PUBLISHED ON : மே 22, 2010
கார்த்திகேயன், ஒத்தக்கடை, மதுரை:
முகத்தில் மீசையுள்ள பகுதியில் காயம் ஏற்பட்டதால், அங்கு முடி வளரவில்லை...
தலையிலிருந்து முடி எடுத்து, மீசை பகுதியில் பதித்து கொள்ளலாம். இந்த சிகிச்சையின்போது, தழும்பு ஏற்படாது. மேலும், மற்ற முடியை போல, இதையும், "ஷேவ்' செய்து கொள்ளலாம். சென்னையில் மிகச் சிறந்த முடிமாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர். அவர்களை அணுகவும்.
புஷ்பமாலதி, வத்தலகுண்டு:
என் கணவருக்கு 40 வயதாகிறது. சர்க்கரை நோய் இருக்கிறது. பாதங்களில் தானாக புண் ஏற்பட்டு, பெரும் அவதிப்பட்டு வருகிறார். காரணம் என்ன?
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். இல்லையெனில், ரத்த நாளங்களும், நரம்புகளும் பாதிக்கப்படும். முக்கியமாக கால்களில், இந்த பிரச்னை முதலில் ஏற்படும். காலில் ரத்த ஓட்டம் குறையும். உணர்வு குறைந்து, வலி தெரியாமல் போகும். காலில் எரிச்சல் தன்மை ஏற்படும்.காலில் காயம் ஏற்பட்டால், அதன் வழியே பாக்டீரியா உடலில் புகுந்து, தொற்று, வீக்கம், சீழ்கட்டி ஏற்படும். இதை தவிர்க்க, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துதல், கால்களுக்கு சாக்ஸ் அணிந்து கொள்ளுதல், காலில் காயம் ஏற்படாமல் பாதுகாத்தல், நியோஸ்போரின், பாக்டோபான் களிம்புகளை, புண் மீது போட்டு, புண்ணை குணப்படுத்துதல், எப்போதும் டாக்டரின் ஆலோசனையை கேட்டு நடக்க வேண்டும்.
வாசுகி, சென்னை:
தேர்வுக்கு படிக்கும் போதோ, தேர்வு எழுத செல்லும் போதோ எனக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது ஏன்?
பயத்தால் இதுபோன்று உங்களுக்கு ஏற்படுவதாக தெரிகிறது. பதட்டத்தை குறைத்தால், இந்த நிலையை சமாளிக்கலாம். தினமும் 40 நிமிடம் ஓட்ட பயிற்சி, யோகா, 20 நிமிட தியானம் மேற்கொள்ளலாம்.
தேர்வுக்கு முன் வயிற்றுப்போக்கை தவிர்க்க, மாத்திரை ஏதும் உட்கொள்ளலாமாயென, உங்கள் மருத்துவரிடம் கேட்கவும். ஆனால், தொடர்ந்து இந்த மாத்திரைகளை சாப்பிட கூடாது. பின், அதுவே பழக்கமாகி விடும்.
தூக்க மாத்திரைகளை சாப்பிடுவதும் தவிர்க்க வேண்டும். இந்த மாத்திரைகள், உங்களை எப்போதும் அரை மயக்கத்திலேயே இருக்க செய்து விடும். எனினும், நீங்கள் சிறுவயது உடையவர் என்பதால், மருத்துவ உதவி இல்லாமலேயே இதை சரி செய்து கொள்ள முடியும்.

