பத்து கேள்விகள் பளிச் பதில்கள் - டாக்டர்.ஆர்.எம்.பூபதி, நரம்பியல் நிபுணர், அரசு பல்நோக்கு மருத்துவமனை
பத்து கேள்விகள் பளிச் பதில்கள் - டாக்டர்.ஆர்.எம்.பூபதி, நரம்பியல் நிபுணர், அரசு பல்நோக்கு மருத்துவமனை
PUBLISHED ON : நவ 12, 2014
1. மனப்பிரச்னைகள் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை அழைத்து வருமா?நரம்பு சம்பந்தப்பட்ட நோய் வேறு. மனம் சம்பந்தப்பட்ட நோய் வேறு. மனம் சார்ந்த பிரச்னைகளின் மூலம் நரம்பு கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், நரம்பு கோளாறு மூலம், மனப்பிரச்னைகளுக்கு வாய்ப்புண்டு.
2. தண்டுவட பகுதி கட்டிகள், நரம்பு மண்டலத்தை பாதிக்கும்தானே?கட்டாயம் பாதிக்கும். கழுத்துப்பகுதியில் உள்ள தண்டுவடத்தின் மீது கட்டிகள் வந்தாலும், அழுத்தம் ஏற்பட்டாலும், கை, கால்கள் செயல் இழக்கக்கூடும்.
3. தண்டுவட மரப்பு நோய் (multiple sclerosis), பெண்களைத்தான் அதிகம் தாக்குமாமே?அப்படிச் சொல்ல முடியாது. இந்தநோயைப் பொறுத்தவரை இருபாலருக்கும் பாதிப்புண்டு.
4. வலிப்பு நோய் என்பது, மூளை நரம்பு மண்டல பாதிப்பின் அறிகுறியா?உண்மைதான்! ஆனால், வலிப்பு நோய்க்கு தலை காயம், மூளையில் கட்டி, மூளை காய்ச்சல், மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தடை இவைகளும் காரணங்கள்!
5. 'ஆட்டிசம்' நோய்க்கும், மூளை நரம்பு பிரச்னைக்குமுள்ள தொடர்பு?வளர்ச்சி குறைபாடு, அதீத சுறுசுறுப்பு, கவனக்குறைவு, செயல்திறனில் குறைபாடு இவைகள் ஆட்டிசத்திற்கான அறிகுறிகள். அமைப்பு ரீதியாக மூளை பாதிக்கப்பட்டும், மாறுபட்ட செயல்திறன் கொண்டு இருப்பதும் இதன் பின்புலங்கள்!
6. 'மூளைக்காய்ச்சல் தரும் மிகப்பெரும் சாபம் வலிப்பு நோய்' - சரியா?வலிப்பு மட்டுமல்ல...சரியாக கவனிக்காவிட்டால் பக்கவாதம், கண் பார்வை இழப்பு, தலைவலி, மூளையில் நீர் கோர்த்தல், மூளைச்சிதைவு என, மூளைக்காய்ச்சல் தரும் சாபங்கள் அதிகம்.
7. அதீத பதற்றம் (tension), நரம்பு நோய்களுக்கு காரணமாகுமா?நிச்சயமாக! தலைவலி, தூக்கமின்மை, கைகால் நடுக்கம் அனைத்திற்கும் இந்த பதற்றமும் ஒரு காரணம்.
8. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கான அறிகுறிகள்?கண்பார்வை இழப்பு, பக்கவாதம், வலிப்பு, நடுக்கம், ஞாபகமறதி, பேச்சில் மாற்றம், தூக்கமின்மை, கை கால் வலி, எரிச்சல், கை கால்கள் மரத்துப்போதல் மற்றும் பல!
9. வைட்டமின் - பி1 குறைபாட்டினால் வரும் பெரிபெரி, பக்கவாதத்திற்கு காரணமாகுமா?புற நரம்பு மண்டல தேய்மானத்தால், அதீத களைப்பையும், சோம்பலையும் தந்து, உடல் இயக்கத்தை பாதிப்புக்குள்ளாக்குவது பெரிபெரி நோய். இதற்கும் பக்கவாதத்திற்கும் தொடர்பில்லை.
10. நரம்பியல் நோய்களுக்கு நீரிழிவு காரணமாகுமா?99 சதவீதம் நரம்பு சார்ந்த நோய்களுக்கு, நீரிழிவால் ஏற்படும் பக்க விளைவுகள்தான் காரணம். உடலின் முக்கிய உறுப்புகளுக்குச் செல்லும் நரம்புகள் பழுதாகும் போது, உடலின் செயல்பாடு முடங்கும் அபாயம் உண்டு.

