PUBLISHED ON : மே 05, 2015

1பல்லின் அமைப்பு எப்படி இருக்கும்?
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களால் ஆனது, பல். பல்லின் மேற்பகுதிக்கு பெயர், 'கிரவுன்.' பல் ஈறுக்குள் புதைந்திருக்கும் பகுதி வேர். ஈறின் அடிப் பாகத்திலிருந்து, ஒவ்வொரு பல்லுக்கும் நடுவில் ரத்தக் குழாய்களும், நரம்புகளும் செல்கின்றன.
அந்த நரம்புகளும், ரத்தக் குழாய்களும் உள்ள பகுதிக்கு, 'பற்கூழ்' என்று பெயர். அதைச் சுற்றி, 'டென்டின்' எனும் பகுதியும் வெளியே வெள்ளை நிறத்தில், பல்லுக்கு ஓர் உறை போல் அமைந்திருக்கும், 'எனாமல்' எனும் கடினமான பகுதியும் உள்ளன.
2 பல்லில் வகைகள் உள்ளனவா?
மனிதனுக்கு, மொத்தம் 32 நிரந்தர பற்கள் இருக்கின்றன. மேல்தாடையில் 16, கீழ்தாடையில் 16, என்ற எண்ணிக்கையில் இருக்கும். ஒவ்வொரு வரிசையிலும், நடுவிலிருக்கும் நான்கு பற்கள் வெட்டுப் பற்கள். பக்கத்துக்கு ஒன்றாக சற்றே கூராக இருப்பவை கோரைப் பற்கள். கோரைப் பற்களுக்கு அடுத்திருப்பவை, கடைவாய்ப் பற்கள்.
3 பல் சொத்தை ஏன் ஏற்படுகிறது?
பற்களில் ஒட்டக்கூடிய இனிப்புகள், பிஸ்கட்டுகள், சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம், கேக், போன்றவற்றிலுள்ள சர்க்கரைப் பொருட்கள், பல் இடுக்குகளில் ஒட்டிக் கொள்ளும்போது, பாக்டீரியாக்கள் வினை புரிந்து, 'லேக்டிக்' அமிலத்தை சுரந்து எனாமலை அரித்து சிதைக்கின்றன. அதனால் பல் சொத்தை ஏற்படுகிறது.
4 பல் சொத்தையை கவனிக்காமல் விட்டால் என்னாகும்?
பல் சொத்தையை, துவக்கத்தில் கவனிக்காமல் விட்டால், எனாமலை அடுத்துள்ள 'டென்டின்' பகுதிக்கும் சொத்தை பரவிவிடும். அப்போது பல்லில் கறுப்பு புள்ளி தெரியும். அங்கு குழிவிழும். வலி அல்லது கூச்சம் ஏற்படும் அந்த நிலைமையிலும் சிகிச்சை பெறாவிட்டால், நோய்த்தொற்று பல்லின் வேர் வரை பரவி சீழ் கோர்த்து வீங்கிவிடும்.
5 பல் சொத்தைக்கான அறிகுறி என்னென்ன?
சொத்தைப் பல்லின் ஆரம்ப அறிகுறி பற்கூச்சம். குறிப்பாக, இனிப்பான உணவுகள் மற்றும் குளிர்ச்சியான, சூடான பொருட்கள் சாப்பிட்டால், பல்லில் கூச்சம் ஏற்படும். பல் வலி, ஈறுகளில் வலி இருக்கும்.
6 பல் சொத்தைக்கு எந்தவிதமான சிகிச்சை உள்ளது?
பல்லில், சொத்தை எந்த அளவிற்கு பரவியுள்ளது என்பதை, பல் 'எக்ஸ்-ரே' மூலம் கண்டறிந்து, 'எனாமல்' மற்றும் 'டென்டின்' வரைக்கும், சொத்தை இருந்தால், 'பில்லிங்' எனப்படும், நிரப்புதல் சிகிச்சை போதுமானது. பற்கூழ் வரை, சொத்தை பரவியிருந்தால், வேர் சிகிச்சை எனப்படும், 'ரூட் கெனால்' சிகிச்சை செய்ய வேண்டும்.
7 ஈறுகளில் வீக்கம் ஏற்படுவது ஏன்?
ஈறுகள், வலுவாக இருந்தால்தான் பற்கள் விழாமல் இருக்கும். வாய் மற்றும் பற்களை சுத்தமாக பராமரிக்காமல் இருந்தாலும், உணவு துகள்கள் தங்கினாலும், குச்சி, குண்டூசி போன்றவற்றால் பல் குத்தப்பட்டாலும், கிருமித் தொற்று ஏற்பட்டு, ஈறுகள் வீங்கி வலிக்கும். பல் துலக்கும் போது, ஈறுகளிலிருந்து ரத்தம் கசிந்து, வாய் துர்நாற்றம் ஏற்படும். இதைத் தவிர பல்லுக்குள் உண்டாகும் சீழ், ஈறு வழியாக வெளியேறி வீங்கமாக தென்படலாம்.
8 பல் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
ஆறு மாதங்களுக்குள் செயற்கை பல் கட்டிவிட வேண்டும். அப்போது தான், அருகிலிருக்கும் பற்கள், பலம் இழக்காமல் இருக்கும்.
9 'இம்பிளான்ட்' சிகிச்சை என்றால் என்ன?
செயற்கையாக, பல் கட்டும் முறைக்கு, 'இம்பிளான்ட்' சிகிச்சை என்று பெயர். 'இம்பிளான்ட்'டில், அச்சு அசலாக இயற்கை பல் போலவே உள்ள செராமிக் பற்களை பொருத்துவர்.
10 பற்களை எப்படி பாதுகாப்பது?
சரியான பற்பசைகளின் மூலம் மட்டுமே, பற்களை துலக்க வேண்டும். கரி, உப்பு, மண் போன்றவற்றில் பல் துலக்க கூடாது. தினமும் ஒரு கேரட், வெள்ளரி சாப்பிட்டால், பல் சுத்தமடைந்து நலமுடன் இருக்கும். தினமும் பால் அருந்தினால், அதிலுள்ள கால்சியம், பற்களை பாதுகாக்கும். தினமும் காலை, இரவு என, இரண்டு வேளையும் பல் துலக்க வேண்டும்.
- அ.சுப்பையா
பேராசிரியர், வேர் சிகிச்சை நிபுணர்.
ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவமனை, சென்னை.98401 97437.