PUBLISHED ON : ஜன 07, 2018

அலட்சியம் ஆபத்தில் முடியும்!
மாதவிடாய் பிரச்னைகள், பெண்களுக்கு எல்லா வயதிலும் வருகிறது என்றாலும், பெரும்பாலான பெண்களுக்கு, 40 வயதிற்கு மேல் மாதவிடாய் பிரச்னைகள் இருக்கின்றன. அதிகப்படியான உதிரப்போக்கு, அதிக நாட்கள் நீடிப்பது, மாதவிடாய் நாட்கள் முடிந்த பின், உதிரப் போக்கு இருப்பது போன்றவை, இந்த வயதில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள். 'மெனோபாஸ்' எனப்படும், மாதவிடாய் காலம் முடிந்த பின்னும் உதிரப்போக்கு இருப்பது மற்றொரு பிரச்னை. இந்த பிரச்னைகள் எல்லாம் வயதானதால் ஏற்பட்ட பிரச்னைகள் இல்லை; எனவே, இவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது.நாற்பது வயதிற்கு மேல் ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளுக்கு என்ன காரணம் என பார்த்தால், கர்ப்பப்பை வாயில் ஏதேனும் பிரச்னைகள் இருக்கலாம் அல்லது ஹார்மோன் மாற்றத்தால் ஏற்பட்ட பிரச்னையாக இருக்கலாம். மாதவிடாய் பிரச்னைகள் இருந்தால், உடனடியாக டாக்டரின் ஆலோசனைகளைப் பெறுவது அவசியம். கர்ப்பப்பை வாயின் வெளி, உள் பகுதியை பரிசோதிக்க வேண்டும். இதற்கு, 'பேப்ஸ்மியர்' பரிசோதனை தேவைப்படலாம். அல்ட்ரா சவுண்ட் கருவி மூலம் கர்ப்பப்பை, கருக்குழாய், இவற்றின் தன்மையை முழுமையாக அறிய முடியும். தைராய்டு மற்றும் பிற ஹார்மோன் மற்றும் முழுமையான ரத்த பரிசோதனை செய்து, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை உட்பட, ரத்தத்தில் வேறு ஏதேனும் பிரச்னை கள் உள்ளதா என்பதை, தெரிந்து கொள்ள வேண்டும். அதிக உடல் பருமன் அல்லது நீரிழிவு பிரச்னை உள்ள பெண்களுக்கு, கர்ப்பப்பை சுவர்களின் நிலையையும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். ரத்தசோகை, தைராய்டு பிரச்னை என்றால், மாத்திரையிலேயே சரி செய்யலாம்; வேறு பிரச்னைகள் என்றால், மாதவிடாய் சமயத்தில் அல்லது மாதம் மூன்று வாரங்கள் என்ற தேவைக்கேற்ப மாத்திரைகள் சாப்பிட வேண்டும். ஹார்மோன் பிரச்னைகளுக்கு அதற்கு ஏற்ப சிகிச்சை தேவை. வெகு சில பெண்களுக்கு மட்டும் கர்ப்பப்பை, கருக்குழாய் அறுவை சிகிச்சையில் நீக்க வேண்டி வரும். மாதவிடாய் பிரச்னைகளைப் பற்றி, வயதானால் இதெல்லாம் வரும் என, பெண்கள் நினைக்கின்றனர்; இது தவறான அபிப்ராயம். மாதவிடாய் கோளாறுகளை அலட்சியப்படுத்தக் கூடாது. ஆரம்ப நிலையிலேயே மருத்துவ ஆலோசனை பெறாவிட்டால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனால் ஏற்படும் உடல் பிரச்னைகளை, ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்.
டாக்டர் அ.தமிழ் செல்வி, மகப்பேறு மற்றும் சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர். சென்னை.atamilselviurogyn@gmail.com

