PUBLISHED ON : ஜன 14, 2015

1மூல நோய் என்பது என்ன?
மலக்குடலின் அடிப்பகுதியில் ஏற்படும் ரத்த நாள வீக்கமே மூல நோய். இது உள்மூலம், வெளிமூலம் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. உள் மூலம் என்பது, ஆசன வாயின் உட்பகுதியில் ஏற்படும். வெளிமூலம், ஆசன வாயின் வெளிப்பகுதியில் ஏற்படும். வெளிமூலத்தை விரல்களால் தொட்டு உணர முடியும்; உள் மூலத்தை அறிகுறிகள் மூலமாகவும், மருத்துவரின் உதவியுடன் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
2மூல நோய் வர காரணம்?
நாள்பட்ட மலச்சிக்கல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், மலம் கழிக்க கஷ்டப்படுதல், நீண்டநாள் வயிற்றுப்போக்கு, ஆசன வாயில் ஏற்படும் நோய்த் தொற்றுகள், அதிக காரம், மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது போன்ற காரணங்களால் மலக்குடல் அழுத்தத்திற்கு ஆளாகி மூல நோய் வருகிறது.
3மூல நோயின் அறிகுறிகள்?
ஆசன வாயில் அரிப்பு ஏற்படுதல், வலியுடன் மலம் கழித்தல், மலத்துடன் இரத்தம் கலந்து வருதல், மலம் கழிக்கும் போதும், கழித்த பிறகும் தாங்க முடியாத எரிச்சல் மற்றும் வலி எற்படுதல், ஆசன வாய்ப்பகுதியில் பட்டாணி அளவிற்கோ அல்லது அதற்கு மேலோ மலக்குடல், முளை போல் வெளித்தள்ளுதல் போன்றவையே.
4மூலநோய் வராமல் தடுக்கும் வழிகள்?
மலம் கழிக்கும் உணர்வு ஏற்பட்டவுடன் முடிந்த அளவு சீக்கிரமாக மலம் கழித்து விட வேண்டும். அதிகபடியான காரம், மசாலா உணவுகளை சாப்பிடக்கூடாது. அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். நார்ச் சத்துள்ள உணவு பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வதை தவிர்க்க வேண்டும்.
5சித்த மருத்துவத்தில் மூலநோய்க்கு வீட்டிலேயே வைத்திய முறைகள் உண்டா?
தினம் ஒரு பழம் சாப்பிடுதல் என்ற பழக்கம் மூல நோய்க்கு நண்பன். கருணைக் கிழங்கு, அவரைக்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பிரண்டை, இஞ்சி போன்ற மருத்துவ குணம் உள்ள பொருட்களால் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் நம்மை நெருங்காது.
6மூலநோய் தாக்கும் என்பதற்கு ஏேதனும் வயது வரம்பு உண்டா?
பெரியவர்கள் மட்டுமல்லாது, இன்றைய வாழ்க்கைச் சூழலில் இளம் வயதினரையும், குழந்தைகளையும் கூட தாக்குகிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே காலை எழுந்தவுடன் மலம் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டால் இந்தப் பிரச்னை வரவே வராது. சில நேரங்களில், தாய் தந்தையருக்கு இந்த நோய் இருந்தால், அப்பெற்றோரின் உடல் வாகைப் பொறுத்து அவர்களின் சந்ததியினருக்கும் இந்த நோய் வரலாம்.
7மூலநோயை என்னென்ன பரிசோதனைகளின் மூலம் கண்டறியலாம்?
வெளி மூலத்தை மருத்துவர்கள் பார்த்தே கண்டறிந்து விடுவர். உள் மூலத்தை 'அனோஸ்கோபி' மற்றும், 'கோலோனாஸ்கோபி' என்கிற கருவிகளில், சிறு வீடியோ கேமரா பொருத்திய குழாயை, ஆசன வாயினுள் செலுத்தி, தசைச் சுவர்களின் பாதிப்புகளை பார்த்து, மருத்துவர்கள் கண்டறிந்து விடுவர்.
8கர்ப்பிணிகளை மூலநோய் தாக்குமாமே!
பெண்கள் கருத்தரித்துள்ள போது, குழந்தை வளர வளர கீழ்க்குடல் அழுத்தப்படும். அப்போது, ஒரு சிலருக்கு வயிறு பெருத்து பெரிதாகி, இந்த நோய் உண்டாவதும் உண்டு. சில வேளைகளில், கருத்தரித்துள்ள பெண்களுக்கு மலச் சிக்கல் ஏற்படும். அதனாலும் மூலநோய் தாக்கும்.
9மூலநோய் ஏற்படுத்தும் பாதிப்புகள்?
மூலநோயானது மனரீதியாக பாதிப்படையச் செய்யும். மனம் தளரும், அடிக்கடி கோபம் கொள்ளச் செய்யும். தேவையில்லாமல் எதற்கெடுத்தாலும் சீறி விழச் செய்யும். இது போன்ற உணர்வுகள் மூலநோய் உண்டானவர்களுக்கு ஆரம்பக் காலத்தில் இருக்கும்.
10மூலநோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்?
காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகள், கிழங்குகளில் கருணைக் கிழங்கைத் தவிர, மற்ற கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும், பீன்ஸ்,
பருப்பு வகைகள், பேரிக்காய், பசலைக்கீரை வாழைப்பழம், நெய்பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.
- பெர்னாண்டஸ் சேவியர்,
சித்த மருத்துவர்.

