sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

/

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : டிச 09, 2015

Google News

PUBLISHED ON : டிச 09, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1மழைக் காலத்தில் பரவும் நோய்கள் என்னென்ன?

வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, டைபாய்டு, மஞ்சள்காமாலை என, பல தொற்றுநோய்கள் உருவாகும்.

2மழைக் காலத்தில் நோய்கள் அதிகம் பரவுவது ஏன்?

பருவநிலை மாறும்போது, சாதாரணமாக இருந்த பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள், வீரியம் பெற்று தாக்கத் தயாராகின்றன. மழையில் நனையும்போது இந்தக் கிருமிகள் நமக்குப் பரவப் பொருத்தமான சூழல் உருவாகிறது. அப்போது ஊட்டச்சத்து குறைந்தோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.

3 வைரஸ் காய்ச்சல் ஏன் பரவுகிறது?

மழைக் காலத்தில் பரவுகிற காய்ச்சல்களில் முதன்மையானது, 'புளூ' காய்ச்சல். இது ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. நோயாளி தும்மும்போதும், இருமும்போதும் மூக்கைச் சிந்தும்போதும், இந்தக் கிருமி சளியோடு வெளியேறி, அடுத்தவர்களுக்கும் பரவுகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கை கால்வலி, தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல், தொண்டை வலி போன்றவை இதன் அறிகுறிகள்.

4மழைக் காலத்தில் வயிற்றுப்போக்கு, காலரா எப்படி உருவாகின்றன?

மாசடைந்த குடிநீர், அசுத்த உணவு மூலம், 'ரோட்டா' வைரஸ்கள் நமக்குப் பரவுவதால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. அதேபோல் பாக்டீரியாக்கள் மூலம், காலரா ஏற்படுகிறது. ஈக்களும், எறும்புகளும் இந்தக் கிருமிகளைப் பரப்புகின்றன.

5 மழைக் காலத்தில் வாந்திபேதி வரக் காரணம் என்ன?

அமீபா, சிகெல்லா, ஜியார்டியா போன்ற கிருமிகள் நம்மைப் பாதிக்கும்போது வாந்திபேதி வரும். தெருக்களில், திறந்தவெளிகளில், குளத்தின் ஓரங்களில் மலம் கழிக்கும்போது மலத்தில் உள்ள கிருமிகளின் முட்டைகள், மழைக் காலத்தில் சாக்கடைநீர், குடிநீரில் கலந்து தொற்றி, வாந்திபேதி ஏற்படும்.

6மஞ்சள் காமாலை வரக் காரணம் என்ன?

குடிநீர், உணவு மாசு மூலம் ஹெபடைடிஸ்- 'ஏ' வைரஸ்கள் தாக்குதலால், மஞ்சள் காமாலை வரும். காய்ச்சலுடன் பசியின்மையே முதல் அறிகுறி. அதோடு வயிற்றுவலி, வாந்தி, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போவது, கண் மஞ்சள் நிறத்தில் காணப்படுவது போன்றவை இதன் அறிகுறிகள்.



7மழைக் காலத்தில் டைபாய்டு காய்ச்சல் தாக்குமா?


'சால்மோனெல்லா டைபை' எனும் பாக்டீரியாவால் இது வருகிறது. இந்தக் கிருமிகளும் அசுத்தமான குடிநீர், உணவு மூலம்தான் பரவுகின்றன. முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலியுடன் நோய் துவங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும்.

8 எலி காய்ச்சல் வருவது எப்படி?

மழைக் காலத்தில் வீட்டைச் சுற்றிலும் தெருக்களிலும் தண்ணீர் தேங்கும்போது, எலி, பெருச்சாளி, மூஞ்செலி போன்றவற்றின் சிறுநீர்க் கழிவும் அதில் கலக்கும். அந்தக் கழிவுகளில் 'லெப்டோஸ்பைரா' எனும் கிருமிகள் இருந்தால் எலிக் காய்ச்சல் வரும்.

9 கொசுவால் என்னென்ன நோய்கள் ஏற்படும்?

தெருவில் தண்ணீர் தேங்குவதால் கொசுக்களின் ஆதிக்கம் பெருகுகிறது. அப்போது மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்றவை ஏற்படுகின்றன. விட்டுவிட்டுக் குளிர்க் காய்ச்சல் வந்தால் அது மலேரியாவாக இருக்கலாம்.

10 இந்த நோய்கள் அதிகம் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

வீட்டைச் சுற்றி மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்க விடக்கூடாது. கழிவுநீர், குடிநீர் பாதைகளில் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். சமைப்பதற்கு முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும். முடிந்தளவு வெளியிடங்களில், சமைக்காத உணவுப் பொருட்களான சாலட், பழச்சாறு, தயிர் பச்சடி போன்றவற்றை சாப்பிடக் கூடாது. காரணம், அதில் காய்ச்சாத தண்ணீர் கலப்பதால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. பயன்படுத்திய 'டயபர், சானிடரி நாப்கின்'களை, கவனமாகக் குப்பை தொட்டியில் போட வேண்டும்.

- கே.ஆர்.விஜய் சக்ரவர்த்தி,

பொது மருத்துவ நிபுணர். தி.நகர், சென்னை.






      Dinamalar
      Follow us