PUBLISHED ON : ஏப் 03, 2022

உலகத்தோடு நம்மை தொடர்புபடுத்திக் கொள்வதில், நமது இரு கண்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்றைய குழந்தைகள் மொபைல், 'டிவி', கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுடன் அதிக நேரம் செலவிடுகினறனர். இதனால், சிறு வயதிலேயே கண் கண்ணாடி அணியும் குழந்தைகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தவிர, பெரியவர்கள் பலரும் கண் குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
கண் குறைபாடுகளுக்கு உடனடியாக கண்ணாடி அணிவதை தவிர்த்து எளிய பயிற்சி மூலம், சரி செய்துகொள்ளலாம் என, ஆராய்ச்சிகள் பல தெரிவிக்கின்றன.சில பயிற்சிகளையும், வழிமுறைகளையும் பார்ப்போம்...
* டேபிள் மீது முழங்கைகளை ஊன்றிக் கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை கண்களின் மேல் குவித்து வைத்துக் கொள்ளுங்கள். சில வினாடிகள் இருளை கண்களில் உணர்வீர்கள். இதுபோன்று, நேரம் இருக்கும்போது, 30 வினாடி என்ற அளவில், ஐந்து முறை கண்களை திறந்து, மூடி பயிற்சி செய்யலாம்.
* இளம் காலை, இளம் மாலை நேர வெயிலை கண்களை லேசாக மூடிய படி சிறிது நேரம் பார்க்க வேண்டும். நீண்ட நேரமும், கண்களை முழுமையாக திறந்தும் இப்பயிற்சியை செய்யக்கூடாது. இது, கண்களுக்கு ஓர் அமைதியை அளிக்கும்.
* கண்களின் கரு விழி பகுதியை இடமிருந்து வலமும், வலம் இருந்து இடமும், மேல் இருந்து கீழும், கீழ் இருந்து மேலும் சுழற்ற வேண்டும். முகம், கழுத்தை அசைக்காமல் கண்களின் பார்வையை மற்றும் சுழற்ற வேண்டும். இதன் மூலம் கண்களில் உள்ள நுண்ணிய தசைகளை உறுதிப்படுத்தும்.
* கண்களை மூடிக்கொண்டு அழுத்தம் கொடுக்காமல், இரண்டு விரல்களால் வட்ட வடிவில் மசாஜ் செய்யலாம். நகங்கள் கண்களில் குத்தி விடாமல், கவனத்துடன் மசாஜ் செய்ய வேண்டும்.
* வாகனத்தில் மட்டுமல்ல. கண்களிலும் எட்டு போட்டு பயிற்சி பெறலாம். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து, ஆறு அடி தள்ளி எட்டு என்ற எண்ணை பெரிதாக வரைந்து, பார்வையை அதன் மீது படித்து எட்டு வடிவத்தில், பார்வையை செலுத்துங்கள். தொடர்ந்து, மூன்றுநிமிடம் இதேபோன்று செய்யலாம்.
* கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்களாக இருந்தால், குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது வெளிச்சம் குறைவாக உள்ள பகுதிக்குச் சென்று வர வேண்டும்.
* குறிப்பாக, இரவு உறக்கத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பேமொபைல், 'டிவி', கம்ப்யூட்டர் பார்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
