PUBLISHED ON : செப் 16, 2015

ரம்யாவுக்கு வயது 3. படுசுட்டிப் பெண்; அப்பா செல்லம். தன்னைப் போலவே தன்னுடைய மகளும் இருப்பதால், கார்த்திக்குக்கு, தன் மகளின் மேல், அளவில்லா பாசம். அதனால்தானோ என்னவோ, அப்பாவின் அத்தனை குணாதிசயங்களும் ரம்யாவிடம் நிரம்பிக் கிடந்தன. அதனால், ரம்யாவை, 'குட்டி' கார்த்திக் என்றே அழைப்பர்.
கார்த்திக்கின் மனைவியும் கணவரைப் போலவே. தன் மகள் மீது, கொள்ளை பாசம் வைத்திருந்தார். எப்போதும், ரம்யாவை பற்றிய கனவிலேயே இருப்பார்.
ரம்யாவுடன் தாய் வழிப் பாட்டியும் உள்ளார். எந்நேரமும், தன் பாட்டியுடனேயே பொழுதை கழிப்பாள். இவ்வளவுக்கும் பின், ரம்யா வீட்டில் சந்தோஷத்துக்கு குறைவிருக்குமா என்ன?
இவ்வளவு சந்தோஷத்துக் கிடையிலும், ஒரே ஒரு துக்கம், குடும்பத்துக்கே உண்டு. ஆமாம், ரம்யா சரிவர சாப்பிடுவதில்லையாம்.
இதனாலேயே, தன் கணவரிடம், ரம்யாவின் தாய் இந்துமதி அடிக்கடி திட்டு வாங்குவார். தாய்ப்பால் கொடுப்பதால்தான், ரம்யா சரிவர சாப்பிட மறுக்கிறாள் என்பது, கார்த்திக்கின் எண்ணம்; அதுவே, பெரும் குற்றச்சாட்டு. அதற்காக, இறைவன் கொடுத்த வரமான தாய்ப்பாலை நிறுத்த முடியுமா? முடியாது என, அடம் பிடித்து தொடர்ந்தார் இந்துமதி.
ஒரு கட்டத்தில், ரம்யா மெலிய ஆரம்பிக்க, பிரச்னை வீட்டுக்குள் பூகம்பமாகி, என்னிடம் ஆலோசனைக்காக வந்தனர்.
ரம்யாவின் மலம் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. காரணம், மலத்தில் குடற்புழுக்கள் உள்ளனவா என அறிந்து கொள்ளத்தான். பரிசோதனை முடிவில், ரம்யாவின் உடலில், கொக்கி புழுக்கள் இருப்பது தெரிய வந்தன.
திறந்த வெளிக் கழிப்பறைகளை உபயோகிப்பது; சாப்பிடுவதற்கு முன், கைகளை கழுவி சுத்தப்படுத்தாதது; பாக்கெட் உணவுகளை உண்பது என, பல காரணங்களால் குடலில் கொக்கி புழுக்கள் உருவாகின்றன.
குடற் புழுக்களின், ஒவ்வொரு லார்வாவும், சிறு குடலின் சுவரைத் துளைத்து, ரத்தத்தில் கலந்து, கல்லீரலுக்குள் சென்று, அங்கு தங்கி, பின், இதயத்துக்குள் சென்று, நுரையீரலுக்குள் நுழைகிறது. பின், உணவுக் குழாய்க்கு வந்து, மீண்டும் இரைப்பை வழியாக, குடலுக்கு வந்து சேரும். இந்த கட்டத்தில், இவை முழு புழுக்களாக வளர்ந்து விடும்.
கொக்கிப் புழுக்கள், தினமும், 0.2 மில்லி அளவுக்கு, ரத்தத்தை உறிஞ்சிவிடும். ஒருவருடைய குடலில், ஒரே நேரத்தில், 100 புழுக்களுக்கும் அதிகமாகவும், அவை வசிப்பதும் உண்டு.
குடல் புழுக்கள், பெரும்பாலும் குழந்தைகளையே அதிகமாக பாதிக்கிறது. குடல் புழுக்களால், மல வாயில், இரவு நேரங்களில் அரிப்பு ஏற்படக்கூடும்; எடை குறையும் வாய்ப்புள்ளது. பெரும்பாலும், பசி உணர்வு இருக்காது.
இந்த காரணத்தை அறிந்த பின், ரம்யாவுக்கு கொக்கிப் புழுக்கள் வெளியேற, மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. குடல் புழுக்கள் முழுமையாக வெளியேறியதும், ரம்யா விரும்பியதையெல்லாம் சாப்பிட ஆரம்பித்து விட்டாள். சரியான நேரத்துக்கும் பசி எடுத்து சாப்பிட்டதன் விளைவு, அவள் உடம்பு எடை முன்பைக் காட்டிலும் அதிகரித்தது. இதனால், குடும்பத்தில் நிலவிய சச்சரவுகள், ஒரு சில வாரங்களிலேயே மறைந்தது.
வெ. வெங்கடேசன்,
குழந்தைகள் நல மருத்துவர்,
சென் மருத்துவமனை.
சென்னை.
98402 43833

