-பாஸ் சர்ஜரி செய்து இரு மாதங்களாகின்றன. நான் மீண்டும் மேடை ஏறி ஆவேசமாக பேச முடியுமா?
- நாகேந்திரன், மதுரை.
பை-பாஸ் சர்ஜரி என்பது இருதயத்தில் உள்ள ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பை ஆப்பரேஷன் மூலம் சரிசெய்யும் முறை. இதில் நெஞ்சில் இருந்தோ, கை அல்லது காலில் இருந்தோ ரத்தநாளங்கள் எடுக்கப்பட்டு இருதயத்தில் பொருத்தப்படுகிறது. பொதுவாக பை-பாஸ் சர்ஜரி செய்த பின், ஆறு வாரங்கள் ஓய்வு எடுத்தால் போதுமானது. இருந்தாலும் உங்களை போன்ற மேடை பேச்சாளர்கள், 3 மாதங்கள் ஓய்வுக்கு பின், அடிப்படை ரத்தப்பரிசோதனை, இ.சி.ஜி., Echo டெஸ்ட், TMT பரிசோதனை செய்துவிட்டு, அனைத்தும் நார்மலாக இருந்தால் மேடையில் பேசலாம். இருதய நோயாளிகளாக இருப்பவர்கள் எப்போதுமே மனதளவில் டென்ஷன் ஆகாமல் இருப்பது நல்லது. மேடையில் பேசும்போது பதட்டம், ஆவேசம், கோபம் இல்லாமல் பேச வேண்டும்.
எனது மகனுக்கு 15 வயதாகிறது. Echo டெஸ்ட் செய்ததில் PULMONARY STENOSIS என்ற வியாதி உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு என்ன சிகிச்சை முறைகள் உள்ளன?
- ஆ. சீனிவாசன், சிவகங்கை.
PULMONARY STENOSIS என்பது இருதயத் தின் வலதுபுறத்தில் இருக்கும் ஒரு வால்வில் சுருக்கம் ஏற்படுவது. இது பிறவியில் இருந்தே ஏற்படும் வியாதி. தற்போது இதற்கு ஆப்பரேஷன் இல்லாமல் பலூன் மூலம் எளிதில் சிகிச்சை அளிக்க முடியும். தொடையில் சிறு துவாரமிட்டு, அதன்மூலம் நீண்ட கதீட்ரல் மூலமாக பலூனை செலுத்தி, சரி செய்ய முடியும்.
- டாக்டர் விவேக்போஸ், மதுரை.
இருதய நோய் தொடர்பான கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி :
இருதயம் காப்போம், தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், தினமலர் அவென்யூ, மதுரை-16

