தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்


PUBLISHED ON : ஜூன் 15, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

'ஈட்டிங் டிஸ்சார்டர்' (Eating Disorder) என்றால் என்ன?

மனப் பிரச்னைகளை உணவின் மூலம் வெளிப்படுத்துவது, 'ஈட்டிங் டிஸ்சார்டர்!' அதாவது, குறைந்த நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது, நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது அல்லது குறைவாகச் சாப்பிடுவது, அதிகமாக சாப்பிட்டு வாந்தியெடுப்பது போன்றவை.

இதுபோல ஒரு நாள் இருந்தாலும் மனப் பிரச்னைதானா?

என்றாவது ஒரு நாள் அதீத மகிழ்ச்சியில் இருக்கும்போது, அதிகம் சாப்பிடுவது அல்லது ஏதோ காரணத்தினால், ஒரு நாள் சாப்பிடாமல் இருப்பது ஈட்டிங் டிஸ்சார்டர் ஆகாது. தொடர்ந்து, இரண்டு வாரங்கள் ஒரே மனநிலையில் இருந்தால் மட்டுமே இந்த வகையைச் சேரும்.

ஈட்டிங் டிஸ்சார்டர் வரக் காரணம்?

மனப்பதற்றம், மனச் சோர்வு, வருத்தம், பயம் போன்ற மனப் பிரச்னைகளால் தான், ஈட்டிங் டிஸ்சார்டர் வருகிறது.

ஈட்டிங் டிஸ்சார்டரில் வகைகள் உள்ளதா?

'அனோரெக்ஸியா நெர்வோசா, புலிமியா நெர்வோசா' என, இரு வகைகள் உள்ளன.

'அனோரெக்ஸியா'வின் அறிகுறிகள் என்னென்ன?

உடல் எடை கூடிவிடுமோ என்ற பயத்தில் உணவைத் தவிர்ப்பது, உடல் எடையை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டே இருப்பது,

எப்போதும் ஒருவிதப் பரபரப்புடன் இருப்பது, அடிக்கடி உடற்பயிற்சி செய்வது, தனிமைப்படுத்திக் கொள்வது இதன் தீவிர அறிகுறிகள்.

'புலிமியா நெர்வோசா'வின் அறிகுறிகள்?

உடல் எடை அதிகரிக்கும் என்ற பயத்தில், இரண்டு, மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருப்பது, சாப்பிடாமல் உடலைக் கெடுக்கிறோமோ என்ற எண்ணத்தில் அதிகமாக சாப்பிடுவது, சாப்பிட்டவுடன் நிறைய நேரம் உடற்பயிற்சிகள் செய்வது, உடல் எடை, தோற்றம் பற்றி அதீத கவலை போன்றவை.

அனோரெக்ஸியாவால் ஏற்படும் உடல் பாதிப்புகள் என்ன?

சரியாக சாப்பிடாததால் போதுமான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல், ரத்தசோகை வரலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காசநோய் வரலாம்.

ஈட்டிங் டிஸ்சார்டரின் பாதிப்பு உள்ளவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

பொதுவாக, தங்கள் தோற்றம் பற்றிய தாழ்வு மனப்பான்மை இருக்கும். உணவுப் பழக்கம் சீராக இருக்காது. பார்ப்பதற்கு எடை கூடி அசிங்கமாக இருப்பதாக உணர்வதால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தயங்குவர்.

ஈட்டிங் டிஸ்சார்டர் இருந்தால் என்ன மாதிரியான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும்?

நாள்பட்ட பிரச்னையாக இது மாறும்போது, ஏற்கனவே சொன்னது போல ரத்த சோகை வரும். தோல் மற்றும் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படும். ஜீரண மண்டலப் பிரச்னைகள், தைராய்டு பிரச்னை, எலும்பு அடர்த்தி குறைதல், மாதவிடாய் சுழற்சி பாதிப்பு உட்பட பல பிரச்னைகள் வரலாம்.

ஈட்டிங் டிஸ்சார்டருக்கு தீர்வு என்ன?

இந்த பாதிப்பிற்கு மருந்து மாத்திரைகளை விட, மனநல ஆலோசனைகள் மூலம், உணவுப் பழக்கத்தை முறைப்படுத்துவது இதற்கான சிறந்த தீர்வு. ஒல்லியாக இருப்பது, குண்டாக இருப்பது முக்கியமில்லை ஆரோக்கியமாக இருப்பதே முக்கியம் என்பதை உணர வைத்து, அவர்களின் தோற்றம் பற்றிய தாழ்வு மனப்பான்மையைப் போக்க வேண்டும்.

-த.ரவி சாமுவேல்,

மனநல ஆலோசகர்.

தி.நகர், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us