PUBLISHED ON : ஏப் 06, 2020

வரவும், செலவும் செல்வச் செழிப்பில் இரு முக்கிய நிர்வாக அம்சங்கள். வரவைக் கூட்டுதலும், செலவைக் குறைத்தலும் அவசியமானவை என்பது, எல்லாருக்கும் தெரியும். வரவு பெரிதாக பெருகாத போது, செலவுகள் பெருகியபடியே இருக்கின்றன. வரவின் ஊற்று பெரும்பாலானோருக்கு ஒன்று தான்; சிலருக்கு மட்டும் தான், பல வழி வரவுகள் உள்ளன. அப்படி இருப்பினும், இத்தனை வழிகளில் தோராயமாக இவ்வளவு என்று கணக்கிட முடியும்.செலவுகள் அப்படி இல்லை. எல்லா காலங்களிலும் அவை பெருகிக் கொண்டே செல்பவை. பல செலவுகள் எதிர்பாராதவை; கட்டுப்படுத்த முடியாதவை.
இதனால் தான், பண நெருக்கடி ஏற்படுகிறது. அப்படி எனில், வரவைக்கூட்டுவதற்கு செய்யும் உழைப்பை போல, செலவைக் கட்டுப்படுத்துவதிலும் முனைப்பு காட்ட வேண்டும் இல்லையா? 'என் செலவை, என்னால் கட்டுப்படுத்த முடியாது' என்ற எண்ணம், மாற வேண்டும். செலவை, சரியாக நிர்வாகம் செய்து விட்டால், கடன் என்ற அடுத்த நிலைக்கு, செல்ல வேண்டிய அவசியமில்லை.
இதற்கு தான், மனப்பயிற்சி அவசியமாகிறது.பொதுவாக, செலவுகள் ஏன் கட்டுக்கடங்காமல் போகின்றன? கொஞ்சம் காதை தீட்டினால், அக்கம் பக்கம் பேச்சுகளே, நமக்கு பல உண்மைகள் சொல்லி விடும். 'ரெண்டு மாசம் பிடிச்சு வச்சா, 'கரெக்டா' ஒரு பண்டிகை, நல்லது கெட்டதுன்னு வருது... எல்லாம் செலவு ஆயிடுது!' 'சம்பாதிக்கறது ஒரு ஆளுன்னா, செலவு பண்றது நாலஞ்சு பேரு; அப்புறம் எப்படி மிஞ்சும்?' 'இல்லைன்னு சொன்னா இப்ப யாரு ஏத்துக்கறா? தலையை அடமானம் வச்சாவது, வாங்கித்தரணும்.' 'ஒழுங்கா சாப்பிடுறமோ இல்லையோ, நாலு பேருக்கு முன்ன ஒரு கவுரவம் இருக்குல்ல... அதுக்கு செலவு செய்யணுமே!' 'பெரிய செலவே, மாசா மாசம் கடன் கட்டுறது தான்!'
இங்கு, செலவுகளை வாழ்க்கை முறை நிர்ணயிக்கிறது. அதனால் தான், பல செலவுகளில் எது அத்தியாவசியம், எது ஆடம்பரம் என்று, இனம் கண்டு கொள்ள முடிவதில்லை. கடன் வாங்கி, அவரவர் வசதிக்கு மேல் கல்யாணம் செய்து வைப்பது என்பது, ஓர் இந்திய பண்பு.நம் கல்யாண சாப்பாடுகளில் வீணடிக்கப்படும் உணவில், பல்லாயிரம் குடும்பங்கள் பசியாறலாம். ஒருபுறம் கடன் வாங்கி செலவு செய்கிறோம்; இன்னொரு பக்கம் வீணடிக்கிறோம். காரணம், செலவு செய்தல் இங்கு ஓர் அந்தஸ்தை கொடுக்கிறது. அது தரும் மன மயக்கத்திற்கு கொடுக்கும் விலை தான், ஆடம்பரச் செலவுகள்.அதிகம் பொருட்செலவு செய்து தயாரித்த படம் எனில், நாம் உடனே அதை பிரமிப்புடன் பார்க்கிறோம். ஒரு தரமான படத்தை பார்க்கையில் கூட, உடனே கணக்கு போட்டு விட்டு, 'படத்துக்கு செலவே இல்லை; இரண்டு, மூணு, 'செட்'ல முடிச்சிட்டான்' என்று, மலினப்படுத்துகிறோம்.
ஒருவரின் மதிப்பு என்பது, அவர் சொத்து மதிப்பு, செலவு செய்யும் சக்தி, கடன் வாங்கும் தகுதி போன்றவற்றில் இருப்பதாக கணக்கிடுகிறோம். அதனால், நம் சம்பாதிப்பு, செலவு, கடன் இவை கூடுகையில் பெருமைப்படுகிறோம். உடம்பு சரியில்லை என்பதில் கூட எவ்வளவு செலவழித்தோம் என்பதில் தான் பெருமை.'அப்பல்லோவில படுத்து இரண்டு வாரம் இருந்தேன்; பதினைஞ்சு ரூபா செலவாயிடுச்சு...' என்று பெருமை பீற்றுபவர்களை பார்த்திருக்கிறோம். நோய்க்கு செலவு செய்வதில் கூட பெருமை. பெண்ணிற்கு சீர் வரிசை பரப்பிக் காண்பிப்பதை போல, செலவுகளை பெருமையாக பட்டியலிடும் நபர்களை, நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எதை ஆராதிக்கி றோமோ அதை நாம் கவர்கிறோம். செலவை பெருமைப்படுத்தி பேசப் பேச, செலவுகள் நம்மை தொடர்ந்து வந்தபடியே இருக்கும். செலவழிக்கும் சக்தியை, நம் சுய அந்தஸ்துடன் இணைக்கும் போது, சுய அந்தஸ்தை பேண செலவு செய்து கொண்டே இருப்போம். 'வேண்டாம் வேண்டாம்' என்று கூறி, உள்ளூர மகிழ்வோடு செலவு செய்கிறோம். இது, குடும்ப கலாசாரமாக மாறி விடுகிறது.இந்த செலவு வேண்டாம் என்று சொல்லப் பழகுங்கள். செலவு செய்யாமல் இருப்பதால் உண்டாகும் மனக் கசப்புகளை கடந்து செல்லுங்கள். தர்க்க ரீதியாக, அந்த செலவு வீண் என்றால் தவிர்க்கப் பாருங்கள். ஏன் வேண்டாம் என்று எடுத்துச்சொல்லுங்கள். கடன் தவிர்க்க வேண்டிய ஒன்று என, பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.
நுகர்வு கலாசாரத்தில், செலவு செய்தல் போதை. அதனால் தான், உங்களை உள்ளே இழுக்க, பெரிய பெரிய மால்களும், கோடிக்கணக்கில் செலவு செய்து, சினிமா நட்சத்திரங்களை வைத்து, 'இதை வாங்கு... அதை வாங்கு' என்று மூளைச் செலவு செய்கின்றன.உங்கள் வரவுக்குள், உங்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவைகள் போக, சேமிப்பு போக, மீதமுள்ளதை வைத்து, கடனில்லாமல் செலவு செய்ய பழகுங்கள். அப்போது தான், வரவையும், முதலீட்டையும் பெருக்கும் வழிகளை யோசிக்க, நேரமும், மனமும் இருக்கும்!
டாக்டர் ஆர். கார்த்திகேயன்
கட்டுரையாளர், உளவியல் மற்றும் நிர்வாக ஆலோசகர்
gemba.karthikeyan@gmail.com
